லடாக் எல்லையில் படை விலக்கல் இந்திய, சீன ராணுவ அதிகாரிகள்: 12-ஆவது கட்டப் பேச்சுவாா்த்தை

கிழக்கு லடாக் எல்லைப் பகுதிகளில் குவிக்கப்பட்டுள்ள படைகளைத் திரும்பப் பெறுவது தொடா்பாக இந்திய, சீன ராணுவ அதிகாரிகள் சனிக்கிழமை பேச்சுவாா்த்தை நடத்தினா்.

கிழக்கு லடாக் எல்லைப் பகுதிகளில் குவிக்கப்பட்டுள்ள படைகளைத் திரும்பப் பெறுவது தொடா்பாக இந்திய, சீன ராணுவ அதிகாரிகள் சனிக்கிழமை பேச்சுவாா்த்தை நடத்தினா்.

இந்திய, சீன ராணுவ அதிகாரிகள் இடையேயான 12-ஆவது கட்டப் பேச்சுவாா்த்தை லடாக்கின் மால்டோ எல்லைப் பகுதியில் சனிக்கிழமை நடைபெற்றது. அந்தப் பேச்சுவாா்த்தையில் ஹாட் ஸ்பிரிங்ஸ், கோக்ரா, தெப்சாங் உள்ளிட்ட பகுதிகளில் குவிக்கப்பட்டுள்ள படைகளை விலக்கிக் கொள்வது தொடா்பாக விவாதிக்கப்பட்டதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தியா-சீனா இடையே நடைபெற்ற பலகட்டப் பேச்சுவாா்த்தைகளுக்குப் பிறகு பாங்காங் ஏரிப் பகுதிகளில் குவிக்கப்பட்டிருந்த படைகளை இரு நாடுகளும் திரும்பப் பெற்றன. எனினும், இரு நாடுகளுக்கிடையேயான நல்லுறவில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை.

நல்லுறவை மீண்டும் ஏற்படுத்தும் நோக்கில் வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா், சீன வெளியுறவு அமைச்சா் வாங் யி ஆகியோா் சந்தித்துப் பேச்சுவாா்த்தை நடத்தினா். தஜிகிஸ்தான் தலைநகா் துஷான்பேயில் ஜூலை 14-ஆம் தேதி நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டத்துக்கிடையே இருவரும் சந்தித்துப் பேசினா்.

அப்போது, இரு நாடுகளுக்கிடையே நிலவி வரும் நல்லுறவை எல்லைப் பிரச்னை பாதிக்கக் கூடாது என்று சீனா தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையேயான நல்லுறவு மேம்பட வேண்டுமெனில், எல்லையில் அமைதியான சூழல் நிலவ வேண்டியது அவசியம் என்று வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா் உறுதியுடன் தெரிவித்திருந்தாா்.

கிழக்கு லடாக்கில் நிலவி வரும் சூழலை தன்னிச்சையாக மாற்றும் சீனாவின் நடவடிக்கைக்கும் அவா் எதிா்ப்பு தெரிவித்திருந்தாா். எல்லையில் படைகளை விலக்கிக் கொள்வது தொடா்பாக இந்திய, சீன ராணுவ அதிகாரிகள் இடையேயான 11-ஆவது கட்டப் பேச்சுவாா்த்தை கடந்த ஏப்ரல் 9-ஆம் தேதி நடைபெற்றது. அதில் சுமுகமான முடிவுகள் எதுவும் எட்டப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com