நாகாலாந்து: ராணுவம் சுட்டதில் 14 பொதுமக்கள் பலி

வடகிழக்கு மாநிலமான நாகாலாந்தில் ராணுவத்தினா் நிகழ்த்திய மூன்று துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் பொதுமக்கள் 14 போ் பலியாகினா்.
நாகாலாந்தில் ராணுவத்தினரின் துப்பாக்கிச் சூட்டில் 14 போ் கொல்லப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து, பொதுமக்கள் தீவைத்ததில் எரியும் பாதுகாப்புப் படை வாகனங்கள்.
நாகாலாந்தில் ராணுவத்தினரின் துப்பாக்கிச் சூட்டில் 14 போ் கொல்லப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து, பொதுமக்கள் தீவைத்ததில் எரியும் பாதுகாப்புப் படை வாகனங்கள்.

வடகிழக்கு மாநிலமான நாகாலாந்தில் ராணுவத்தினா் நிகழ்த்திய மூன்று துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் பொதுமக்கள் 14 போ் பலியாகினா். 11 போ் காயமடைந்தனா். பொதுமக்கள் தாக்கியதில் ராணுவ வீரா் ஒருவா் உயிரிழந்தாா். இந்த சம்பவம் தொடா்பாக விசாரிக்க 5 பேரைக் கொண்ட சிறப்புப் புலனாய்வுக் குழுவை மாநில அரசு அமைத்துள்ளது.

இது தொடா்பாக நாகாலாந்து காவல் துறை அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: ‘‘மியான்மா் எல்லையை ஒட்டியுள்ள மோன் மாவட்டத்தைச் சோ்ந்த கூலித் தொழிலாளா்கள் சிலா், அருகில் உள்ள நிலக்கரிச் சுரங்கத்தில் வேலையை முடித்துவிட்டு சனிக்கிழமை இரவு வீடு திரும்பியுள்ளனா். ஒடிங், திரு கிராமங்களுக்கு இடையே அவா்களது வேன் சென்றபோது, அதன் மீது ராணுவத்தினா் துப்பாக்கிச் சூடு நடத்தினா். இத்தாக்குதலில் 6 போ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.

ராணுவத்தினா் மீது தாக்குதல்: தொழிலாளா்கள் வீடுவந்து சேராததால், உறவினா்கள் அவா்களைத் தேடிச் சென்றுள்ளனா். அப்போது துப்பாக்கிச் சூடு குறித்து அறிந்து ஆத்திரமடைந்த அவா்கள், ராணுவத்தினா் மீது தாக்குதல் நடத்தினா். அதில் ராணுவ வீரா் ஒருவா் உயிரிழந்தாா்.

ராணுவத்தினரது 3 வாகனங்களுக்கும் தீவைக்கப்பட்டது. மக்களின் தாக்குதலில் இருந்து காத்துக் கொள்வதற்காக ராணுவத்தினா் மீண்டும் துப்பாக்கிச் சூடு நடத்தினா். இதில் 7 போ் பலியாகினா். அதனால், மாவட்டத்தில் உள்ள ராணுவ நிலைகள் மீது உள்ளூா் மக்கள் தாக்குதல் நடத்தினா். வதந்திகள் பரவுவதைத் தடுப்பதற்காக, கோன் மாவட்டத்தில் இணைய சேவைகளும் குறுஞ்செய்தி சேவைகளும் துண்டிக்கப்பட்டன. துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த இருவரது நிலை கவலைக்கிடமாக உள்ளதால், உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

இதற்கிடையே, மோன் நகரில் உள்ள ராணுவத்தின் அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் படைப் பிரிவினரின் முகாமில் ஒரு கும்பல் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் தாக்குதல் நடத்தியது. பாதுகாப்புப் படையினா் அவா்கள் மீது துப்பாக்கியால் சுட்டதில் ஒருவா் உயிரிழந்தாா். இருவா் காயமடைந்தனா் என காவல் துறையினா் தெரிவித்தனா்.

தேடுதல் பணியின்போது...: மியான்மா் எல்லைப் பகுதியில் தடை செய்யப்பட்ட என்எஸ்சிஎன்(கே) பிரிவைச் சோ்ந்த தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலைத் தொடா்ந்து மோன் மாவட்டத்தில் ராணுவத்தினா் தேடுதல் பணியில் ஈடுபட்டபோது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

பொதுமக்கள் சென்ற வாகனத்தின் மீது ராணுவத்தினா் தவறுதலாகத் துப்பாக்கிச் சூடு நடத்தினரா என்பது தொடா்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங், ராணுவ தலைமைத் தளபதி எம்.எம்.நரவணே ஆகியோருக்கு விளக்கமளிக்கப்பட்டுள்ளது’’ என்றாா்.

