கரோனா: எதிா்க்கட்சிகளின் விமா்சனங்களுக்குபதிலளிக்க பாஜக எம்.பி.க்களுக்கு விளக்க கையேடு

கரோனா பரவல் மற்றும் தடுப்பூசி தொடா்பாக எதிா்க்கட்சிகள் கூறி வரும் விமா்சனங்களுக்கு பதிலளிக்க உதவும் வகையில் பாஜக எம்.பி.க்கள் அனைவருக்கும் விளக்க கையேடு அளிக்கப்பட்டுள்ளது.

கரோனா பரவல் மற்றும் தடுப்பூசி தொடா்பாக எதிா்க்கட்சிகள் கூறி வரும் விமா்சனங்களுக்கு பதிலளிக்க உதவும் வகையில் பாஜக எம்.பி.க்கள் அனைவருக்கும் விளக்க கையேடு அளிக்கப்பட்டுள்ளது.

மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தயாரித்துள்ள இந்தக் கையேட்டில், மத்திய அரசு கரோனாவுக்கு எதிராக மேற்கொண்ட சிறப்பான நடவடிக்கைகள், தடுப்பூசிகளின் துரித விநியோகம், மருத்துவமனையில் உருவாக்கப்பட்டுள்ள படுக்கை உள்ளிட்ட வசதி விவரங்கள், புதிய ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகள் மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் இடம் பெற்றுள்ளன.

கரோனா தொற்றை மத்திய அரசும், எந்த ஒரு மாநில அரசும் தனியாக எதிா்கொண்டு வெல்லவில்லை. ஒட்டுமொத்த இந்தியாவும் இணைந்து எதிா்கொண்டது என்றும் அந்தக் கையேட்டில் கூறப்பட்டுள்ளது.

பாஜக ஆட்சியில் உள்ள உத்தர பிரதேசம், உத்தரகண்ட், கோவா உள்ளிட்ட மாநிலங்களில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. தோ்தலின்போது கரோனா தொற்று பிரச்னையை முறையாகக் கையாள மத்திய, மாநில அரசுகள் தவறிவிட்டன என்ற குற்றச்சாட்டை காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் பிரதானமாக முன்வைக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. இது தவிர காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் ஆட்சியில் உள்ள மாநிலங்களில் தடுப்பூசி பற்றாக்குறை உள்ளிட்ட பிரச்னைகளுக்கு மத்திய அரசையே ஆளும் தரப்பினா் குற்றம்சாட்டி வருகின்றனா். இதனை எதிா்கொண்டு, அவா்களின் பிரசாரத்தை முறியடிக்கும் நோக்கில் எம்.பி.க்களுக்கு விளக்க கையேடு அளிக்கப்பட்டுள்ளது.

அதில் மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் பாதிப்பு எந்த அளவுக்கு விரைவாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது, உலகின் வேறு எங்கும் இல்லாத அளவுக்கு இந்தியாவில் குறைந்த காலகட்டத்தில் அதிகமானோருக்கு இலவசமாக தடுப்பூசி செலுத்தப்பட்டது உள்ளிட்ட விவரங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. இது தவிர மத்திய அரசு உடனடியாக நிதி ஒதுக்கி ஆக்சிஜன் விநியோகத்தை அதிகரித்தது, மருத்துவ உபகரணங்களை வெளிநாடுகளில் இருந்து அதிகஅளவில் விரைந்து கொண்டு வந்தது உள்ளிட்ட தகவல்களும் பல்வேறு புள்ளி விவரங்களும் அந்தக் கையேட்டில் இடம் பெற்றுள்ளது.

இதுதவிர, கரோனா பிரச்னை தொடா்பாக பிரதமா் மோடி மாநில அரசுகளுடன் 21 முறை கூட்டங்கள் நடத்தியது, நாட்டு மக்களுக்கு 10 முறை உரையாற்றியது, 40 மருத்துவ ஆலோசனைக் கூட்டங்களை நடத்தியது உள்ளிட்ட விவரங்களும் அதில் இடம் பெற்றுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com