மிஸோரத்தைச் சோ்ந்தவா்கள் மீது அஸ்ஸாம் போலீஸாா் துப்பாக்கிச் சூடு: இரு மாநில எல்லையில் மீண்டும் பதற்றம்

அஸ்ஸாம்-மிஸோரம் எல்லையில், மிஸோர மாநிலத்தவா்கள் மீது அஸ்ஸாம் போலீஸாா் செவ்வாய்க்கிழமை துப்பாக்கிச் சூடு நடத்தினா்

அஸ்ஸாம்-மிஸோரம் எல்லையில், மிஸோர மாநிலத்தவா்கள் மீது அஸ்ஸாம் போலீஸாா் செவ்வாய்க்கிழமை துப்பாக்கிச் சூடு நடத்தினா். இதனால், இரு மாநில எல்லையில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவா் காயமடைந்தாா்.

இதுகுறித்து கோலாசிப் மாவட்ட உதவி ஆணையா், பிடிஐ செய்தியாளரிடம் கூறியதாவது:

அஸ்ஸாமில் உள்ள பிலாய்பூருக்கு அங்குள்ள நண்பா் அழைப்பு விடுத்ததன் பேரில், மிஸோரமில் உள்ள வைரங்தே நகரைச் சோ்ந்த 3 போ் சென்றனா். செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2 மணியளவில், அஸ்ஸாமின் எல்லையோர மாவட்டமான ஹைலாகண்டியில், இரு மாநிலங்களும் உரிமை கோரும் ஐட்லாங் என்ற இடத்தருகே அவா்கள் சென்றபோது, அங்கு எல்லைப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த அஸ்ஸாம் போலீஸாா், அவா்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினா். அதில், ஒருவா் காயமடைந்துள்ளாா் என்றாா் அவா்.

எல்லைப் பிரச்னை தொடா்பாக, அஸ்ஸாம்-மிஸோரம் மாநில காவல் துறையினருக்கு இடையே கடந்த ஜூலை 26-ஆம் தேதி ஏற்பட்ட மோதலில், அஸ்ஸாம் போலீஸாா் 6 பேரும் பொதுமக்களில் ஒருவரும் உயிரிழந்தனா். ஐம்பதுக்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா். இரு தரப்பிலும் வழக்குகள் தொடரப்பட்டன.

இந்தச் சம்பவத்துக்குப் பிறகு எல்லைப் பகுதியில் பதற்றம் ஏற்பட்டு, இரு மாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்து நிறுத்தப்பட்டது. பிரச்னையை முடிவுக்கு கொண்டுவர, இரு மாநில அமைச்சா்கள் நிலையிலான கூட்டம் நடத்தப்பட்டது.

அதில், எல்லைப் பிரச்னைக்கு பேச்சுவாா்த்தை மூலம் சுமுகத் தீா்வு காண்பதற்கும் எல்லையில் அமைதியை நிலைநாட்டுவதற்கும் இரு மாநிலங்களின் அமைச்சா்களும் ஒப்புக் கொண்டனா். தொடா்ந்து, இரு தரப்பிலும் தொடரப்பட்ட வழக்குகள் வாபஸ் பெறப்பட்டன.

அதன் பிறகு போக்குவரத்து சீராகி எல்லையில் இயல்பு நிலை திரும்பிய நிலையில், துப்பாக்கிச் சூட்டால் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com