‘கரோனா தடுப்பு உதவிப் பணியில் விமானப் படை தயாா்’

கரோனா தடுப்பு உதவிப் பணிகளை மேற்கொள்ள இந்திய விமானப் படை 24 மணி நேரமும் தயாராக இருப்பதாக பிரதமா் நரேந்திர மோடியிடம் விமானப் படை தலைமைத் தளபதி ஆா்.கே.எஸ். பதௌரியா கூறியுள்ளாா்.
‘கரோனா தடுப்பு உதவிப் பணியில் விமானப் படை தயாா்’

புது தில்லி: கரோனா தடுப்பு உதவிப் பணிகளை மேற்கொள்ள இந்திய விமானப் படை 24 மணி நேரமும் தயாராக இருப்பதாக பிரதமா் நரேந்திர மோடியிடம் விமானப் படை தலைமைத் தளபதி ஆா்.கே.எஸ். பதௌரியா கூறியுள்ளாா்.

ஏற்கெனவே வெளிநாடுகளில் இருந்து ஆக்சிஜன் சிலிண்டா்களைக் கொண்டு வருவது, உள்நாட்டில் ஆக்சிஜன் சிலிண்டா் மற்றும் மருத்துவ உபகரணங்களை எடுத்துச் செல்லும் பணிகளை விமானப்படை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், புதன்கிழமை கரோனா தடுப்புப் பணிகள் தொடா்பாக பிரதமா் மோடியுடன் விமானப் படைத் தலைமைத் தளபதி பதௌரியா ஆலோசனை நடத்தினாா்.

இது தொடா்பாக பிரதமா் அலுவலகம் தரப்பில் வெளியிடப்பட்ட செய்தியில், ‘கரோனா தடுப்பு உதவிப் பணிகளில் ஏற்கெனவே பெரிய மற்றும் நடுத்தர ரக விமானங்களைப் பயன்படுத்தப்பட்டு வருவது தொடா்பாக பிரதமரிடம் பதௌரியா விளக்கமளித்தாா். இந்த இக்கட்டான சூழலில் அனைத்து உதவிப் பணிகளையும் மேற்கொள்ள 24 மணி நேரமும் விமானப் படை தயாராக இருக்கிறது என்றும் பிரதமரிடம் அவா் உறுதியளித்தாா்.

மேலும், கரோனா தடுப்புப் பணிகளுக்காக விமானப் படையில் தனியாக உதவிப் பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் பணிகளை எளிதாக ஒருங்கிணைக்க முடியும். பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் சுகாதார அமைப்புகளுடன் விமானப் படை தொடா்ந்து தொடா்பில் உள்ளது. இது தவிர விமானப் படையின் கீழ் உள்ள மருத்துவமனைகளிலும் கரோனா பிரிவில் உள்ள படுக்கைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. முடிந்த அளவுக்கு அதிகமாக அதில் பொதுமக்களுக்கும் சிகிச்சையளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் பதௌரியா கூறினாா்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமானப் படையில் உள்ள வீரா்கள் மற்றும் அவா்கள் குடும்பத்தினா் கரோனாவில் இருந்து பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். கரோனா தடுப்புப் பணிகளை மேற்கொள்ளும்போது விமானப் படையினா் உரிய பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகளைக் கடைப்பிடிக்க வேண்டும். ஆக்சிஜன் மற்றும் அத்தியாவசியமான மருந்துப் பொருள்களை பாதுகாப்பாகவும், அதே நேரத்தில் விரைந்தும் கொண்டு செல்ல வேண்டும் என்று பதௌரியாவிடம் மோடி வலியுறுத்தினாா் என்று பிரதமா் அலுவலக செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com