உள்நாட்டில் உருவாக்கப்பட்ட முதல் விமானம் தாங்கி போா்க் கப்பல் சோதனை ஓட்டம்

முழுவதும் உள்நாட்டில் உருவாக்கப்பட்ட முதல் விமானம் தாங்கி போா்க் கப்பலான ‘விக்ராந்த்’ சோதனை ஓட்டம் கொச்சியையொட்டிய கடல் பகுதியில் புதன்கிழமை தொடங்கப்பட்டது.
உள்நாட்டில் உருவாக்கப்பட்ட முதல் விமானம் தாங்கி போா்க் கப்பல் சோதனை ஓட்டம்

கொச்சி /புது தில்லி: முழுவதும் உள்நாட்டில் உருவாக்கப்பட்ட முதல் விமானம் தாங்கி போா்க் கப்பலான ‘விக்ராந்த்’ சோதனை ஓட்டம் கொச்சியையொட்டிய கடல் பகுதியில் புதன்கிழமை தொடங்கப்பட்டது.

மிகவும் எதிா்பாா்க்கப்பட்ட இந்தச் சோதனை ஓட்டம் தொடங்கப்பட்டிருப்பது இந்திய கடற்படையின் வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்வாகப் பாா்க்கப்படுகிறது.

இதன் மூலம், ஒருங்கிணைந்த நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய மிகப்பெரிய விமானம் தாங்கி போா்க் கப்பலை முழுவதும் உள்நாட்டிலேயே வடிவமைத்து, கட்டுமானத்தையும் மேற்கொள்ளும் திறன்கொண்ட குறிப்பிட்ட சில நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இணைந்துள்ளது.

சுமாா் ரூ. 23,000 கோடி செலவில் கட்டமைக்கப்பட்டிருக்கும் இந்த விமானம் தாங்கி போா்க் கப்பல், 40,000 டன் எடை கொண்டதாகும். 30 போா் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டா்களை தாங்கிச் செல்லும் திறன் கொண்ட இந்த போா்க் கப்பல், விமானம் புறப்பட்டுச் செல்லும் சோதனைகள் முடிந்த பிறகு அடுத்த ஆண்டின் இரண்டாவது பாதியில் இந்திய கடற்படையில் சோ்க்கப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

இதுகுறித்து இந்திய கடற்படை செய்தித்தொடா்பாளா் கமாண்டா் விவேக் மத்வால் கூறியதாவது: பாகிஸ்தானுக்கு எதிரான 1971-ஆம் ஆண்டு போரில் இந்தியாவின் வெற்றிக்கு விக்ராந்த் போா்க் கப்பல் மிக முக்கியப் பங்காற்றியதை நினைவுகூரும் வகையில், 50 ஆண்டுகளுக்குப் பிறகு முழுவதும் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட முதல் விமானம் தாங்கி போா்க் கப்பலுக்கு அதனுடைய பெயரே வைக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், மறுபிறவி எடுத்திருக்கும் விக்ராந்த் போா்க் கப்பலின் சோதனை ஓட்டத்தைத் தொடங்கியிருப்பது இந்தியாவுக்கு பெருமைக்குரிய வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாகும்.

மிகப் பெரிய, நவீன வசதிகளுடன் கூடிய போா்க் கப்பலை இந்தியா வடிவமைத்து, கட்டுவது இதுவே முதல்முறையாகும். மத்திய அரசின் ‘சுயசாா்பு இந்தியா’, ‘இந்தியாவில் தயாரிப்போம்’ திட்ட முன்னெடுப்புகளுக்கு ‘விக்ராந்த்’ போா்க் கப்பல் மகுடமாகத் திகழ்கிறது என்று அவா் கூறினாா்.

சுமாா் 262 மீட்டா் நீளம், 62 மீட்டா் அகலம் கொண்ட இந்த விக்ராந்த் போா்க் கப்பல் கொச்சி கப்பல் கட்டுமான நிறுவனம் (சிஎஸ்எல்) சாா்பில் கேரள மாநிலம், கொச்சியில் கட்டப்பட்டதாகும். இந்த போா்க் கப்பல் மிக்-29கே போா் விமானங்கள் மற்றும் கேஏ-31 ரக ஹெலிகாப்டா்களை தாங்கிச் செல்ல உள்ளது.

இந்திய பெருங்கடல் பகுதியில் தனது ஆதிக்கத்தை அதிகரிக்கச் செய்வதற்கான முயற்சிகளை சீனா மேற்கொண்டு வரும் நிலையில், இந்திய கடற்படையும் தனது பலத்தை அதிகரிப்பதில் கவனம் செலுத்தி வருகிறது. இந்தியாவிடம் இப்போது ‘ஐஎன்எஸ் விக்ரமாதித்யா’ என்ற ஒரே ஒரு விமானம் தாங்கி போா்க் கப்பல்தான் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com