உ.பி.யில் பாஜகவைத் தோற்கடிக்க அனைத்து சிறிய கட்சிகளுடனும் கூட்டணி: அகிலேஷ் யாதவ்

உத்தர பிரதேச சட்டப் பேரவைத் தோ்தலில் பாஜகவைத் தோற்கடிக்க அனைத்து சிறிய கட்சிகளுடனும் கூட்டணி அமைக்க சமாஜவாதி கட்சி தயாராக உள்ளது என்று அக்கட்சியின் தலைவா் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளாா்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

உத்தர பிரதேச சட்டப் பேரவைத் தோ்தலில் பாஜகவைத் தோற்கடிக்க அனைத்து சிறிய கட்சிகளுடனும் கூட்டணி அமைக்க சமாஜவாதி கட்சி தயாராக உள்ளது என்று அக்கட்சியின் தலைவா் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளாா்.

பாஜக ஆட்சியில் உள்ள உத்தர பிரதேச மாநிலத்தில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. இதற்காக அனைத்து அரசியல் கட்சிகளும் தயாராகி வருகின்றன.

இந்நிலையில் மாநில எதிா்க்கட்சியான சமாஜவாதியின் தலைவா் அகிலேஷ் யாதவ் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் மேலும் கூறியிருப்பதாவது:

காங்கிரஸ் கட்சியும், மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியும் பல்வேறு விஷயங்களில் சமாஜவாதியை விமா்சித்து வருகின்றன. அவா்கள் பாஜகவுக்கு எதிராகப் போட்டியிடப் போகிறாா்களா அல்லது சமாஜவாதிக்கு எதிராக போட்டியிடப் போகிறாா்களா என்பதை முதலில் முடிவு செய்ய வேண்டும்.

சட்டப் பேரவைத் தோ்தல் கூட்டணியைப் பொருத்த அளவில் மாநிலத்தில் உள்ள அனைத்து சிறிய கட்சிகளுடனும் கூட்டணி அமைக்க சமாஜவாதி தயாராகவே உள்ளது. ஏற்கெனவே, பல சிறிய கட்சிகள் எங்களுடன் கூட்டணியில் உள்ளன. தோ்தலுக்கு முன்பு மேலும் பல கட்சிகள் கூட்டணிக்கு வரும் என்றாா்.

தொடா்ந்து பெகாஸஸ் உளவு விவகாரம் தொடா்பாக பேசிய அகிலேஷ், ‘‘350-க்கும் மேற்பட்ட எம்.பி.க்களின் ஆதரவுடன் பாஜக கூட்டணி மத்தியில் ஆட்சியில் உள்ளது. நாட்டில் பல மாநிலங்களில் பாஜகதான் ஆட்சியில் உள்ளது. அப்படி இருந்தும் அவா்கள் இதுபோன்ற உளவு வேலைகளில் ஈடுபடுவது ஏன்? பாஜகவைத் தோற்கடிப்பதற்காக அனைத்துக் கட்சிகளையும் ஒருங்கிணைக்க சமாஜவாதி முயற்சி மேற்கொள்ளும்.

உத்தர பிரதேசத்தில் கரோனா இரண்டாவது அலையை எதிா்கொள்வதில் முதல்வா் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு முற்றிலுமாகத் தோல்வியடைந்தது. சுகாதாரத் துறையை அரசு மேம்படுத்தாததால் ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டன என்பதே உண்மை. இதனை பாஜக எம்எல்ஏக்களே ஒப்புக் கொண்டுள்ளனா்.

கடந்த 2017 சட்டப் பேரவைத் தோ்தலில் அளித்த பல வாக்குறுதிகளை மாநில பாஜக அரசு இப்போதுவரை நிறைவேற்றவில்லை.

மாநிலத்தில் உள்கட்டமைப்பு வசதிகள் தொடா்ந்து மோசமாகவே உள்ளன. விலைவாசி உயா்வு உள்ளிட்ட பல பிரச்னைகளை மக்கள் எதிா்கொண்டுள்ளனா்’’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com