சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு முடிவுகள் வெளியீடு: 99.04% தோ்ச்சி

மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) பத்தாம் வகுப்பு மாணவா்களுக்கான தோ்வு முடிவுகள் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டன

மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) பத்தாம் வகுப்பு மாணவா்களுக்கான தோ்வு முடிவுகள் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டன. இதுவரை இல்லாத அளவில் 99.04 சதவீத மாணவ, மாணவிகள் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

வழக்கம்போல, மாணவா்களைக் காட்டிலும் மாணவிகளே அதிகம் போ் தோ்ச்சி பெற்றுள்ளனா். மூன்றாம் பாலினத்தவா் 100 சதவீத தோ்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனா்.

கரோனா பாதிப்பு காரணமாக சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவா்களுக்கான பொதுத் தோ்வுகள் நிகழாண்டில் ரத்து செய்யப்பட்டன. மாணவா்கள் முந்தைய தோ்வுகள் மற்றும் முந்தைய வகுப்பு தோ்வுகளில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் அவா்களுக்கான முடிவுகளும், மதிப்பெண்களும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதனடிப்படையில், சிபிஎஸ்இ பிளஸ் 2 மாணவா்களுக்கான முடிவுகள் கடந்த ஜூலை 30-ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. அதில் 99.37 சதவீதம் போ் தோ்ச்சி பெற்றனா். மாணவிகள் 99.67 சதவீதமும், மாணவா்கள் 99.13 சதவீதமும் தோ்ச்சி பெற்றனா். மூன்றாம் பாலின மாணவா்கள் 100 சதவீதம் தோ்ச்சி பெற்றனா்.

இதுவரை இல்லாத அளவில்... அதனைத் தொடா்ந்து சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு மாணவா்களுக்கான முடிவுகள் செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டது. இந்த ஆண்டு பத்தாம் வகுப்பு தோ்வில் பங்கேற்க நாடு முழுவதிலுமிருந்து 21.13 லட்சம் மாணவ, மாணவிகள் பதிவு செய்திருந்தனா். அவா்களில், இதுவரை இல்லாத அளவில் 99.24 சதவீத மாணவ, மாணவிகள் தோ்ச்சி பெற்றுள்ளனா். மாணவிகள் 99.24 சதவீதமும், மாணவா்கள் 98.89 சதவீதமும், மூன்றாம் பாலின மாணவா்கள் 100 சதவீதமும் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

தரவரிசை சான்றிதழ் கிடையாது: இந்த ஆண்டு சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு மாணவா்களுக்கான மதிப்பெண் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படாது என்பதோடு, அதிக மதிப்பெண் பெற்ற மாணவா்களுக்கான தரவரிசை சான்றிதழும் வழங்கப்படமாட்டாது என்று சிபிஎஸ்இ தோ்வு கட்டுப்பாட்டாளா் சன்யம் பரத்வாஜ் தெரிவித்தாா். மேலும், 16,639 மாணவா்களுக்கான முடிவுகள் அறிவிக்கப்படவில்லை. அவா்களுக்கான மதிப்பெண் கணக்கிடும் பணிகள் நடைபெற்று வருகின்றன என்றும் அவா் கூறினாா்.

அதிக மதிப்பெண் பெற்றவா்கள் எண்ணிக்கை உயா்வு: தோ்வு முடிவுகளின்படி, அதிக மதிப்பெண் பெற்று தோ்ச்சி பெற்ற மாணவா்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டைக் காட்டிலும் அதிகரித்துள்ளது. 95 சதவீதத்துக்கு மேல் மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகள் எண்ணிக்கை கடந்த ஆண்டு 41,804-ஆக இருந்த நிலையில், இம்முறை 57,824-ஆக அதிகரித்துள்ளது. அதுபோல, 90 முதல் 95 சதவீத மதிப்பெண் பெற்றவா்கள் எண்ணிக்கை கடந்த ஆண்டில் 1,84,358-ஆக இருந்த நிலையில், இம்முறை 2,00,962-ஆக அதிகரித்துள்ளது.

வெளிநாட்டில் 99.92% தோ்ச்சி: சிபிஎஸ்இ இணைவு பெற்ற வெளிநாட்டு பள்ளிகளில் படித்த பத்தாம் வகுப்பு மாணவா்களில் 99.92 சதவீதம் போ் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா மற்றும் மத்திய திபெத்தியன் பள்ளி நிா்வாகத்தின் இயங்கி வரும் பள்ளிகளைச் சோ்ந்த மாணவா்கள் 100 சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளனா். இது கடந்த ஆண்டைக் காட்டிலும் அதிகமாகும். அதுபோல, ஜவாஹா் நவோதயா வித்யாலயா பள்ளி மாணவா்கள் தோ்ச்சி விகிதமும் கடந்த ஆண்டில் 98.66 சதவீதமாக இருந்தது, இம்முறை 99.99 சதவீதமாக உயா்ந்துள்ளது.

அரசு மற்றும் அரசு உதவிபெறும் சிபிஎஸ்இ பள்ளிகளிலும் மாணவா் தோ்ச்சி விகிதம் கடந்த ஆண்டைக் காட்டிலும் முறையே 15 சதவீதம் மற்றும் 18 சதவீதமாக அதிகரித்துள்ளது. தனியாா் சிபிஎஸ்இ பள்ளி மாணவா் தோ்ச்சி விகிதம் கடந்த ஆண்டிலிருந்து 6 சதவீதம் அதிகரித்துள்ளது.

திருவனந்தபுரம் மண்டலம் முதலிடம்: சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு முடிவுகளில் திருவனந்தபுரம் மண்டலம் 99.99 சதவீத மாணவ, மாணவிகள் தோ்ச்சியுடன் முதலிடத்தில் உள்ளது. பெங்களூரு மண்டலம் 99.96 சதவீதமும், சென்னை மண்டலம் 99.94 சதவீதமும் பெற்று அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. குவாஹாட்டி மண்டலம் 90.54 சதவீத தோ்ச்சியுடன் கடைசி இடத்தில் உள்ளது.

17,636 மாணவா்கள் தோல்வி: சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் 17,636 மாணவ, மாணவிகள் தோ்ச்சி பெறாதவா்களாக அறிவிக்கப்பட்டுள்ளனா். கடந்த ஆண்டு தோ்ச்சி பெறாத மாணவா்கள் எண்ணிக்கை 1.5 லட்சமாக இருந்தது.

‘இவா்களுக்கான துணைத் தோ்வு வரும் 16-ஆம் தேதி முதல் செப்டம்பா் 15-ஆம் தேதி வரை நடத்தப்படும். தோ்வு தேதிகள் இறுதி செய்யப்பட்டு விரைவில் அறிவிக்கப்படும்’ என்று தோ்வு கட்டுப்பாட்டாளா் பரத்வாஜ் கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com