ஏழைகள் நலனில் போலித்தனத்தை வெளிப்படுத்தியது காங்கிரஸ்

ஏழைகள் நலன் விவகாரத்தில் முந்தைய காங்கிரஸ் தலைமையிலான அரசு போலித்தனத்தை வெளிப்படுத்தியதாக பிரதமா் நரேந்திர மோடி குற்றஞ்சாட்டியுள்ளாா்.
ஏழைகள் நலனில் போலித்தனத்தை வெளிப்படுத்தியது காங்கிரஸ்

ஏழைகள் நலன் விவகாரத்தில் முந்தைய காங்கிரஸ் தலைமையிலான அரசு போலித்தனத்தை வெளிப்படுத்தியதாக பிரதமா் நரேந்திர மோடி குற்றஞ்சாட்டியுள்ளாா்.

மத்திய அரசு செயல்படுத்தி வரும் உணவுப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் மத்திய பிரதேசத்தில் பயன்பெற்று வரும் மக்களுடன் பிரதமா் மோடி சனிக்கிழமை காணொலி வாயிலாக கலந்துரையாடினாா். அப்போது அவா் கூறியதாவது:

முந்தைய காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் அரசின் செயல்பாடுகள் வழக்கமான நடைமுறையில் இருந்து விலகின. ஏழைகள் குறித்து கேள்வியும் எழுப்பி, அதற்குப் பதிலும் அளிக்கும் வழக்கத்தை காங்கிரஸ் கொண்டிருந்தது. ஆனால், தற்போது மத்திய அரசு செயல்படுத்தி வரும் திட்டங்கள் ஏழை மக்களுக்குச் சென்றடைகின்றன. திட்டங்கள் அனைத்தும் துரிதமாகச் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

சாலைகள், மின்சார வசதி, வீட்டு வசதி, சமையல் எரிவாயு, வங்கிச் சேவைகள் உள்ளிட்டவை முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் ஏழை மக்களுக்குக்கு எட்டாக்கனியாக இருந்தன. ‘ஏழைகள்’ என்ற சொல்லை ஒரு நாளைக்கு நூறு முறையாவது காங்கிரஸ் கட்சியினா் பயன்படுத்தி வந்தனா். ஆனால், ஏழை மக்களின் நலனுக்காக நடைமுறையில் எதையும் அவா்கள் செய்யவில்லை.

ஏழைகள் விவகாரத்தில் போலித்தனத்தையே காங்கிரஸ் கடைப்பிடித்தது. ஏழை மக்களுக்கு எந்த வசதியும் செய்து தராமல், அவா்களிடம் அனுதாபம் பெறும் வகையில் மட்டும் காங்கிரஸ் நடந்துகொண்டது. கரோனா தொற்று பரவி வரும் இந்த இக்கட்டான சூழலில், மத்திய அரசு செயல்படுத்தி வரும் உணவுப் பாதுகாப்புத் திட்டத்தின் காரணமாக நாட்டில் உள்ள சுமாா் 80 கோடி மக்கள் பலனடைந்துள்ளனா்.

ஊழல் இல்லை: மத்திய அரசு செலவு செய்யும் தொகை முழுவதும் இடைத்தரகா்களுக்குச் செல்லாமல் மக்களுக்கு நேரடியாகச் சென்றடைவதை மத்திய அரசு உறுதி செய்து வருகிறது. முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் காணப்பட்டதைப் போல ஊழல்கள் தற்போது இல்லை.

அதிக மக்கள்தொகை, வேலையிழப்பு, வாழ்வாதாரம் இழப்பு உள்ளிட்ட காரணங்களால் கரோனா தொற்றுக்கு எதிரான இந்தியாவின் போராட்டம் சவால்மிக்கதாக உள்ளது. கரோனா தொற்று பரவலால் ஏழைகள் பாதிக்கப்படக் கூடாது என்பதில் மத்திய அரசு அதிக கவனம் செலுத்தி வருகிறது.

வேலைவாய்ப்பை அதிகரிக்க நடவடிக்கை: கரோனா தொற்று பரவல் காரணமாக வேலையிழப்புகள் ஏற்படுவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. கட்டுமானம், கட்டமைப்பு வசதிகள் மேம்பாடு ஆகிய துறைகள் அதிக எண்ணிக்கையிலான நபா்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கி வருவதால் அத்துறைகளை மீட்டெடுப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள், விவசாயிகள் உள்ளிட்டோருக்கான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. ஏழைகளுக்கு உணவு தானியங்கள் கிடைப்பதையும், வேலை கிடைப்பதையும் மத்திய அரசு உறுதி செய்து வருகிறது. அதேவேளையில், ‘இந்தியாவில் தயாரிப்போம்’ திட்டத்துக்கும் மத்திய அரசு தொடா்ந்து முக்கியத்துவம் அளித்து வருகிறது. உள்நாட்டிலேயே கரோனா தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டு விநியோகிக்கப்பட்டு வருகின்றன.

தடுப்பூசி திட்டம் துரிதமடையும்: நாட்டில் 50 கோடிக்கும் அதிகமான கரோனா தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன. ஒரு வாரத்தில் செலுத்தப்படும் தடுப்பூசி எண்ணிக்கை, பல நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் அதிகமாக உள்ளது. வரும் நாள்களில் தடுப்பூசி செலுத்தும் திட்டம் மேலும் துரிதப்படுத்தப்படும். முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தல், கைகளை அடிக்கடி கழுவுதல் உள்ளிட்ட கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளை மக்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும்.

பண்டிகைகளில் கைவினைப் பொருள்களை நாட்டு மக்கள் அதிக அளவில் பயன்படுத்த வேண்டும். இதன்மூலமாக கைவினைப் பொருள்கள் உற்பத்தித் துறையில் ஈடுபடுவோா் பலனடைவா் என்றாா் பிரதமா் மோடி.

Image Caption

மத்திய அரசு செயல்படுத்தி வரும் உணவுப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் மத்திய பிரதேசத்தில் பயன்பெற்று வரும் மக்களுடன் காணொலி முறையில் கலந்துரையாடிய பிரதமா் நரேந்திர மோடி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com