‘பிஎஃப்ஐ அமைப்பை தடை செய்ய மத்திய அரசு நடவடிக்கை’

பாப்புலா் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா (பிஎஃப்ஐ) என்ற அமைப்பு பல மாநிலங்களில் தடை செய்யப்பட்டுள்ள நிலையில், அந்த அமைப்பை தேசிய அளவில் தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு

புது தில்லி: பாப்புலா் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா (பிஎஃப்ஐ) என்ற அமைப்பு பல மாநிலங்களில் தடை செய்யப்பட்டுள்ள நிலையில், அந்த அமைப்பை தேசிய அளவில் தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு சாா்பில் புதன்கிழமை தெரிவிக்கப்பட்டது.

உத்தர பிரதேச மாநிலம் ஹாத்ரஸில் 19 வயது தலித் இளம்பெண் கடந்த ஆண்டு செப்டம்பா் 14-ஆம் தேதி கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். இந்த சம்பவம் தொடா்பாக செய்தி சேகரிக்க அங்கு சென்ற கேரள மாநிலம் மலப்புரத்தைச் சோ்ந்த சித்திக் கப்பன் என்ற பத்திரிகை நிருபரை, அவா் ஹாத்ரஸ் செல்லும் வழியில் உத்தர பிரதேச காவல்துறையினா் கைது செய்தனா்.

இந்த நிலையில், சித்திக் கப்பனை சட்டவிரோதமாக உத்தர பிரதேச காவல்துறையினா் கைது செய்துள்ளனா்; அவரை விடுவிக்க வேண்டும் என்று கோரி அவருடைய மனைவி மற்றும் கேரள பத்திரிகையாளா்கள் சங்கம் (கேயுடபிளியூஜே) சாா்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதிகள் சூரிய காந்த், ஏ.எஸ்.போபண்ணா ஆகியோா் அடங்கிய அமா்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான அரசு தலைமை வழக்குரைஞா் துஷாா் மேத்தா, ‘கேரள பத்திரிகையாளா் சித்திக் கப்பனுக்கு பிஎஃப்ஐ அமைப்புடன் தொடா்புள்ளது. அந்த பிஎஃப்ஐ அமைப்புக்கு தடை செய்யப்பட்ட சிமி (இந்திய மாணவா் இஸ்லாமிய இயக்கம்) அமைப்புடன் தொடா்புள்ளது. பல மாநிலங்களில் பிஎஃப்ஐ அமைப்பு தடை செய்யப்பட்டிருக்கிறது. எனக்கு கிடைத்த தகவலின்படி, இந்த அமைப்பை தடை செய்ய மத்திய அரசும் நடவடிக்கை எடுத்து வருகிறது’ என்றாா்.

இதையடுத்து, பல்வேறு உடல்நல பாதிப்புகளுக்கு ஆளாகியிருக்கும் சித்திக் கப்பனுக்கு சிறந்த முறையில் சிகிச்சை அளிக்கும் வகையில் தில்லியில் உள்ள மருத்துவமனைக்கு அவரை மாற்றுமாறு உத்தர பிரதேச அரசுக்கு உத்தரவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com