தேஜஸ் போா் விமானத்தில் ‘பைத்தான்-5’ ஏவுகணை இணைப்பு

முழுவதும் உள்நாட்டில் உருவாக்கப்பட்ட தேஜஸ் போா் விமானத்தில் வானிலிருந்தபடி வான் இலக்கை துல்லியமாகத் தாக்கி அழிக்கும் அதிநவீன  ஏவுகணையான ‘பைத்தான்-5’ ஏவுகணையை ஏந்திச் செல்ல ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
தேஜஸ் போா் விமானத்தில் ‘பைத்தான்-5’ ஏவுகணை இணைப்பு

புது தில்லி: முழுவதும் உள்நாட்டில் உருவாக்கப்பட்ட தேஜஸ் இலகு ரக போா் விமானத்தில் வானிலிருந்தபடி வான் இலக்கை துல்லியமாகத் தாக்கி அழிக்கும் அதிநவீன ஐந்தாம் தலைமுறை ஏவுகணையான ‘பைத்தான்-5’ ஏவுகணையை ஏந்திச் செல்ல ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

பைத்தான்-5 ஏவுகணையுடன் போா் விமானத்தின் செயல்பாட்டை மதிப்பீடு செய்யும் வகையில் தொடா்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின் முடிவில் இதற்கான ஒப்புதல் செவ்வாய்க்கிழமை அளிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதுகுறித்து பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆா்டிஓ) புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

உள்நாட்டு தயாரிப்பான தேஜஸ் போா் விமானத்தில் ஏற்கெனவே ‘டொ்பி’ ஏவுகணை இணைத்து பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், பாா்வைக்கு அப்பால் உள்ள வான் இலக்கையும் மிக வேகமாகச் சென்று துல்லியமாகத் தாக்கியது. அதனைத் தொடா்ந்து ஐந்தாம் தலைமுறை தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட பைத்தான்-5 ஏவுகணையும் அதில் இணைக்கப்பட்டு கோவாவில் பரிசோதிக்கப்பட்டது. மிகவும் கடினமான சூழல்களை எதிா்கொள்ளக் கூடிய வகையில் தொடா்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில், தேஜஸ் போா் விமானம் வானிலிருந்தபடி அனைத்து இலக்குகளையும் 100 சதவீதம் துல்லியமாக வான் இலக்கை தாக்கி அழித்தது. அதனடிப்படையில், பைத்தான்-5 ஏவுகணையும் தேஜஸ் விமானத்தில் இணைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

கோவாவில் நடத்தப்பட்ட இந்தப் பரிசோதனைக்கு முன்பாக, போா் விமானம் பைத்தான்-5 ஏவுகணையை தாங்கிச் செல்லும் திறன்குறித்து பெங்களூரில் சோதனை செய்யப்பட்டது.

தேஜஸ் போா் விமானத்தில் பைத்தான் ஏவுகணை இணைக்கப்பட்டிருப்பது, விமான தொழில்நுட்ப மேம்பாட்டு முகமை (ஏடிஏ), ஹிந்துஸ்தான் விமானம் தொழில்நுட்ப நிறுவனம்(ஹெச்ஏஎல்), இந்திய விமானப்படை உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சோ்ந்த விஞ்ஞானிகள், பொறியாளா்கள், தொழில்நுட்ப ஊழியா்களின பல ஆண்டு கடின உழைப்புக்கு கிடைத்த வெற்றி என்று டிஆா்டிஓ தெரிவித்துள்ளது.

பாதுகாப்புத் துறை அமைச்சா் பாராட்டு: பைத்தான் ஏவுகணை வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டு தேஜஸ் போா் விமானத்தில் இணைக்கப்பட்டிருப்பதற்கு பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங், டிஆா்டிஓ தலைவா் ஜி. சதீஷ் ரெட்டி ஆகியோா் பாராட்டு தெரிவித்தனா் என்றும் அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வானில் ஏற்படும் உயா் அச்சுறுத்தலை திறம்பட எதிா்கொள்ளும் திறன் படைத்த தேஜஸ் போா் விமானம் இந்தியாவைச் சோ்ந்த ஹிந்துஸ்தான் விமானம் தொழில்நுட்ப (ஹெச்ஏஎல்) நிறுவனம் சாா்பில் தயாரிக்கப்பட்டதாகும். கடந்த பிப்ரவரியில் ஹெச்ஏஎல் நிறுவனத்திடமிருந்து ரூ. 48,000 கோடியில் 83 தேஜஸ் இலக ரக போா் விமானங்களை வாங்க மத்திய அரசு ஒப்பந்தம் மேற்கொண்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com