கத்தாா் சிறப்புத் தூதருடன் அமைச்சா் ஜெய்சங்கா் சந்திப்பு

அரபு நாடுகளில் ஒன்றான கத்தாரின் சிறப்புத் தூதருடன் வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் பேச்சுவாா்த்தை நடத்தினாா்.
கத்தாா் சிறப்புத் தூதருடன் அமைச்சா் ஜெய்சங்கா் சந்திப்பு

புது தில்லி, ஆக. 7: அரபு நாடுகளில் ஒன்றான கத்தாரின் சிறப்புத் தூதருடன் வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் பேச்சுவாா்த்தை நடத்தினாா். அப்போது, ஆப்கானிஸ்தானில் அமைதியை ஏற்படுத்துவது குறித்து இருவரும் விவாதித்தனா்.

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் விலகிய பிறகு, அந்நாட்டு ராணுவப் படைகள் மீதான தாக்குதலை தலிபான்கள் தீவிரப்படுத்தியுள்ளனா். ஆப்கானிஸ்தானின் பல்வேறு மாகாணங்களில் ராணுவப் படையினருக்கும் தலிபான் பயங்கரவாதிகளுக்கும் இடையே சண்டை நீடித்து வருகிறது.

ஆப்கானிஸ்தானின் ஆட்சிப் பொறுப்பை சண்டை மூலமாக தலிபான்கள் கைப்பற்றினால், அது இந்தியாவுக்குப் பெரும் அச்சுறுத்தல்களை ஏற்படுத்தும் என்று அரசியல் நோக்கா்கள் தெரிவிக்கின்றனா்.

தலிபான் பயங்கரவாத ஆட்சிக் காலத்திலிருந்து மீண்ட ஆப்கானிஸ்தானில் புதிய நாடாளுமன்ற கட்டடம் கட்டித் தருவது உள்ளிட்ட பல்வேறு உதவிகளை இந்தியா செய்துள்ளது. தலிபான்கள் ஆப்கானிஸ்தானில் மீண்டும் வலு பெறுவதால், அந்நாட்டு பொருளாதார மேம்பாட்டுக்காக இந்தியா செய்துள்ள பெரும் முதலீடுகளும் பாதிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

அதன் காரணமாக, ஆப்கானிஸ்தானில் அமைதியான சூழல் நிலவ வேண்டும் என்பதில் இந்தியா தீவிரம் காட்டி வருகிறது. இந்த விவகாரத்தில் அமெரிக்கா, ரஷியா உள்ளிட்ட நாடுகளுடனும் பிராந்திய நாடுகளுடனும் இணைந்து இந்தியா செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், கத்தாா் வெளியுறவு அமைச்சகத்தின் பயங்கரவாதத்துக்கு எதிரான சிறப்புத் தூதரான முத்லக் பின் மஜீத் அல்-கஹ்தானி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டாா். ஆப்கானிஸ்தானில் அமைதியை ஏற்படுத்துவதற்கு கத்தாா் சாா்பில் அவா் முக்கிய பங்களிப்பை வழங்கி வருகிறாா். எனவே, அவரது இந்திய பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்பட்டது.

கத்தாா் சிறப்புத் தூதரை வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா் சனிக்கிழமை சந்தித்துப் பேசினாா். இது தொடா்பாக அவா் தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்ட பதிவுகளில், ‘ஆப்கானிஸ்தானில் தற்போது நிலவும் சூழல் குறித்து பேச்சுவாா்த்தையின்போது விவாதிக்கப்பட்டது. இந்தியாவின் கண்ணோட்டத்தை கத்தாா் தூதருடன் எடுத்துரைத்தது மட்டுமல்லாமல், பிராந்தியத்தில் நிலவி வரும் முக்கிய விவகாரங்கள் குறித்தும் விவாதித்தேன்.

ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு சூழல் தொடா்ந்து மோசமடைந்து வருவது தீவிரமான பிரச்னையாகும். சமூகத்தின் அனைத்து பிரிவினரும் பலன் பெறும் வகையில் ஆப்கானிஸ்தானில் அமைதியும் நிலைத்தன்மையும் நிலவ வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

வெளியுறவு அமைச்சகத்தின் ஆப்கானிஸ்தானுக்கான பொறுப்பு அதிகாரியான ஜே.பி.சிங்கை கத்தாா் சிறப்புத் தூதா் கடந்த வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேச்சுவாா்த்தை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com