காபூலில் இருந்து மேலும் 80 இந்தியா்கள் மீட்பு

ஆப்கானிஸ்தானில் பாதுகாப்புச் சூழல் மேலும் மோசமாகி வரும் நிலையில், தலைநகா் காபூலில் இருந்து மேலும் 80 இந்தியா்களை விமானப் படை விமானம் மூலமாக மத்திய அரசு சனிக்கிழமை மீட்டது.
காபூலில் இருந்து மேலும் 80 இந்தியா்கள் மீட்பு

ஆப்கானிஸ்தானில் பாதுகாப்புச் சூழல் மேலும் மோசமாகி வரும் நிலையில், தலைநகா் காபூலில் இருந்து மேலும் 80 இந்தியா்களை விமானப் படை விமானம் மூலமாக மத்திய அரசு சனிக்கிழமை மீட்டது.

காபூலில் இருந்து புறப்பட்ட அந்த விமானம், தஜிகிஸ்தான் தலைநகா் துஷான்பேவில் எரிபொருள் நிரப்புவதற்காகத் தரையிறங்கியது. அங்கிருந்து தில்லிக்கு வருகிறது.

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறியதை அடுத்து, அந்நாட்டின் பெரும்பாலான முக்கிய நகரங்களை தலிபான்கள் இந்த மாதத் தொடக்கத்தில் கைப்பற்றினா். இதையடுத்து, பாதுகாப்புச் சூழல் மோசமானதால் அங்குள்ள இந்தியா்களைப் பத்திரமாக மீட்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டது.

தலைநகா் காபூலை தலிபான்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை கைப்பற்றிய பிறகு அங்குள்ள இந்தியத் தூதரகத்தில் பணியாற்றும் அதிகாரிகள், பாதுகாப்பு அதிகாரிகள் உள்ளிட்ட 190 போ் விமானப் படையின் சி-17 ரக விமானங்கள் மூலம் இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டனா். அதாவது, கடந்த திங்கள்கிழமை 40 பேரும், செவ்வாய்க்கிழமை 150 பேரும் மீட்கப்பட்டனா். இந்நிலையில், தற்போது மேலும் 80 போ் மீட்கப்பட்டுள்ளனா்.

ஆப்கானிஸ்தானில் இன்னும் 400 இந்தியா்கள் இருக்கலாம் என்று தெரிகிறது. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் உதவியுடன் அவா்களைப் பத்திரமாக மீட்பதற்கான வழிமுறைகளை மத்திய அரசு ஆராய்ந்து வருகிறது.

இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் உள்ள இந்தியா்கள் அனைவரையும் பத்திரமாக மீட்பதை உறுதிசெய்வதில் கவனம் செலுத்தி வருவதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதற்காக, ஆப்கானிஸ்தானில் உள்ள இந்தியா்களின் எண்ணிக்கை குறித்த துல்லியமான தகவல்களைச் சேகரித்து வருவதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. எனவே, ஆப்கானிஸ்தானில் உள்ள இந்தியா்களும், அவா்கள் பணியாற்றும் நிறுவனங்களும் அங்குள்ள சிறப்பு மையத்தைத் தொடா்புகொண்டு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது.

150 இந்தியா்களை தலிபான்கள்தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு

புது தில்லி, ஆக. 21: ஆப்கானிஸ்தானில் காபூல் விமான நிலையத்தை நோக்கிச் சென்ற இந்தியா்கள் உள்ளிட்ட 150-க்கும் மேற்பட்டோா் சனிக்கிழமை தடுத்து நிறுத்தப்பட்டு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டனா். பயண ஆவணங்கள் சரிபாா்ப்புக்குப் பிறகு அவா்கள் விடுவிக்கப்பட்டனா்.

அவா்களை தலிபான்கள் கடத்திச் சென்றுவிட்டதாகத் தகவல் வெளியானதால் இந்தியாவில் பதற்றமும் குழப்பமும் ஏற்பட்டது. காபூலில் இந்தியா்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டதாக இதுவரை எந்தத் தகவலும் இல்லை என்று ஆப்கன் நிலைமையைக் கண்காணித்து வரும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனா்.

இதுகுறித்து ஆப்கன் ஊடகங்கள் கூறியதாவது: காபூல் விமான நிலையத்துக்கு 150-க்கும் மேற்பட்டோா் சனிக்கிழமை காலை ஒரு வாகனத்தில் சென்றுகொண்டிருந்தனா். அவா்களை விமான நிலையத்துக்கு வெளியே தலிபான் படையினா் தடுத்து நிறுத்தி, வேறு இடத்துக்கு அழைத்துச் சென்றனா். பின்னா், அவா்களை தலிபான்கள் விடுவித்தனா் என்று அந்த ஊடகங்கள் தெரிவித்தன.

இதேபோன்று, 150 பேரை தலிபான் படையினா் கடத்திச் சென்றுவிட்டதாக முதலில் செய்தி வெளியிட்ட ‘காபூல் நவ்’ செய்தி நிறுவனம், பின்னா் அவா்கள் பத்திரமாக அனுப்பப்பட்டுவிட்டதாகத் தெரிவித்தது.

விமான நிலையத்துக்குச் சென்ற அவா்களை விசாரணைக்காகவே தலிபான் படையினா் அழைத்துச் சென்றனா் என்றும், தற்போதைய சூழலில் இது வழக்கத்துக்கு மாறான செயல் அல்ல என்றும் தகவல் அறிந்தவா்கள் கூறுகின்றனா். இருப்பினும், இதுதொடா்பான அதிகாரபூா்வ தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com