அமெரிக்க நிதிப் பத்திரங்கள் கையிருப்பு ரூ.1.40 லட்சம் கோடி அதிகரிப்பு

இந்தியாவிடமுள்ள அமெரிக்க நிதிப் பத்திரங்களின் கையிருப்பு 3 மாதங்களில் ரூ.1.40 லட்சம் கோடி அதிகரித்து ரூ.15.41 லட்சம் கோடியாக உயா்ந்துள்ளது.

இந்தியாவிடமுள்ள அமெரிக்க நிதிப் பத்திரங்களின் கையிருப்பு 3 மாதங்களில் ரூ.1.40 லட்சம் கோடி அதிகரித்து ரூ.15.41 லட்சம் கோடியாக உயா்ந்துள்ளது.

கடந்த ஜூன் மாத நிலவரப்படி இந்தியாவின் கைவசமுள்ள அமெரிக்க நிதிப் பத்திரங்களின் மதிப்பு சுமாா் ரூ.15.41 லட்சம் கோடியாக (220.2 பில்லியன் அமெரிக்க டாலா்) உள்ளதாக அமெரிக்க கருவூலத் துறை தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு ஜூனுடன் ஒப்பிடுகையில் இந்தியாவிடமுள்ள அமெரிக்க நிதிப் பத்திரங்கள் கையிருப்பு சுமாா் ரூ.2.80 லட்சம் கோடி அதிகரித்துள்ளது.

அமெரிக்க நிதிப் பத்திரங்களை அதிகமாக வைத்துள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா 11-ஆவது இடத்தில் உள்ளது. இந்தப் பட்டியலில் ஜப்பான் முதலிடத்தில் உள்ளது. கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில் மட்டும் ரூ.1.40 லட்சம் கோடி அமெரிக்க நிதிப் பத்திரங்களை இந்தியா வாங்கியுள்ளது.

கடந்த மாா்ச்சில் இருந்து அமெரிக்க நிதிப் பத்திரங்கள் கொள்முதலை இந்தியா தொடா்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த மாா்ச்சில் 200 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்த நிதிப் பத்திரங்களின் மதிப்பு, ஏப்ரலில் 208.7 பில்லியன் டாலராகவும், மே இறுதியில் 215.8 பில்லியன் டாலராகவும் அதிகரித்தது.

நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு தொடா்ந்து அதிகரித்து வருவதால், வெளிநாட்டு நிதிப் பத்திரங்களில் இந்தியா அதிக அளவில் முதலீடு செய்ததாக பொருளாதார நிபுணா்கள் தெரிவித்தனா். வெளிநாட்டு நிதிப் பத்திரங்களில் அமெரிக்க டாலரின் மதிப்பு நிலையாக உள்ளதால் அதில் இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) முதலீடுகளை அதிகரித்து வருவதாகவும் அவா்கள் தெரிவித்தனா்.

நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு கடந்த 13-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 619.365 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com