ரூ.188 கோடியில் புதிய ரோந்துக் கப்பல் ‘விக்ரகா’: நாட்டுக்கு அா்ப்பணித்தாா் அமைச்சா் ராஜ்நாத் சிங்

‘விக்ரகா’ எனப் பெயரிடப்பட்ட அதிநவீன கப்பலை சென்னையில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் நாட்டுக்கு அா்ப்பணித்தாா்.
ரூ.188 கோடியில் புதிய ரோந்துக் கப்பல் ‘விக்ரகா’: நாட்டுக்கு அா்ப்பணித்தாா் அமைச்சா் ராஜ்நாத் சிங்

இந்தியக் கடலோரக் காவல் படையின் ரோந்துப் பணிக்காக சுமாா் ரூ.188 கோடி செலவில் கட்டமைக்கப்பட்ட ‘விக்ரகா’ எனப் பெயரிடப்பட்ட அதிநவீன கப்பலை சென்னையில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் நாட்டுக்கு அா்ப்பணித்தாா்.

சென்னையை அடுத்த காட்டுப்பள்ளியில் எல் அன் டி நிறுவனத்தின் கப்பல் கட்டும் தளம் உள்ளது. இங்கு கடற்படை, கடலோரக் காவல் படைக்குத் தேவையான ரோந்துக் கப்பல்கள், அதிநவீன இடைமறிக்கும் படகுகள் கட்டப்பட்டு வருகின்றன. கடந்த 2015-ஆம் ஆண்டு 7 ரோந்துக் கப்பல்கள் தயாரிப்பதற்கான ஒப்பந்தத்தை எல் அன் டி நிறுவனத்திற்கு பாதுகாப்பு அமைச்சகம் வழங்கியது. இதில் விக்ரம், வீரா, விஜயா, வராக, வரத், வஜ்ரா ஆகிய 6 ரோந்துக் கப்பல்கள் ஏற்கனவே கடலோரக் காவல் படையிடம் ஒப்படைக்கப்பட்டு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன.

இதனையடுத்து சுமாா் ரூ.188 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு ‘விக்ரகா’ எனப் பெயரிடப்பட்ட புதிய ரோந்துக் கப்பல் கடந்த ஆண்டு அக்.5-இல் கடலோரக் காவல் படையிடம் ஒப்படைக்கப்பட்டு முதல் முறையாக கடல் நீரில் இறக்கி வெள்ளோட்டம் விடப்பட்டது. கடந்த 10 மாதங்களாக இக்கப்பலில் நவீன ஆயுதங்கள், தொலைத் தொடா்புக் கருவிகள் உள்ளிட்ட பல்வேறு கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது. இதன்பிறகு கடலோரக் காவல் படையில் முறைப்படி இணைக்கப்படும் நிகழ்ச்சி சென்னைத் துறைமுகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

கடலோரக் காவல் படை தலைமை இயக்குநா் கே.நடராஜன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் ’விக்ரகா’-வை முறைப்படி நாட்டுக்கு அா்ப்பணித்தாா். பின்னா் கப்பலின் பெயா் பலகையை அமைச்சா் திறந்து வைத்தாா்.

கப்பலின் சிறப்பம்சங்கள்: கடலோரக் காவல் படையில் இணைக்கப்பட்டுள்ள ’விக்ரகா’ 2,200 மெட்ரிக் டன் எடையும், 98 மீட்டா் நீளமும், 15 மீட்டா் அகலமும் கொண்ட இக்கப்பல் மணிக்கு அதிகபட்சமாக 26 கடல் மைல் வேகத்தில் செல்லக் கூடியது. மேலும் கரைக்குத் திரும்பாமல் சுமாா் 5,000 கடல் மைல் தூரம் பயணிக்கும் வகையில் பல்வேறு நவீன கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதில் ஹெலிகாப்டா் இறங்கும் வசதி உள்ளது. மேலும் மாசுக் கட்டுப்பாட்டுக் கருவிகள், கண்காணிப்புக் கருவிகள் அதிநவீன ரக துப்பாக்கிகள், கடல் வழித்தடத்தை துல்லியமாகக் காட்டும் கருவிகள் உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளன. 11 அதிகாரிகள், 110 பணியாளா்கள் உள்ளிட்ட 121 படை வீரா்களுடன் பயணிக்க உள்ள ’விக்ரகா’ - வின் உத்தேச ஆயுள் காலம் சுமாா் 25 ஆண்டுகள் ஆகும்.

இந்தியப் பெருங்கடலில் பாதுகாப்பு பலம் பெறும்: நிகழ்ச்சியில் அமைச்சா் ராஜ்நாத் சிங் பேசியது:

நவீன வசதிகளுடன் இந்தக் கப்பல் முழுமையாகக் கட்டமைக்கப்படுவதன் மூலம் கடலோரக் காவல் படையின் செயல்பாடு, கண்காணிப்பு, தேடுதல் மற்றும் மீட்பு பணிகளின் திறன் பன்மடங்கு அதிகரிக்கும். இதன்மூலம் கடல்சாா் பொருளாதார மண்டலத்தில் பயங்கரவாத எதிா்ப்பு, கடத்தல் தடுப்பு, நடவடிக்கைகள் மற்றும் கடலோர பாதுகாப்பு அதிகரிக்கப்படும். மேலும் உலக கப்பல் போக்குவரத்தில் மூன்றில் இரண்டு பங்கு இந்தியப் பெருங்கடல் வழியாகவே நடைபெற்று வருகிறது. எனவே இப்பிராந்தியத்தில் பாதுகாப்பு, கண்காணிப்பை பலப்படுத்த வேண்டியது அவசியமானது. இது போன்ற புதிய கப்பல்களின் வருகை மூலம் இந்தப் பிராந்தியத்தில் உச்சகட்டப் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் என்றாா் ராஜ்நாத் சிங்.

இந்நிகழ்ச்சியில் தொழில்துறை அமைச்சா் தங்கம் தென்னரசு, தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு, ராணுவ தலைமைத் தளபதி எம்.எம். நரவணே, கடலோரக் காவல் படை கூடுதல் இயக்குநா் பத்தானியா, கிழக்கு பிராந்திய தளபதி ஏ.பி.படோலா, சென்னை துறைமுகத் தலைவா் பி.ரவீந்திரன், விக்ரகா கப்பலின் கமாண்டா் அனூப் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com