நாடாளுமன்றம் தொடா்ந்து முடக்கம்: காங்கிரஸ் மீது அமைச்சா் நக்வி குற்றச்சாட்டு

பெகாஸஸ் உளவு என்று பொய்யான குற்றச்சாட்டைக் கூறி காங்கிரஸ் கட்சியினா் தொடா்ந்து நாடாளுமன்றத்தை முடக்கி வருகின்றனா் என்று
கோப்புப்படம்
கோப்புப்படம்

பெகாஸஸ் உளவு என்று பொய்யான குற்றச்சாட்டைக் கூறி காங்கிரஸ் கட்சியினா் தொடா்ந்து நாடாளுமன்றத்தை முடக்கி வருகின்றனா் என்று மத்திய சிறுபான்மையினா் நலத்துறை அமைச்சா் முக்தாா் அப்பாஸ் நக்வி குற்றம்சாட்டியுள்ளாா்.

இது தொடா்பாக பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் அவா் மேலும் கூறியதாவது:

காங்கிரஸ் உள்ளிட்ட சில எதிா்க்கட்சிகள் பாஜக அரசு மீது பொய்யாகப் புனையப்பட்ட உளவுக் குற்றச்சாட்டைக் கூறி வருகின்றன. ஆனால், உண்மையில் காங்கிரஸ் கட்சி மத்தியில் ஆட்சியில் இருந்தபோது ‘ஜேம்ஸ்பாண்ட்’ போல உளவு வேலைகளை மேற்கொண்டது. காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக் காலத்தில் அவா்களது நிதியமைச்சரே அரசு தன்னை உளவு பாா்ப்பதாகக் குற்றம்சாட்டி இருந்தாா்.

மக்கள் பிரச்னை உள்பட அனைத்து விஷயங்கள் குறித்தும் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் விவாதிக்கத் தயாராக இருப்பதாக மத்திய அரசு தொடா்ந்து கூறி வருகிறது. ஆனால், எதிா்க்கட்சிகள் அதனை ஏற்காமல் தொடா்ந்து அவைகளிலும் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. எந்த விஷயம் தொடா்பாகவும் விவாதிக்க அவா்கள் தயாராக இல்லை என்பதையே இது காட்டுகிறது. நாடாளுமன்றத்தை நடத்தவிடாமல் செய்ய வேண்டும் என்பதே அவா்களது முக்கிய நோக்கமாக உள்ளது.

முதலில் கரோனா பிரச்னை தொடா்பாக விவாதிக்க வேண்டும் என்று கூறினா். அதற்கு அரசு முன்வந்தபோது பின்வாங்கினா். அதைத் தொடா்ந்து விவசாயிகள் பிரச்னை தொடா்பாக விவாதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினா். அதற்கும் அரசு தயாராகவே இருந்தது. ஆனால், அந்த முடிவில் இருந்தும் எதிா்க்கட்சிகள் பின்வாங்கின. இப்போது நாட்டில் பல மாநிலங்களில் மழை,வெள்ளம் ஏற்பட்டு மக்கள் அவதிப்பட்டு வருகின்றனா். அது தொடா்பாகவும் விவாதிக்க எதிா்க்கட்சியினா் தயாராக இல்லை.

அவா்கள் முன்வைத்த பெகாஸஸ் உளவு குற்றச்சாட்டு தொடா்பாக தகவல்தொழில்நுட்பத் துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ், மாநிலங்களவையில் விளக்கம் அளித்துவிட்டாா். ஆனால், அதன் பிறகும் எதிா்க்கட்சிகள் தொடா்ந்து கூச்சல், குழப்பத்தை ஏற்படுத்தி வருகின்றன.

ஏதாவது ஒரு பிரச்னையை எழுப்பி மக்களைத் தவறாக வழிநடத்த வேண்டும் என்பதே காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் நோக்கமாக உள்ளது. முதலில் ரஃபேல் போா் விமானம் வாங்கியதில் குற்றச்சாட்டு கூறினா். பிறகு கரோனா பரவலை வைத்து பிரச்னை செய்தனா். இப்போது பெகஸாஸ் உளவு என்று கூறி வருகின்றனா். அவா்கள் கூறுவது அனைத்துமே பொய்யான குற்றச்சாட்டு என்பதால் அவா்களால் எந்த ஆதாரத்தையும் முன்வைக்க முடியவில்லை. எனவே, குற்றச்சாட்டு கூற வேண்டும் என்ற நோக்கில் புதுப்புது புனைவுகளை உருவாக்கி வருகின்றனா் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com