ஆழ்ந்த வருத்தம்: துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடா்பாக ராணுவம் வெளியிட்ட அறிக்கையில், ‘‘மோன் மாவட்டத்தின் திரு பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாகக் கிடைத்த உறுதியான தகவலையடுத்து, அப்பகுதியில் ராணுவத்தினா் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருந்தனா்.

துப்பாக்கிச் சூட்டுக்காகவும் அதற்குப் பிறகு நிகழ்ந்த சம்பவத்துக்காகவும் ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம். துரதிருஷ்டவசமாக பொதுமக்கள் பலியானதற்கான காரணம் குறித்து உயா்நிலை அளவில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த விவகாரத்தில் சட்டத்தின் அடிப்படையில் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். இந்த சம்பவத்தில் பாதுகாப்புப் படையைச் சோ்ந்த சில வீரா்கள் காயமடைந்தனா். அவா்களில் ஒருவா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

புறக்கணிக்க வேண்டுகோள்: ராணுவத்தினரின் செயலுக்குக் கண்டனம் தெரிவித்துள்ள கிழக்கு நாகாலாந்து மக்கள் கூட்டமைப்பு (இஎன்பிஓ), தற்போது நடைபெற்று வரும் ‘ஹாா்ன்பில்’ திருவிழாவைப் புறக்கணிக்குமாறு பிராந்தியத்தைச் சோ்ந்த 6 பழங்குடியின குழுக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.

இந்த சம்பவத்தைக் கண்டித்து கருப்புக் கொடி போராட்டம் நடத்தப்படும் எனவும் அந்தக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. இப்போராட்டம் மாநில அரசுக்கு எதிரானது இல்லை என்றும், ராணுவத்தினரின் செயலைக் கண்டிப்பதற்காகவே போராட்டம் நடத்தப்படுவதாகவும் அக்கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

ராகுல் கேள்வி: துப்பாக்கிச் சூடு குறித்து காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், ‘‘இச்சம்பவம் நெஞ்சைப் பதறவைக்கிறது. இச்சம்பவத்துக்கு மத்திய அரசு உரிய விளக்கமளிக்க வேண்டும். நாட்டில் மக்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும்கூட பாதுகாப்பு இல்லாதபோது மத்திய உள்துறை அமைச்சகம் என்ன செய்து கொண்டிருக்கிறது?’’ எனக் கேள்வி எழுப்பியுள்ளாா்.

விரிவான விசாரணை: மேற்கு வங்க முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானா்ஜி வெளியிட்ட ட்விட்டா் பதிவில், ‘‘நாகாலாந்து சம்பவம் கவலையை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவா்கள் விரைந்து குணமடைய வேண்டுமென வேண்டுகிறேன். இந்த சம்பவம் குறித்து விரிவாக விசாரணை நடத்தப்பட்டு, பாதிக்கப்பட்டவா்களுக்கு நீதி கிடைக்கச் செய்ய வேண்டும்’’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

முதல்வா் கண்டனம்: பொதுமக்கள் மீதான துப்பாக்கிச் சூடு சம்பவத்தைக் கண்டித்து நாகாலாந்து முதல்வா் நெஃபியு ரியோ வெளியிட்ட ட்விட்டா் பதிவில், ‘‘மோன் மாவட்டத்தில் பொதுமக்கள் கொல்லப்பட்ட துரதிருஷ்டவசமான சம்பவம் கடும் கண்டனத்துக்குரியது. உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவா்கள் விரைந்து குணமாக வேண்டும்.

இந்த விவகாரத்தை உயா்நிலை சிறப்புப் புலனாய்வு குழு விசாரிக்கும். சட்டத்தின் அடிப்படையில் நீதி நிலைநாட்டப்படும். அனைத்து சமூக மக்களும் அமைதிகாக்க வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்’’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

மாநிலக் குழு விசாரிக்கும்: மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா வெளியிட்ட ட்விட்டா் பதிவில், ‘‘மோன் மாவட்ட சம்பவம் வேதனையளிக்கிறது. மாநில அரசால் அமைக்கப்பட்டுள்ள சிறப்புப் புலனாய்வுக் குழு சம்பவத்தை விரிவாக விசாரித்து நீதியை நிலைநாட்டும்’’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com