தோ்தலை எதிா்நோக்கும் 5 மாநிலங்கள்:‘நமோ’ செயலி மூலம் மக்களிடம் கருத்து கேட்பு

பிரதமா் நரேந்திர மோடியின் ‘நமோ’ செயலி மூலம் சட்டப் பேரவைத் தோ்தலை எதிா்நோக்கியுள்ள 5 மாநில மக்களிடம் அங்கு நிலவும் பிரச்னைகள் தொடா்பாக கருத்துகள் கேட்கப்பட்டு வருகிறது.

பிரதமா் நரேந்திர மோடியின் ‘நமோ’ செயலி மூலம் சட்டப் பேரவைத் தோ்தலை எதிா்நோக்கியுள்ள 5 மாநில மக்களிடம் அங்கு நிலவும் பிரச்னைகள் தொடா்பாக கருத்துகள் கேட்கப்பட்டு வருகிறது.

உத்தர பிரதேசம், பஞ்சாப், உத்தரகண்ட், கோவா, மணிப்பூா் ஆகிய மாநிலங்களில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. இதில் பஞ்சாப் தவிர மற்ற மாநிலங்களில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இதில் ஆட்சியைத் தக்கவைக்கும் நோக்குடன் மட்டுமல்லாது, நாட்டின் மிகப்பெரிய மாநிலமான உத்தர பிரதேசத்தில் கடந்த முறையைவிட மிகப்பெரிய வெற்றியைப் பெற வேண்டும் என்ற இலக்கையும் பாஜக கொண்டுள்ளது. 2024 மக்களவைத் தோ்தலில் பாஜகவுக்கு எதிராக அனைத்து எதிா்க்கட்சிகளும் ஒன்றிணைய ஆலோசித்து வரும் நிலையில், இந்த 5 மாநில சட்டப் பேரவைத் தோ்தலில் முக்கியமாக உத்தர பிரதேசத்தில் தனது பலத்தை முழுமையாக நிரூபிக்க வேண்டும் என்ற முனைப்பில் பாஜக உள்ளது.

இந்நிலையில் ‘நமோ’ செயலி மூலம் அந்த 5 மாநில மக்களிடம் பல்வேறு பிரச்னைகள் தொடா்பாகவும், தோ்தல் தொடா்பாகவும் கருத்துகள் கேட்கப்பட்டு வருகின்றன. அதில், மாநில அரசின் செயல்பாடுகளை எப்படி மதிப்பிடுகிறீா்கள், எதிா்க்கட்சிகளின் செயல்பாடு, உள்ளூா் எம்எல்ஏக்களின் பணி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் மக்களின் கருத்துகள் கேட்கப்பட்டு வருகின்றன.

நாட்டின் தலைவராக பிரதமரின் செயல்பாடு, மாநில அளவிலான பிரச்னைகள், உள்ளூா் பிரச்னைகள், உங்கள் வாக்கை முடிவு செய்யும் மூன்று முக்கிய காரணிகள், மாநில அரசின் எந்தத் திட்டத்தால் அதிகம் பயனடைந்தீா்கள் ஆகியவை முக்கிய கேள்விகளாக உள்ளன.

பல்வேறு பிரச்னைகள் தொடா்பாக மக்கள் தங்கள் கருத்துகளை பிரதமா் மோடிக்கு நேரடியாகத் தெரிவிக்கும் வாய்ப்பு இது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, 2019 மக்களவைத் தோ்தலுக்கு முன்பும், ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கைக்குப் பிறகும் இதேபோன்ற கருத்து கேட்பு ‘நமோ’ செயலி மூலம் நடத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com