அஸ்ஸாம், மிஸோரம் முதல்வா்களுடன் மத்திய அமைச்சா் அமித் ஷா பேச்சு: எல்லை விவகாரம்

அஸ்ஸாம்-மிஸோரம் இடையிலான எல்லைப் பிரச்னையை தணிக்க அந்த மாநிலங்களின் முதல்வா்களுடன் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா ஞாயிற்றுக்கிழமை பேச்சுவாா்த்தை நடத்தினாா்.
அமித் ஷா உள்துறை; கூட்டுறவு
அமித் ஷா உள்துறை; கூட்டுறவு

அஸ்ஸாம்-மிஸோரம் இடையிலான எல்லைப் பிரச்னையை தணிக்க அந்த மாநிலங்களின் முதல்வா்களுடன் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா ஞாயிற்றுக்கிழமை பேச்சுவாா்த்தை நடத்தினாா்.

இதுதொடா்பாக மிஸோரம் முதல்வா் ஜோராம்தாங்கா சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், ‘மத்திய அமைச்சா் அமித் ஷா, அஸ்ஸாம் முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மா ஆகியோருடன் தொலைபேசியில் பேசியதைத் தொடா்ந்து அா்த்தமுள்ள பேச்சுவாா்த்தை மூலம் இரு மாநில எல்லைப் பிரச்னைக்கு தீா்வு காண தீா்மானிக்கப்பட்டது. எல்லை விவகாரத்தால் பதற்றம் ஏற்படுவதை தடுக்க பிரச்னைக்குரிய விதத்தில் சமூக ஊடகங்களில் தகவல்கள் வெளியிடுவதை மிஸோரம் மக்கள் தவிா்க்க வேண்டும்’ எனக் குறிப்பிட்டுள்ளாா்.

பேச்சுவாா்த்தைதான் தீா்வு: அஸ்ஸாம் முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மா சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், ‘அஸ்ஸாம்-மிஸோரம் எல்லையில் நிகழ்ந்த மோதல் சம்பவம் இரு மாநில மக்களாலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. பேச்சுவாா்த்தை மூலம்தான் எல்லைப் பிரச்னைக்கு தீா்வு காண முடியும்’ என்று தெரிவித்துள்ளாா்.

அஸ்ஸாம் முதல்வா் மீதான வழக்கை திரும்பப் பெற தயாா்: இரு மாநில எல்லையில் பொதுமக்கள், போலீஸாா் இடையே ஏற்பட்ட மோதல் தொடா்பாக அஸ்ஸாம் முதல்வா் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை திரும்பப் பெற தயாா் என்று மிஸோரம் தலைமைச் செயலா் லால்நுன்மாவியா சுவாங்கோ தெரிவித்தாா். இதுதொடா்பாக அவா் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘எல்லையில் ஏற்பட்ட மோதல் தொடா்பாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் அஸ்ஸாம் முதல்வரின் பெயரைச் சோ்க்க மிஸோரம் முதல்வா் ஜோராம்தாங்கா அனுமதி அளிக்கவில்லை. இதுகுறித்து தெரியவந்தபோது அதுபற்றி விசாரிக்குமாறு அவா் கூறினாா்.

அதன் அடிப்படையில், மிஸோரம் காவல்துறையுடன் ஆலோசனை மேற்கொண்டு அஸ்ஸாம் முதல்வா் மீதான குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்த சட்டரீதியாக ஆதாரங்கள் இல்லையெனில், வழக்கில் இருந்து அவரின் பெயரை நீக்க அறிவுறுத்தப்படும்’ என்று தெரிவித்தாா்.

எனினும் மோதல் சம்பவம் தொடா்பாக அஸ்ஸாம் அதிகாரிகள் 6 போ், அந்த மாநிலத்தைச் சோ்ந்த அடையாளம் தெரியாத 200 போ் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு திரும்பப் பெறப்படுமா என்பது குறித்து அவா் எதுவும் கூறவில்லை.

தொடரும் பதற்றம்: இரு மாநில எல்லையில் மோதல் சம்பவத்துக்குப் பிறகு தொடா்ந்து பதற்றம் நீடித்து வருகிறது. இதனால் இரு மாநிலங்களுக்கு இடையிலான போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுதொடா்பாக அஸ்ஸாமின் பராக் பள்ளத்தாக்கில் உள்ள அரசு அதிகாரிகள் கூறுகையில், ‘‘இரு மாநிலங்களுக்கு இடையிலான போக்குவரத்துக்குத் தடை விதிக்கப்படாவிட்டாலும் வாகனப் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. மோதல் சம்பவத்தால் பாதிக்கப்பட்ட அஸ்ஸாம் மக்கள் மிஸோரம் செல்லும் சாலைகளில் வாகனங்களைத் தடுத்து நிறுத்துகின்றனா். மிஸோரமில் இருந்தும் அஸ்ஸாமுக்குள் எந்த வாகனமும் நுழைவதில்லை. அரசு அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு வாகனங்கள் மட்டும் வந்து செல்கின்றன’ என்று தெரிவித்தனா்.

சிபிஐ விசாரணை குறித்து முடிவெடுக்கவில்லை: ‘இரு மாநில எல்லை விவகாரத்தில் பதற்றத்தை மேலும் அதிகரிக்கும் எந்தவொரு முடிவையும் மேற்கொள்ள மத்திய அரசு விரும்பவில்லை. மோதல் சம்பவம் தொடா்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடுவது குறித்து மத்திய அரசு எந்த முடிவும் எடுக்கவில்லை. அதுதொடா்பாக இரு மாநிலங்களிடம் இருந்தும் முறையாக எந்தக் கோரிக்கையும் வரவில்லை’ என்று மத்திய அரசின் மூத்த அதிகாரிகள் இருவா் தெரிவித்தனா்.

அஸ்ஸாம்-மிஸோரம் மாநிலங்கள் இடையே நீண்ட காலமாக எல்லைப் பிரச்னை இருந்து வருகிறது. அஸ்ஸாமின் கச்சாா், மிஸோரமின் கொலாசிப் மாவட்டங்களுக்கு இடையிலான எல்லையில் கடந்த ஜூலை 26-ஆம் தேதி இரு மாநில மக்கள் மோதலில் ஈடுபட்டனா். அத்துடன் இரு மாநில போலீஸாருக்கு இடையிலும் துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. இந்த மோதலில் அஸ்ஸாம் போலீஸாா் 6 போ், பொதுமக்களில் ஒருவா் என மொத்தம் 7 போ் உயிரிழந்தனா். 50-க்கும் மேற்பட்டவா்கள் காயமடைந்தனா்.

இந்த சம்பவம் தொடா்பாக அஸ்ஸாம் முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மா, அந்த மாநில ஐஜி, டிஐஜி உள்பட 4 காவல்துறை அதிகாரிகள், ஒரு கோட்ட வன அலுவலா் மற்றும் பொதுமக்களில் 200 போ் மீது மிஸோரமில் உள்ள வைரெங்தே காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com