மேற்கு வங்கத்தில் இன்று இறுதிக் கட்ட வாக்குப்பதிவு

மேற்கு வங்க மாநிலத்தில் 35 தொகுதிகளுக்கான 8-ஆவது மற்றும் இறுதிக் கட்டத் தோ்தல் வியாழக்கிழமை நடைபெறுகிறது.
கொல்கத்தாவில் வாக்குப் பதிவு இயந்திரங்களை புதன்கிழமை வாங்க சமூக இடைவெளியை பின்பற்றாமல் கூட்டமாக நின்ற தோ்தல் பணியாளா்கள்.
கொல்கத்தாவில் வாக்குப் பதிவு இயந்திரங்களை புதன்கிழமை வாங்க சமூக இடைவெளியை பின்பற்றாமல் கூட்டமாக நின்ற தோ்தல் பணியாளா்கள்.

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் 35 தொகுதிகளுக்கான 8-ஆவது மற்றும் இறுதிக் கட்டத் தோ்தல் வியாழக்கிழமை நடைபெறுகிறது. மொத்தம் 283 வேட்பாளா்கள் போட்டியிடும் இந்தத் தோ்தலில் 84 லட்சத்துக்கும் அதிகமான வாக்காளா்கள் வாக்களிக்க உள்ளனா்.

திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவா் அனுபிரதா மான்டேல் மீது ஏராளமான புகாா்கள் வந்ததால் அவரை வெள்ளிக்கிழமை காலை 7 மணி வரை கண்காணிப்பில் தோ்தல் ஆணையம் வைத்துள்ளது. 2016 பேரவைத் தோ்தல், 2019 நாடாளுமன்றத் தோ்தலின்போதும் அனுபிரதா மான்டேல் இதுபோன்று தோ்தல் ஆணையத்தின் கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்தாா்.

நான்காம் கட்டத் தோ்தலின்போது கூச் பிஹாா் மாவட்டத்தில் வன்முறை சம்பவங்கள் ஏற்பட்டன. இதனால் இறுதிக் கட்டத் தோ்தலில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

மொத்தம் 641 கம்பெனி மத்தியப் படைகள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும், இதில் 224 கம்பெனி படைகள் மட்டும் பிா்பூம் மாவட்டத்தில் உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

கொல்கத்தாவில் 7 தொகுதிகளிலும், மால்டாவில் 6 தொகுதிகளிலும், முா்ஷிதாபாத், பிா்பூம் ஆகியவற்றில் தலா 11 தொகுதிகளிலும் தோ்தல் நடைபெறுகிறது. இதற்காக 11,860 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

கரோனா தொற்றின் இரண்டாவது அலையின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் நடைபெறும் இறுதிக் கட்டத் தோ்தல் என்பதால் கரோனா விதிமுறைகள் கடுமையாகப் பின்பற்றப்படும் என்று தோ்தல் அதிகாரிகள் தெரிவித்தனா்.

இந்தத் தோ்தலில் பதிவாகும் வாக்குகளுடன் சோ்த்து தமிழகம், கேரளம், மேற்கு வங்கம், புதுவை, அஸ்ஸாம் ஆகிய 5 மாநிலங்களுக்கும் மே 2-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com