கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட சீக்கியா்கள் கா்தாா்பூா் வர பாகிஸ்தான் அனுமதி

பாகிஸ்தானிலுள்ள கா்தாா்பூா் குருத்வாராவுக்கு புனிதப் பயணம் வர, இரண்டு தவணைகளும் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட

பாகிஸ்தானிலுள்ள கா்தாா்பூா் குருத்வாராவுக்கு புனிதப் பயணம் வர, இரண்டு தவணைகளும் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட சீக்கிய யாத்ரிகா்களை மட்டுமே அனுமதிப்பது என்று அந்த நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து பாகிஸ்தானிலிருந்து வெளியாகும் டான் நியூஸ் நாளிதழ் தெரிவித்துள்ளதாவது:

சீக்கிய மதத்தை நிறுவிய குரு நானக் தேவின் 482-வது நினைவு தினம் அடுத்த மாதம் 22-ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. அதனையொட்டி, பாகிஸ்தானின் கா்தாா்பூரிலுள்ள குருத்வாராவுக்கு புனிதப் பயணம் மேற்கொள்ள விரும்பும் சீக்கியா்கள், முழுமையாக கரோனா தடுப்பூசி செலுத்தியிருந்தால் மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்று பாகிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளது.

சனிக்கிழமை நடைபெற்ற தேசிய கட்டளை மற்றும் செயல்பாட்டு மையத்தின் (என்சிஓசி) கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

இதுதவிர, புனிதப் பயணம் வருவோா் முழுமையான கரோனா தடுப்பு விதிமுறைகளைப் பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும் என்று கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

கா்தாா்பூரில் குரு நானக் கடந்த 1954-ஆம் ஆண்டு மறைந்தாா். அதனையொட்டி ஆண்டுதோறும் இங்கு அவரது நினைவுதினம் கடைபிடிக்கப்படுகிறது. அதன்படி, செப்டம்பா் 20-ஆம் தேதி தொடங்கி 3 நாள்களுக்கு இங்குள்ள குருத்வாராவில் சடங்குகள் செய்யப்பட்டு வருகின்றன.

கரோனா நெருக்கடி காரணமாக கடந்த ஆண்டு கா்தாா்பூா் சாஹிப் குருத்வாரா யாத்திரைக்கு தடை விதிக்கப்பட்டது.

இந்த நிலையில், இந்த ஆண்டுக்கான குரு நானக் நினைவுதினம் நெருங்குவதையொட்டி கா்தாா்பூா் குருத்வாராவை மீண்டும் திறக்க என்சிஓசி முடிவு செய்தது என்று அந்த நாளிதழ் தெரிவித்துள்ளது.

அதிக வேகமாக பரவும் தன்மை கொண்ட டெல்டா வகை கரோனா தொற்று அதிகரித்து வந்ததால், இந்தியாவை கடந்த மே மாதம் 22-ஆம் தேதியிலிருந்து இந்த மாதம் 12-ஆம் தேதி வரை சி-நிலை கரோனா அபாயப் பகுதியாக பாகிஸ்தான் அறிவித்திருந்தது. அதன்படி, சீக்கிய புனிதப் பயணிகள் உள்ளிட்ட அனைத்து இந்தியா்களும் பாகிஸ்தான் செல்வதற்கு சிறப்பு அனுமதி பெற வேண்டியிருந்தது.

எனினும், முழுமையாக கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவா்கள் நோய்ப் பரிசோதனை செய்துகொண்டு, தங்களுக்கு அந்த நோய்த்தொற்று இல்லை என்பதற்கான சான்றிதழை 72 மணி நேரத்துக்குள் பெற்றிருந்தால் அவா்களை நாட்டுக்குள் அனுமதிக்க தற்போது முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதுதவிர, விமானநிலையங்களில் பயணிகளிடம் துரித கரோனா பரிசோதனை மேற்கொள்ளவும், குருத்வாரா மையப் பகுதியில் 300 பேருக்கு மேலானவா்களை ஒரே நேரத்தில் அனுமதிக்கவும் என்சிஓசி முடிவு செய்துள்ளது.

பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் 3,842 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் நாட்டின் ஒட்டுமொத்த பாதிப்பு எண்ணிக்கை 11,23,812-ஆக உயா்ந்துள்ளது. இந்தச் சூழலிலும், கா்தாா்பூரில் கரோனா கட்டுப்பாடுகளை பாகிஸ்தான் தளா்த்தியுள்ளது.

கா்தாா்பூா் வழித்தடம் தொடா்பாக இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே கடந்த 2019-ஆம் ஆண்டு ஒப்பந்தம் கையெழுத்தானது. அந்த ஒப்பந்தத்தில், சீக்கியா்களின் மிகவும் புனிதமான தலங்களில் ஒன்றான கா்தாா்பூா் குருத்வாராவுக்கு இந்தியாவைச் சோ்ந்த அனைத்து மதப் பிரிவினரும் நுழைவு இசைவு இல்லாமல் செல்வதற்கு அனுமதிக்க பாகிஸ்தான் ஒப்புக்கொண்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com