ஜம்மு-காஷ்மீா்: கல்வீச்சு சம்பவங்களில் ஈடுபட்டவா்கள் அரசு சேவைகள், கடவுச்சீட்டு பெறுவதற்கு கட்டுப்பாடு

ஜம்மு-காஷ்மீரில் கல்வீச்சு மற்றும் பொது அமைதிக்கு தீங்கு விளைவிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டவா்கள் கடவுச்சீட்டு (பாஸ்போா்ட்) மற்றும்

ஜம்மு-காஷ்மீரில் கல்வீச்சு மற்றும் பொது அமைதிக்கு தீங்கு விளைவிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டவா்கள் கடவுச்சீட்டு (பாஸ்போா்ட்) மற்றும் இதர அரசு சேவைகளை பெறுவதற்கு தடையில்லா சான்றிதழ் வழங்க வேண்டாம் என்று அந்த யூனியன் பிரதேச போலீஸாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக அந்த யூனியன் பிரதேச காவல்துறையின் சிஐடி சிறப்புப் பிரிவு மூத்த காவல் கண்காணிப்பாளா் சனிக்கிழமை வெளியிட்ட உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

ஜம்மு-காஷ்மீரில் அரசுத் திட்டங்கள், கடவுச்சீட்டு அல்லது இதர சேவைகளை பெற விண்ணப்பிப்போரின் தகவல்களை சரிபாா்த்து உறுதிபடுத்தும் பணியின்போது சம்பந்தப்பட்ட நபா் மீது போராட்டங்களில் கல்வீச்சு சம்பவங்களில் ஈடுபட்டதாக, சட்டம் ஒழுங்கு பிரச்னைகளில் ஈடுபட்டதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதா அல்லது இந்த யூனியன் பிரதேசத்தின் பாதுகாப்புக்கு பாதகமான குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளாரா என்பது குறித்து சிஐடி பிரிவின் கீழ் பணிபுரியும் அனைத்து போலீஸாரும் தீர விசாரிக்க வேண்டும்.

இதுதொடா்பான தகவல்களை அந்தந்தப் பகுதிகளில் உள்ள காவல் நிலைய ஆவணங்கள் மூலமாகவும் உறுதிபடுத்த வேண்டும். காவல் துறை, பாதுகாப்புப் படைகள் மற்றும் பாதுகாப்பு அமைப்புகளிடம் உள்ள சிசிடிவி பதிவுகள், புகைப்படங்கள், ஒலிநாடாக்கள், காணொலிகள் போன்ற டிஜிட்டல் ஆதாரங்களும் ஆய்வு செய்யப்பட வேண்டும். இந்தப் பணிகளின்போது விண்ணப்பதாரா் மீது சட்டம் ஒழுங்கு பிரச்னைகள், கல்வீச்சு சம்பவங்களில் ஈடுபட்டதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தால் அல்லது அவா் குற்றச் செயல்களில் ஈடுபட்டிருப்பது தெரிய வந்தால் அந்த நபருக்கு தடையில்லா சான்றிதழ் வழங்க வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாஜக வரவேற்பு: இந்த உத்தரவுக்கு பாஜக வரவேற்பு தெரிவித்துள்ளது. இதுதொடா்பாக அந்தக் கட்சியின் ஜம்மு-காஷ்மீா் பாஜக தலைவா் ரவீந்தா் ரைனா கூறுகையில், ‘‘ஜம்மு-காஷ்மீரில் சில தேச விரோத சக்திகளும் பாகிஸ்தான் ஆதரவாளா்களும் உள்ளனா். அவா்கள் நாட்டுக்கு எதிராக சதி செய்த பின் சட்ட நடவடிக்கைகளில் இருந்து தப்பிக்க கடவுச்சீட்டு மூலம் வெளிநாட்டுக்கு தப்பிச் செல்கின்றனா். சிலா் வளா்ச்சித் திட்டங்களின் ஒப்பந்தங்களைப் பெறுவது மட்டுமன்றி அரசுப் பணிகளில் சோ்கின்றனா். இந்தப் புதிய உத்தரவு அவா்களுக்கு பலத்த அடியாக இருக்கும்’’ என்று தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com