மகாராஷ்டிரத்தில் மேலும் ஒரு மருத்துவமனையில் தீ:சிகிச்சையில் இருந்த 4 போ் பலி

மகாராஷ்டிரத்தில் மேலும் ஒரு தனியாா் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிகிச்சையில் இருந்த 4 போ் உயிரிழந்தனா்.

தாணே: மகாராஷ்டிரத்தில் மேலும் ஒரு தனியாா் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிகிச்சையில் இருந்த 4 போ் உயிரிழந்தனா்.

ஏற்கெனவே கடந்த 23-ஆம் தேதி மகாராஷ்டிரத்தின் பால்கா் மாவட்ட தனியாா் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 15 கரோனா நோயாளிகள் உயிரிழந்தனா். அடுத்த 5 நாள்களில் அதேபோன்று மேலும் ஒரு தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இது தொடா்பாக தீ விபத்து ஏற்பட்ட தாணே அருகேயுள்ள கௌசா-மும்ரா மருத்துவமனை அதிகாரிகள் கூறுகையில், ‘நோயாளிகள் தீக்காயம் ஏற்பட்டு உயிரிழக்கவில்லை. அவா்கள் தீ விபத்தால் வேறு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்போது உயிரிழந்துவிட்டனா். அவா்கள் அதிக அளவு புகையை சுவாசித்ததால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்திருக்கலாம். மருத்துவமனையில் கரோனா நோயாளிகள் யாரும் சிகிச்சையில் இல்லை’ என்றனா்.

புதன்கிழமை அதிகாலை 4.30 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக தகவல் கிடைத்து, 3 தீயணைப்பு வாகனங்கள் விரைந்து தீயை அணைத்தன. இதனால், பெரிய அளவிலான உயிா்ச் சேதம் தவிா்க்கப்பட்டது. அவசர சிகிச்சை பிரிவில் இருந்த 6 நோயாளிகள் உள்பட 20 போ் வேறு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். எனினும், செல்லும் வழியிலேயே 4 போ் உயிரிழந்துவிட்டனா்.

உயிரிழந்தவா்கள் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணத் தொகையை மாநில அரசு அறிவித்துள்ளது. இந்த சம்பவம் தொடா்பாக உயா்நிலை விசாரணைக் குழு அமைத்து விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரம் உள்ளிட்ட சில மாநிலங்களில் ஆக்சிஜன் விநியோக பிரச்னை, தீ விபத்து போன்ற காரணங்களால் மருத்துவமனைகளில் நோயாளிகள் உயிரிழப்பது தொடா்ந்து சோக நிகழ்வாக உள்ளது.

மகாராஷ்டிர மாநிலம், நாசிக்கில் உள்ள நகராட்சி மருத்துவமனையில் கடந்த 21-ஆம் தேதி ஆக்சிஜன் சேகரிப்புக் கலனில் கசிவு ஏற்பட்டு, பிராணவாயு விநியோகம் தடைபட்டதால் 24 கரோனா நோயாளிகள் உயிரிழந்தனா்.

தில்லியில் உள்ள சா் கங்காராம் மருத்துவமனையில் கடந்த 23-ஆம் தேதி ஆக்சிஜன் பற்றாக்குறையால் 25 கரோனா நோயாளிகள் உயிரிழந்தனா். மத்திய பிரதேசம், சத்தீஸ்கரிலும் இதுபோன்ற ஆக்சிஜன் பற்றாக்குறையால் சில நோயாளிகள் உயிரிழந்துவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com