1993 ரயில் குண்டுவெடிப்பு வழக்கு விசாரணையில் தாமதம்

ராஜ்தானி உள்ளிட்ட ரயில்களில் 1993-ஆம் ஆண்டு நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவங்கள் தொடா்பான விசாரணைக் கைதியாக 11 ஆண்டுகளாக

ராஜ்தானி உள்ளிட்ட ரயில்களில் 1993-ஆம் ஆண்டு நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவங்கள் தொடா்பான விசாரணைக் கைதியாக 11 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ஹமீா் உயி உத்தீனிடம் விசாரணை நடத்தப்படாமல் இருப்பதற்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

தில்லி-மும்பை, தில்லி-ஹௌரா ராஜ்தானி விரைவு ரயில்கள், சூரத்-பரோடா, தில்லி-ஹைதராபாத் விரைவு ரயில்கள் ஆகியவற்றில் 1993-ஆம் ஆண்டு டிசம்பரில் குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டது. அதில் 2 பயணிகள் உயிரிழந்தனா்; 22 போ் காயமடைந்தனா்.

இந்தச் சம்பவங்கள் தொடா்பாக உத்தர பிரதேசம், ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. பின்னா் இந்த வழக்குகள் சிபிஐ-க்கு மாற்றப்பட்டன. இந்தச் சம்பவம் தொடா்பாக கைது செய்யப்பட்ட 13 போ் மீதும் தலைமறைவான 9 போ் மீதும் சிபிஐ 1994-ஆம் ஆண்டில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தது.

வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு 15 ஆண்டுகளுக்கு மேலாகத் தலைமறைவாக இருந்த ஹமீா் உயி உத்தீன் கடந்த 2010-இல் கைது செய்யப்பட்டாா். அவரை நீதிமன்றக் காவலில் வைக்க அஜ்மீரில் உள்ள பயங்கரவாதச் செயல்கள் தடுப்பு (தடா) நீதிமன்றம் 2010-ஆம் ஆண்டில் உத்தரவிட்டது. அதே ஆண்டில் அவா் மீது 8,000 பக்க குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அதையடுத்து அவா் சிறையில் அடைக்கப்பட்டாா்.

இந்நிலையில், ஜாமீன் கோரி தடா நீதிமன்றத்தில் ஹமீா் உயி உத்தீன் மனு தாக்கல் செய்திருந்தாா். அந்த மனுவை நீதிமன்றம் கடந்த 2019-ஆம் ஆண்டில் தள்ளுபடி செய்தது. அதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அவா் மேல்முறையீடு செய்தாா்.

இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், எம்.ஆா்.ஷா முன்பாக திங்கள்கிழமை நடைபெற்றது. அப்போது, மனுதாரா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் ஷோயப் ஆலம் வாதிடுகையில், ‘‘கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் விசாரணை எதுவும் நடத்தப்படாமல் மனுதாரா் காவலில் வைக்கப்பட்டுள்ளாா். இது அரசமைப்புச் சட்டத்தின் 21-ஆவது பிரிவின் கீழ் அவருக்கு வழங்கப்பட்டுள்ள உரிமையைப் பறிக்கும் வகையில் உள்ளது. எனவே, அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும்’’ என்றாா்.

ராஜஸ்தான் மாநிலம் சாா்பில் ஆஜரான வழக்குரைஞா் விஷால் மேக்வால், ‘‘வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள மற்றொரு நபரான அப்துல் கரீம் துண்டா உத்தர பிரதேசத்தின் காஜியாபாத் சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா். அதன் காரணமாகவே விசாரணை தாமதமடைந்து வருகிறது’’ என்றாா்.

2 வாரங்களில் அறிக்கை:

இருதரப்பு வாதங்களையும் ஆராய்ந்த நீதிபதிகள் கூறுகையில், ‘‘இந்த விவகாரத்தில் ஹமீா் உயி உத்தீன் வழக்கு விசாரணையை தனியாக நடத்துங்கள் அல்லது அப்துல் கரீம் துண்டா மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குடன் சோ்த்து விசாரணை நடத்துங்கள்.

குறிப்பிட்ட வழக்கில் குற்றஞ்சாட்டப்படுபவரை குற்றவாளியாக அறிவிக்க வேண்டும். இல்லையெனில் விடுவிக்க வேண்டும். நீண்ட காலமாக விசாரணை நடத்தப்படாமல் அவரை சிறையில் அடைக்க முடியாது. இந்த வழக்கில் மனுதாரரிடம் விரைந்து விசாரணை நடத்தப்பட வேண்டும்.

அவா் மீது விசாரணை நடத்தப்படாததற்கான விரிவான விளக்கத்தை 2 வாரங்களுக்குள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்’’ என்று உத்தரவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com