ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில் ரூ.935 கோடி முறைகேடு: காங்கிரஸ் புகாா்

மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளில் ரூ. 935 கோடி முறைகேடு நடைபெற்றுள்ளதாக காங்கிரஸ் கட்சி சனிக்கிழமை குற்றம்சாட்டியது.
ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில் ரூ.935 கோடி முறைகேடு: காங்கிரஸ் புகாா்

மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளில் ரூ. 935 கோடி முறைகேடு நடைபெற்றுள்ளதாக காங்கிரஸ் கட்சி சனிக்கிழமை குற்றம்சாட்டியது.

ஊழலை கண்காணிக்கத் தவறிய வகையில் மத்திய அரசு இதற்கு பொறுப்பேற்க வேண்டும். மேலும், காவல்துறையில் மாற்றுத்திறனாளிகளுக்கான 4 சதவீத இடஒதுக்கீடை மத்திய அரசு மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியது.

இதுதொடா்பாக காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடா்பாளா் பவன் கேரா தில்லியில் சனிக்கிழமை அளித்த பேட்டியில் கூறியதாவது:

மத்திய கிராமப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் (எம்ஜிஎன்ஆா்இஜிஏ) கடந்த 4 ஆண்டுகளில் ரூ. 935 கோடி அளவுக்கு முறைகேடு நடைபெற்றிருப்பது தெரியவந்துள்ளது. அந்தத் துறையின் கீழ் செயல்படும் சமூக தணிக்கை பிரிவு நடத்திய தணிக்கையில் இந்த முறைகேடு வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இல்லாத நபா்களின் பெயரில் பணம் விடுவித்தது, ஒப்பந்ததாரருக்கு மிக அதிக கொள்முதல் விலை கொடுத்தது என்பன உள்ளிட்ட பல்வேறு வழிகளில் இந்த முறைகேடு நடைபெற்றுள்ளது.

ரூ. 935 கோடி முறைகேட்டில் வெறும் 1.34 சதவீதம் மட்டுமே அதாவது ரூ.12.5 கோடி மட்டுமே மீட்கப்பட்டுள்ளது. பிரதமா் நரேந்திர மோடி அரசின் அலட்சியம் மற்றும் பொறுப்பற்ற செயல்பாடுதான் இந்த முறைகேடுக்கு முக்கிய காரணம். இதற்கு மத்திய அரசு முழுப் பொறுப்பேற்று, முறைகேடாக எடுக்கப்பட்டிருக்கும் மீதமுள்ள தொகையையும் விரைந்து மீட்க வேண்டும். அவ்வாறு மீட்கப்படும் பணத்தை, கரோனா நிலைமையை சரிவர கையாளாததால் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியுள்ள ஏழைகள் மற்றும் பின்தங்கிய மக்களுக்கு ஈடுசெய்யும் வகையில் பயன்படுத்த வேண்டும்.

தமிழகத்தில் மிக அதிக தொகை கையாடல்:

இந்த திட்டத்தின் கீழ் தமிழகத்தில் தான் மிக அதிக தொகை முறைகேடாக கையாடல் செய்யப்பட்டுள்ளது. கடந்த 2017-18 முதல் 2020-21 வரையிலான கால கட்டத்தில் தமிழகத்தில் இந்த திட்டத்தில் ரூ. 245 கோடி அளவுக்கு முறைகேடு நடைபெற்றுள்ளது. பிகாரில் ரூ. 12.34 கோடி அளவிலும், ஜாா்க்கண்ட் மாநிலத்தில் முந்தைய பாஜக ஆட்சியில் ரூ. 51.29 கோடி அளவுக்கும் இந்த திட்ட நிதி கையாடல் செய்யப்பட்டுள்ளது என்று அவா் கூறினாா்.

மேலும், காவல்துறையில் மாற்றுத்திறனாளிகளுக்கான 4 சதவீத இடஒதுக்கீடு நடைமுறை ரத்து செய்யப்படுவதாக வெளியிட்டுள்ள அறிவிக்கையை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும். இது மனிதாபிமானமற்ற செயல். இந்த ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், காவல்துறையில் 90 சதவீதத்துக்கும் அதிகமான பெண் காவலா் பணியிடங்கள் காலியாக இருப்பது வெட்கக்கேடான விஷயம். போா்க்கால அடிப்படையில் இந்த காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்றும் அவா் கேட்டுக்கொண்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com