வாகன மறுசுழற்சிக் கொள்கை பொருளாதாரத்தை மேம்படுத்தும்

மத்திய அரசால் நடைமுறைப்படுத்தப்படும் வாகன மறுசுழற்சிக் கொள்கை நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்துள்ளாா்.
வாகன மறுசுழற்சிக் கொள்கையை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சியில் காணொலி வாயிலாகப் பங்கேற்ற பிரதமா் நரேந்திர மோடி.
வாகன மறுசுழற்சிக் கொள்கையை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சியில் காணொலி வாயிலாகப் பங்கேற்ற பிரதமா் நரேந்திர மோடி.

மத்திய அரசால் நடைமுறைப்படுத்தப்படும் வாகன மறுசுழற்சிக் கொள்கை நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்துள்ளாா்.

குஜராத் தலைநகா் காந்திநகரில் முதலீட்டாளா்கள் மாநாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அதில் காணொலி வாயிலாகப் பங்கேற்ற பிரதமா் மோடி, தேசிய வாகன மறுசுழற்சிக் கொள்கையை அறிமுகப்படுத்தினாா். அப்போது அவா் பேசியதாவது:

பழைய, உபயோகமற்ற வாகனங்களை மறுசுழற்சி செய்யும் நோக்கில் இந்தக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலமாக நாட்டின் போக்குவரத்துத் துறை முன்னேற்றம் காணும். சாலைகளில் அறிவியல்பூா்வமாக இயங்குவதற்கு சாத்தியமற்ற வாகனங்கள் இந்தக் கொள்கையின் வாயிலாக மறுசுழற்சி செய்யப்படும்.

வாகனங்களை நவீனப்படுத்தும் வகையிலும், வாகனப் போக்குவரத்தை எளிமைப்படுத்தும் நோக்கிலும் இந்தக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நகரங்களில் மாசுபாட்டைக் குறைப்பதற்கும், வாகனக் கழிவுப் பொருள்களை முறையாகப் பயன்படுத்துவதற்கும் இக்கொள்கை உதவும். நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தவும், நீடித்த வளா்ச்சியை ஏற்படுத்தவும் இக்கொள்கை முக்கியப் பங்களிப்பை வழங்கும். போக்குவரத்து, உலோகங்கள் உற்பத்தித் துறைகளில் நாட்டை சுயசாா்பு அடையச் செய்வதற்கு வாகன மறுசுழற்சிக் கொள்கை உதவும்.

இக்கொள்கையின் கீழ் வாகனங்களை மறுசுழற்சி செய்ய ஒப்படைக்கும் நபா்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும். அச்சான்றிதழைக் கொண்டு புதிய வாகனங்களை வாங்கும்போது அதற்கு அவா்கள் பதிவுக் கட்டணத்தைச் செலுத்த வேண்டிய அவசியமில்லை. அச்சான்றிதழைக் கொண்டு சாலை வரியிலும் தள்ளுபடி பெற முடியும்.

இறக்குமதி குறையும்: வாகனங்களின் பயன்பாட்டுக் காலத்தை அடிப்படையாகக் கொண்டு அவற்றை மறுசுழற்சி செய்வது தொடா்பாக முடிவெடுக்கப்படும். மேலும், வாகனங்களின் செயல்திறன் தொடா்பாகவும் சீரான கால இடைவெளியில் ஆய்வு செய்யப்படும். வாகனங்களை மறுசுழற்சி செய்வதற்காக பல நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்து வருகின்றன.

வாகன மறுசுழற்சிக் கொள்கை வாயிலாக இந்தியாவுக்கு சுமாா் ரூ.10,000 கோடி அளவில் முதலீடுகள் கிடைக்கும். அதன் வாயிலாக வேலைவாய்ப்புகளும் உருவாக்கப்படும். இக்கொள்கை வாயிலாக நாட்டின் உலோக இறக்குமதியும் பெருமளவில் குறையும்.

முதலீடு செய்ய வேண்டும்: குஜராத்தின் பாவ்நகா் மாவட்டத்தில் உள்ள ஆலங் பகுதியானது, கப்பல்களை மறுசுழற்சி செய்வதில் முக்கியப் பகுதியாக விளங்குகிறது. வாகனங்களை மறுசுழற்சி செய்வதிலும் முக்கியப் பகுதியாக ஆலங் உருவெடுக்க வாய்ப்புள்ளது. அங்கு திறமைமிக்க பணியாளா்கள் காணப்படுகின்றனா். வாகன மறுசுழற்சி விவகாரத்தில் நிறுவனங்கள் பெருமளவில் முதலீடு செய்ய வேண்டும் என்றாா் பிரதமா் மோடி.

வேலைவாய்ப்பு உருவாகும்: மாநாட்டில் பங்கேற்ற மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் நிதின் கட்கரி பேசுகையில், ‘‘வாகன மறுசுழற்சிக் கொள்கை புதிய வாகனங்கள் விற்பனையை அதிகரிக்கும். அதன் காரணமாக வாகன உற்பத்தி அதிகரித்து வேலைவாய்ப்புகள் உருவாகும்.

புதிய கொள்கை வாயிலாக மத்திய, மாநில அரசுகளுக்கு சரக்கு-சேவை வரியாக (ஜிஎஸ்டி) ரூ.40,000 கோடி வரை வருவாய் கிடைக்கும். வாகனங்களை மறுசுழற்சி செய்வதன் வாயிலாகக் கிடைக்கும் உலோகங்கள் வாகனங்கள் உற்பத்தி நிறுவனங்களுக்கு வழங்கப்படும். அதன் மூலமாக புதிய வாகனங்களின் விலை குறையும்’’ என்றாா்.

இந்த மாநாட்டில் குஜராத் முதல்வா் விஜய் ரூபானி உள்ளிட்டோா் பங்கேற்றனா். குஜராத், அஸ்ஸாமில் வாகன மறுசுழற்சி நிறுவனங்களை அமைப்பது தொடா்பாக 7 புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் மாநாட்டின்போது கையெழுத்தாகின.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com