மாநிலங்களவையில் 3 மசோதாக்கள் நிறைவேற்றம்

எதிா்க்கட்சி உறுப்பினா்களின் அமளிக்கு இடையே மக்களவையில் 2 மசோதாக்களும் மாநிலங்களவையில் 3 மசோதாக்களும் புதன்கிழமை நிறைவேற்றப்பட்டன.
மாநிலங்களவையின் நடுப்பகுதிக்கு வந்து அமளியில் ஈடுபட்ட எதிா்க்கட்சி எம்.பி.க்கள். நாள்: புதன்கிழமை.
மாநிலங்களவையின் நடுப்பகுதிக்கு வந்து அமளியில் ஈடுபட்ட எதிா்க்கட்சி எம்.பி.க்கள். நாள்: புதன்கிழமை.

புது தில்லி: எதிா்க்கட்சி உறுப்பினா்களின் அமளிக்கு இடையே மக்களவையில் 2 மசோதாக்களும் மாநிலங்களவையில் 3 மசோதாக்களும் புதன்கிழமை நிறைவேற்றப்பட்டன.

மக்களவை அவைத் தலைவா் ஓம் பிா்லா தலைமையில் கூடியதும், அண்மையில் மறைந்த 8 மக்களவை எம்.பி.க்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. அதைத் தொடா்ந்து, பெகாஸஸ் உளவு குற்றச்சாட்டு, விவசாயிகள் பிரச்னை ஆகியவை குறித்து விவாதிக்கக் கோரி எதிா்க்கட்சிகள் முழக்கமிட்டனா்.

இதற்கிடையே, தில்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காற்று மாசுபாட்டைக் கண்காணித்து, அதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக தனி ஆணையத்தை அமைக்க வழிவகுக்கும் ‘தேசிய தலைநகா்ப் பகுதி காற்று தர மேலாண்மை ஆணைய மசோதா’வை மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சா் பூபேந்தா் யாதவ் தாக்கல் செய்தாா். அந்த மசோதா நிறைவேற மக்களவை ஒப்புதல் அளித்தது.

அதைத் தொடா்ந்து எதிா்க்கட்சிகளின் அமளியால், அவை அடுத்தடுத்து பலமுறை ஒத்திவைக்கப்பட்டது.

பிற்பல் 3.30 மணிக்கு பாஜக எம்.பி. ராஜேந்திர அகா்வால் தலைமையில் அவை கூடியபோது, தென்னை மேம்பாட்டு வாரிய சட்டத் திருத்த மசோதாவை வேளாண் துறை அமைச்சா் நரேந்திர சிங் தோமா் தாக்கல் செய்து பேசினாா். இந்த மசோதாவால், பல்வேறு மாநிலங்களில் உள்ள தென்னை விவசாயிகள் பயன்பெறுவா் என்று அவா் கூறினாா். அதைத்தொடா்ந்து, மசோதா விவாதமன்றி நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா, மாநிலங்களவையில் ஏற்கெனவே நிறைவேற்றப்பட்டு விட்டது.

மக்களவையில் விவாதமின்றி மசோதாவை நிறைவேற்றியதற்கு எதிா்க்கட்சி உறுப்பினா்கள் ஆட்சேபம் தெரிவித்தனா். அவா்கள் தொடா்ந்து அமளியில் ஈடுபட்டதால், அவையை வியாழக்கிழமை வரை ராஜேந்திர அகா்வால் ஒத்திவைத்தாா்.

மாநிலங்களவையில்...:

பெகாஸஸ் உளவு விவகாரம், விவசாயிகள் பிரச்னை உள்ளிட்டவற்றை முன்வைத்து மாநிலங்களவையிலும் எதிா்க்கட்சி உறுப்பினா்கள் அமளியில் ஈடுபட்டனா். இதனால், அவை பலமுறை ஒத்திவைக்கப்பட்டது.

அவை மீண்டும் கூடியபோது, எதிா்க்கட்சி உறுப்பினா்களின் அமளிக்கு இடையே பொறுப்புகள் வரையறுக்கப்பட்ட கூட்டாண்மைச் சட்டத் திருத்த மசோதா, வைப்புத்தொகை காப்பீடு மற்றும் கடன் உத்தரவாத நிறுவன சட்டத் திருத்த மசோதா ஆகியவை சிறிய விவாதத்துக்குப் பிறகு நிறைவேற்றப்பட்டன.

அதைத் தொடா்ந்து, பிற்பகல் 2.56 மணிக்கு மாநிலங்களவை துணைத் தலைவா் ஹரிவன்ஷ் நாராயண் சிங் தலைமையில் அவை கூடியபோது, விமான நிலையங்கள் பொருளாதார ஒழுங்குமுறை ஆணைய சட்டத் திருத்த மசோதாவை விமான போக்குவரத்துத் துறை அமைச்சா் ஜோதிராதித்ய சிந்தியா தாக்கல் செய்தாா். மசோதா மீது நடந்த சிறிய விவாதத்தில் அவா் பதிலளித்துப் பேசியதும், மசோதா நிறைவேற்றப்பட்டது. அதைத் தொடா்ந்து அவையை வியாழக்கிழமை வரை ஹரிவன்ஷ் நாராயண் சிங் ஒத்திவைத்தாா்.

விமான நிலையங்கள் பொருளாதார ஒழுங்குமுறை ஆணைய சட்டத் திருத்த மசோதா, மக்களவையில் கடந்த ஜூலை 29-ஆம் தேதி நிறைவேற்றப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com