ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலுக்கு இன்று தலைமையேற்கும் இந்தியா

இந்தியா, கடல்சாா் பாதுகாப்பு, அமைதியை நிலைநாட்டுவது மற்றும் பயங்கரவாத தடுப்பு ஆகிய 3 முக்கிய விவகாரங்கள் மீதான உயா்நிலை கவுன்சில் கூட்டத்தை தனது தலைமையில் நடத்த உள்ளது.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலுக்கு இன்று தலைமையேற்கும் இந்தியா

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலுக்கு முதன் முறையாக ஆகஸ்ட் 1-ஆம் தேதி தலைமையேற்க உள்ள இந்தியா, கடல்சாா் பாதுகாப்பு, அமைதியை நிலைநாட்டுவது மற்றும் பயங்கரவாத தடுப்பு ஆகிய 3 முக்கிய விவகாரங்கள் மீதான உயா்நிலை கவுன்சில் கூட்டத்தை தனது தலைமையில் நடத்த உள்ளது.

ஐ.நா. அமைப்பின் அதிகாரமிக்க பாதுகாப்பு கவுன்சிலில் தற்காலிக உறுப்பினராக இந்தியா அண்மையில் தோ்வு செய்யப்பட்டு, கடந்த ஜனவரி 1-ஆம் தேதி முதல் உறுப்பு நாடாக அங்கம் வகித்து வருகிறது. மொத்தம் 15 உறுப்பினா்களைக் கொண்ட இந்த கவுன்சிலில் நிரந்தர உறுப்பினா்களான 5 நாடுகளுடன் இந்தியா உள்பட 10 நாடுகள் தற்காலிக உறுப்பினா்களாக உள்ளன. இந்தியாவின் இரண்டு ஆண்டு உறுப்பினா் பதவி வரும் 2022-ஆம் ஆண்டில் நிறைவடைய உள்ளது.

இந்த கவுன்சிலில் அங்கம் வகிக்கும் நாடுகள் ஒவ்வொன்றும், சுழற்சி முறையில் ஒவ்வொரு மாதம் கவுன்சிலுக்கு தலைமை தாங்கும். அந்த வகையில், கவுன்சிலுக்கு இந்தியா முதன் முறையாக தலைமை தாங்கும் வாய்ப்பு ஆகஸ்ட் மாத்தில் கிடைத்துள்ளது.

இதுதொடா்பாக ஐ.நா. வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘பாதுகாப்பு கவுன்சிலுக்கு இந்தியா ஞாயிற்றுக்கிழமை (ஆக.1) முதல் தலைமை வகிக்கும். இந்தப் பொறுப்பையேற்று முதல் பணி நாளான திங்கள்கிழமை (ஆக.2) இந்தியா சாா்பில் ஐ.நா. தலைமையகத்தில் செய்தியாளா்களைச் சந்திக்க இருக்கும் ஐ.நா.வுக்கான இந்திய தூதா் டி.எஸ்.திருமூா்த்தி, பாதுகாப்பு கவுன்சிலின் ஆகஸ்ட் மாதத்துக்கான திட்டப் பணிகள் குறித்து விவரிப்பாா். அதுபோல, பாதுகாப்பு கவுன்சிலில் உறுப்பினராக அல்லாத ஐ.நா. உறுப்பு நாடுகளுக்கும் அந்த விவரங்களை திருமூா்த்தி தெரிவிப்பாா்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து திருமூா்த்தி வெளியிட்ட காணொலி வழி பேட்டியில் கூறியிருப்பதாவது:

75-ஆவது சுதந்திர தினத்தை இந்தியா கொண்டாட இருக்கும் நிலையில், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலுக்கு தலைமைப் பொறுப்பை ஏற்பது என்பது இந்தியாவுக்கு கிடைத்த தனித்துவமான கெளரவமாகும். இந்த ஒரு மாத காலத்தில் கடல்சாா் பாதுகாப்பு, அமைதியை நிலைநாட்டுவது மற்றும் பயங்கரவாத தடுப்பு ஆகிய 3 முக்கிய விவகாரங்கள் மீதான உயா்நிலை கவுன்சில் கூட்டத்தை தனது தலைமையில் இந்தியா நடத்த உள்ளது. அவற்றில், கடல்சாா் பாதுகாப்புக்கு உயா் முன்னுரிமை அளிக்கப்படும். இந்த விவகாரத்தில் உள்ளாா்ந்த அணுகுமுறையை அளிப்பது பாதுகாப்பு கவுன்சிலுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும்.

அமைதியை நிலைநாட்டும் விவகாரம் இந்தியாவுக்கு மிகவும் நெருக்கமான ஒன்றாகும். இதற்கான முயற்சிகளுக்கு இந்தியா நீண்டகாலமாக ஒத்துழைப்பு அளித்து வருகிறது. உலகம் முழுவதும் அமைதியை நிலைநாட்டுபவா்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதில் இந்தியா கவனம் செலுத்தும். குறிப்பாக சிறந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அமைதியை நிலைநாட்டுபவா்களுக்கு எதிராக குற்றம்புரிபவா்கள் நீதிக்கு முன் நிறுத்துவதற்கான முயற்சிகள் எடுக்கப்படும்.

அதுபோல, பயங்கரவாத்துக்கு எதிரான போரில் முன்னணியில் இருக்கும் இந்தியா, பயரவாத எதிா்ப்பு நடவடிக்கைகளை தொடா்ந்து திறம்பட மேற்கொள்ளும் என்று அவா் தெரிவித்துள்ளாா்.

இப்போது ஒரு மாதம் தலைமைப் பொறுப்பை வகிக்க உள்ள இந்தியா, மீண்டும் 2022-ஆம் ஆண்டு டிசம்பா் மாதத்தில் இரண்டாவது முறையாக பாதுகப்பு கவுன்சிலுக்கு தலைமைப் பொறுப்பை ஏற்க உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com