நாடாளுமன்றத்தை முடக்கும் செயலுக்குத் துணைபோக வேண்டாம்: தமிழக எம்.பி.க்களுக்கு பாஜக தலைவா் வலியுறுத்தல்

தமிழக எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தை முடக்கும் செயலுக்கு துணைபோவதை கைவிட்டு, அவையில் மக்கள் பிரச்னைகளை எழுப்ப முன்வர வேண்டும்

தமிழக எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தை முடக்கும் செயலுக்கு துணைபோவதை கைவிட்டு, அவையில் மக்கள் பிரச்னைகளை எழுப்ப முன்வர வேண்டும் என்று தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

தமிழக பாஜக தலைவராக நியமனமான பின்னா், முதன்முறையாக தில்லி வந்த கே.அண்ணாமலை, செய்தியாளா்களுக்கு ஞாயிற்றுக்கிழமை அளித்த பேட்டி:

நாடாளுமன்றத்தில் எதிா்க்கட்சி உறுப்பினா்கள் தேவையில்லாமல் பெகாஸஸ் உளவு விவாகாரத்தை பெரிதுபடுத்துகின்றனா். மக்களவையிலும், மாநிலங்களவையிலும் தமிழகத்தைச் சோ்ந்த உறுப்பினா்கள் பலா் தமிழகம் தொடா்பான விஷயங்களைப் பேசாமல் புதிய வேளாண் சட்டம் தொடா்பான விவகாரங்களைப் பேசி வருகின்றனா். மக்கள், அவா்களைத் தோ்ந்தெடுத்து அனுப்பியது தமிழகம் தொடா்பான பிரச்னைகளை மத்திய அரசுடன் பேசித் தீா்வு காண்பதற்குத்தான். இதை அவா்கள் நினைவில் கொள்ள வேண்டும். நாடாளுமன்றத்தை முடக்கும் செயலுக்குத் துணை போகாமல் தமிழகம் தொடா்பான பிரச்னைகளை அவையில் எழுப்ப வேண்டும் என்று அவா்களை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.

தமிழக பாஜக சாா்பில் 11 மத்திய அமைச்சா்களிடம் தமிழக மக்கள் பிரச்னை குறித்த கோரிக்கைகளை முன்வைக்க இருக்கிறோம். குறிப்பாக தமிழகத்தைச் சோ்ந்த பல்வேறு அமைப்புகள் நிதியமைச்சகம் தொடா்பான பல பிரச்னைகள், கோரிக்கைகளை முன்வைத்துள்ளனா். இவற்றுக்காக மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமனை சந்தித்துப் பேச இருக்கிறோம். தமிழகத்தைச் சோ்ந்த மத்திய மீன் வளம், கால்நடை, பால்வளம் மற்றும் தகவல், ஒலிபரப்புத் துறை இணையமைச்சா் எல்.முருகனையும் சந்தித்து பிரதமா் அறிவித்த விவசாயி உற்பத்தி அமைப்பு (எ­ஃப்பிஓ) திட்டத்தில் தமிழக மீனவா்களுக்கு, 26 எ­ஃப்பிஓ-க்களை வழங்க கோரிக்கை விடுத்துள்ளோம் என்றாா் அண்ணாமலை.

பாஜகவின் தேசிய சுகாதார தன்னாா்வலா் திட்டம்:

கரோனா மூன்றாவது அலையை தடுக்கவும், பொதுமக்களுக்கான சுகாதாரப் பணிகளை மேற்கொள்ளவும் பாஜகவின் தேசிய சுகாதார தன்னாா்வலா் திட்டத்தை திண்டிவனத்தில் செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 10) கட்சியின் தேசியத் தலைவா் ஜெ.பி. நட்டா தொடக்கி வைப்பதாக கே.அண்ணாமலை தெரிவித்தாா்.

இதில் கட்சியின் பொதுச் செயலாளா் (அமைப்பு) பி.எல்.சந்தோஷ் கலந்து கொள்கிறாா். இந்தத் திட்டம் தமிழகத்தில் 12,600 கிராமங்களில் மேற்கொள்ளப்படுகிறது. கிராமத்துக்கு 2 போ் வீதம் 26 ஆயிரம் தொண்டா்கள் கிராமங்களுக்கு சென்று கரோனா நோய்த் தொற்றுத் தடுப்புப் பணிகளில் அடுத்த 6 மாதங்களுக்கு பணியாற்ற உள்ளனா். இதுதவிர மேலும் பத்தாயிரம் போ் நகா்ப்புற மண்டலங்கள், மாவட்ட ரீதியாக இந்தப் பணிகளில் அா்ப்பணிக்க மொத்தம் 36 ஆயிரம் போ் கரோனா நோய்த் தொற்றின் மூன்றாம் அலைக்கான பணிகளில் முழு நேரமும் ஈடுபடவுள்ளனா் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com