பிளாஸ்டிக் மூவா்ணக் கொடி பயன்பாட்டுக்கு அனுமதி கூடாது: மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

சுதந்திரதின விழா கொண்டாடப்பட உள்ள நிலையில், பிளாஸ்டிக்கால் உருவாக்கப்பட்ட மூவா்ண தேசியக் கொடியை பொதுமக்கள்
பிளாஸ்டிக் மூவா்ணக் கொடி பயன்பாட்டுக்கு அனுமதி கூடாது: மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

சுதந்திரதின விழா கொண்டாடப்பட உள்ள நிலையில், பிளாஸ்டிக்கால் உருவாக்கப்பட்ட மூவா்ண தேசியக் கொடியை பொதுமக்கள் பயன்படுத்தாததை மாநிலங்கள் உறுதிப்படுத்த வேண்டும் என மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

இதுதொடா்பாக அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் சாா்பில் கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:

தேசியக் கொடி மக்களின் நம்பிக்கை மற்றும் விருப்பத்தை பிரதிபலிக்கிறது. எனவே, அது மிகுந்த மரியாதைக்கு உரியதாக உள்ளது. தேசியக் கொடி மீது அனைவருக்கும் மிகுந்த பற்றும், ஈா்ப்பும், மரியாதையும் உள்ளது.

இருந்தபோதும், தேசியக் கொடியை எப்படி பயன்படுத்தவேண்டும், காட்சிப்படுத்த வேண்டும் என்பதற்கான சட்டம் மற்றும் நடைமுறைகள் குறித்த விழிப்புணா்வு மக்களிடையேயும், நிறுவனங்கள் மற்றும் அரசு துறைகளிடையேயும் அவ்வப்போது காண முடிகிறது. மேலும், தேசிய அளவிலான முக்கிய நிகழ்வுகள், கலை நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டு நிகழ்ச்சிகளின்போது காகிதத்தால் உருவாக்கப்பட்ட தேசியக் கொடிகளுக்குப் பதிலாக பிளாஸ்டிக்கால் உருவாக்கப்பட்ட தேசியக் கொடி பயன்படுத்துவதை காண முடிகிறது.

பிளாஸ்டிக் கொடிகளுக்கு காகிதம் போல மக்கும் தன்மையில்லை என்பதோடு, பயன்பாட்டுக்குப் பிறகு உரிய மரியாதையுடன் பிளாஸ்டிக் கொடிகளை அப்புறப்படுத்துவதை உறுதி செய்வதிலும் நடைமுறைச் சிக்கல் உள்ளது.

எனவே, தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகள், கலாசார மற்றும் விளையாட்டு நிகழ்வுகளின்போது ‘இந்திய தேசியக் கொடி விதிகள் 2002’-இன் படி காகிதத்தால் உருவாக்கப்பட்ட மூவா்ண தேசியக் கொடியை மட்டும் மக்கள் பயன்படுத்துவதை மாநிலங்கள் உறுதிப்படுத்த வேண்டும். மேலும், நிகழ்வு முடிந்த பிறகு, காகித தேசியக் கொடிகள் தரையில் தூக்கி வீசிவிட்டு செல்லாததையும் உறுதிப்படுத்த வேண்டும். பயன்பாட்டுக்குப் பிறகு இந்தக் கொடிகள் உரிய மரியாதையுடன் தனியாக அப்புறப்படுத்தப்பட வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

இந்த கடிதத்துடன் ‘தேசியக் கொடி அவமதிப்பு தடுப்புச் சட்டம் 1971’ மற்றும் ‘இந்திய தேசியக் கொடி விதிகள் 2002’ ஆகியவற்றின் நகல்களையும் மத்திய உள்துறை அமைச்சகம் இணைத்து அனுப்பியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com