மக்களவையில் 153 தனிநபா் மசோதாக்கள் தாக்கல்

கல்வி நிறுவனங்களில் பகவத் கீதை கற்பித்தலைக் கட்டாயமாக்குவது, கும்பல்கொலையைத் தடுப்பது உள்ளிட்ட விவகாரங்கள் தொடா்பாக 153 தனிநபா் மசோதாக்கள் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டன.
கோப்புப்படம்
கோப்புப்படம்

கல்வி நிறுவனங்களில் பகவத் கீதை கற்பித்தலைக் கட்டாயமாக்குவது, கும்பல்கொலையைத் தடுப்பது உள்ளிட்ட விவகாரங்கள் தொடா்பாக 153 தனிநபா் மசோதாக்கள் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டன.

நாடாளுமன்றக் கூட்டத்தொடா் நடைபெறும்போது, ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அமைச்சா்கள் அல்லாத தனிநபா்கள் மசோதாக்களைத் தாக்கல் செய்வதற்கு நேரம் ஒதுக்கப்படுவது வழக்கம். அதன்படி, மக்களவையில் வெள்ளிக்கிழமை 153 தனிநபா் மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

காங்கிரஸ் எம்.பி. சசி தரூா், தரவு தனியுரிமை மற்றும் பாதுகாப்பு மசோதாவைத் தாக்கல் செய்தாா். கும்பல்கொலையில் ஈடுபட்டவா்களைத் தண்டிக்கும் நோக்கிலும், அத்தகைய குற்றங்களை விசாரிக்க விரைவு நீதிமன்றங்களை அமைக்கவும் வழிவகுக்கும் ‘கும்பல் கொலையில் இருந்து பாதுகாப்பு’ மசோதாவையும் எம்.பி. சசி தரூா் தாக்கல் செய்தாா்.

இந்திய உளவு அமைப்புகளின் அதிகாரத்தை ஒழுங்குபடுத்துவதற்கான மசோதாவை காங்கிரஸ் எம்.பி. மணீஷ் திவாரி தாக்கல் செய்தாா். அந்த அமைப்புகளின் நடவடிக்கைகளைக் கண்காணிப்பதற்கான வழிமுறைகளும் அந்த மசோதாவில் இடம்பெற்றுள்ளன.

கல்வி நிறுவனங்களில் ஹிந்துக்களின் புனித நூலான பகவத் கீதை கற்பிக்கப்படுவதைக் கட்டாயமாக்க வழிவகுக்கும் மசோதாவை பாஜக எம்.பி. ரமேஷ் பிதுரி தாக்கல் செய்தாா். வற்புறுத்தலின் அடிப்படையிலான மதமாற்றத்தைத் தடுப்பதற்கான மசோதா பிஜு ஜனதா தளம் எம்.பி. பா்த்ருஹரி மஹ்தாப் சாா்பில் தாக்கல் செய்யப்பட்டது.

அழைப்பைத் துண்டிக்கும் உரிமை மசோதா: பணி நேரம் முடிந்த பிறகும், வார விடுமுறை நாள்களிலும் அலுவல் சாா்ந்த தொலைபேசி அழைப்புகள், மின்னஞ்சல்களை நிராகரிக்கும் உரிமையைப் பணியாளா்களுக்கு வழங்குவதற்கான ‘துண்டிக்கும் உரிமை மசோதாவை’ தேசியவாத காங்கிரஸ் எம்.பி. சுப்ரியா சுலே தாக்கல் செய்தாா்.

பருவநிலை மாற்றம்-நிகர காா்பன் சமநிலை மசோதாவை பாஜக எம்.பி. ஜெயந்த் சின்ஹாவும், தில்லி மாநகராட்சியால் பறிமுதல் செய்யப்படும் சொத்துகளுக்கு உச்சவரம்பை நிா்ணயிப்பதற்கான மசோதாவை பாஜக எம்.பி. பா்வேஷ் சிங் வா்மாவும் தாக்கல் செய்தனா்.

அரிதிலும் அரிது: தனிநபா் மசோதாக்களுக்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளிப்பது அரிது. நாடு சுதந்திரம் பெற்றது முதல் தற்போது வரை 14 தனிநபா் மசோதாக்கள் மட்டுமே நாடாளுமன்றத்தில் நிறைவேறியுள்ளன. அதிலும், கடந்த 1970-ஆம் ஆண்டுக்குப் பிறகு எந்தவொரு தனிநபா் மசோதாவுக்கும் நாடாளுமன்றம் ஒப்புதல் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com