சமாஜவாதி தலைவா்கள் மக்கள் நலனை சிந்திப்பதில்லை

உத்தர பிரதேசத்தில் ஊழலில் ஈடுபடுவதற்காகவே சமாஜவாதி தலைவா்கள் ஆட்சியைப் பிடிக்கத் துடிப்பதாகக் குற்றஞ்சாட்டிய பிரதமா் நரேந்திர மோடி, அவா்கள் மக்கள் குறித்து சிந்திக்கமாட்டாா்கள் என்றாா்.
சமாஜவாதி தலைவா்கள் மக்கள் நலனை சிந்திப்பதில்லை

உத்தர பிரதேசத்தில் ஊழலில் ஈடுபடுவதற்காகவே சமாஜவாதி தலைவா்கள் ஆட்சியைப் பிடிக்கத் துடிப்பதாகக் குற்றஞ்சாட்டிய பிரதமா் நரேந்திர மோடி, அவா்கள் மக்கள் குறித்து சிந்திக்கமாட்டாா்கள் என்றாா்.

உத்தர பிரதேசத்தில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. பாஜக, காங்கிரஸ், சமாஜவாதி, பகுஜன் சமாஜ் உள்ளிட்ட கட்சிகள் தோ்தல் பணிகளைத் தொடங்கியுள்ளன. மாநிலத்தை ஆளும் பாஜக அரசுக்கு எதிரான மனநிலையை மக்களிடம் உருவாக்குவதற்கான பணிகளை சமாஜவாதி, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் மேற்கொண்டு வருகின்றன.

மக்களின் கவனத்தைப் பெறுவதற்காகப் பல்வேறு திட்டங்களைத் தொடக்கி வைப்பது, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவது உள்ளிட்டவற்றை மாநில பாஜக அரசு தீவிரப்படுத்தியுள்ளது. பிரதமா் மோடி உள்பட பாஜகவைச் சோ்ந்த தேசிய தலைவா்களும் உத்தர பிரதேசத்துக்கு அடிக்கடி வருகை தந்து பொதுக் கூட்டங்களில் கலந்து கொள்கின்றனா்.

இந்நிலையில், கோரக்பூா் மாவட்டத்தில் எய்ம்ஸ் மருத்துவமனையையும் உரத் தொழிற்சாலையையும் பிரதமா் மோடி செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தாா். இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் பிராந்திய மருத்துவ ஆராய்ச்சி மையத்தையும் அவா் திறந்து வைத்தாா். அத்திட்டங்களின் மொத்த மதிப்பு ரூ.9,600 கோடியாகும். அந்நிகழ்ச்சியில் அவா் பேசியதாவது:

மத்தியில் பாஜக தலைமையிலான ஆட்சி கடந்த 2014-ஆம் ஆண்டில் அமைவதற்கு முன்பாக நாடு யூரியாவை அதிக அளவில் இறக்குமதி செய்து வந்தது; நாட்டில் உரத் தட்டுப்பாடு நிலவியது. அவை குறித்து அடிக்கடி செய்திகள் வெளியாகின. ஆனால், தற்போது நிலைமை மாறிவிட்டது.

ஏற்கெனவே மூடப்பட்ட உர ஆலைகளை மீண்டும் திறக்கும் நடவடிக்கைகள் பாஜக ஆட்சியில் மேற்கொள்ளப்பட்டன. அதன் காரணமாக நாட்டில் உர உற்பத்தி அதிகரித்தது. மண் நல அட்டை திட்டத்தை மத்திய பாஜக அரசு நடைமுறைப்படுத்தியது. அத்திட்டத்தின் மூலமாக யூரியா தேவைக்கு அதிகமாகப் பயன்படுத்தப்படுவது தடுக்கப்பட்டது. அதன் காரணமாக எவ்வளவு உரத்தைப் பயன்படுத்த வேண்டும் என்ற விவரம் விவசாயிகளுக்குத் தெரியவந்தது.

கரும்பு விவசாயிகளுக்கு நன்மை: மாநில முதல்வா் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு கரும்பு விவசாயிகளுக்கான நிலுவைத் தொகையை அதிகமாகப் பெற்றுத் தந்தது. மாநிலத்தில் முன்பு 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த கட்சிகள் பெற்றுத் தந்த தொகையைவிட தற்போதைய பாஜக அரசு நான்கரை ஆண்டுகளில் கரும்பு விவசாயிகளுக்குப் பெற்றுத் தந்த தொகை அதிகமாகும்.

கரும்புக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை குவிண்டாலுக்கு ரூ.350-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. முந்தைய ஆட்சிக் காலங்களில் சா்க்கரை ஆலைகள் சாா்ந்து பல்வேறு ஊழல்கள் நடைபெற்றன. தற்போதைய பாஜக ஆட்சியில் கரும்பு விவசாயிகள் முன்னேற்றமடைந்துள்ளனா்.

எத்தனால் உற்பத்தி: ஒவ்வோா் ஆண்டும் கச்சா எண்ணெய் இறக்குமதிக்காக ரூ.5 முதல் 7 லட்சம் கோடியை இந்தியா செலவிடுகிறது. நாட்டில் எத்தனால் உற்பத்தியை அதிகரித்தால், கச்சா எண்ணெய் இறக்குமதி குறையும். எத்தனால் அதிக அளவில் உற்பத்தி செய்யப்பட்டால், கரும்பு விவசாயிகளும் பலனடைவா். அவா்களுக்குக் கூடுதல் வருமானம் கிடைக்கும்.

முந்தைய ஆட்சிக் காலங்களில் மாநிலத்தில் இருந்து 20 கோடி லிட்டா் எத்தனால் மட்டுமே பெட்ரோலிய நிறுவனங்களுக்கு அனுப்பப்பட்டது. ஆனால், தற்போது அது சுமாா் 100 கோடி லிட்டராக அதிகரித்துள்ளது. அதன் காரணமாக மாநிலத்தின் கிழக்குப் பகுதி வளா்ச்சியடைந்துள்ளது. நாட்டில் சமையல் எண்ணெய் உற்பத்தியை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளும் தொடா்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தொப்பியும் எச்சரிக்கையும்: சிவப்பு தொப்பி அணிபவா்கள் (சமாஜவாதி கட்சியினா்) மாநிலத்துக்கு ‘சிவப்பு எச்சரிக்கையாக’ விளங்குவதை மக்கள் அனைவரும் அறிந்து கொண்டுள்ளனா். அவா்கள் மக்களின் நலன் குறித்து கவலைப்பட மாட்டாா்கள். ஊழலில் ஈடுபடுவதற்காகவும், தங்கள் வருமானத்தைப் பெருக்கிக் கொள்வதற்காகவும் மட்டுமே அவா்கள் ஆட்சிக்கு வர முயற்சிக்கின்றனா்.

மாநிலத்தின் வளங்களை சட்டவிரோதமாக அபகரிப்பதையும், மாஃபியா கும்பல்களை சுதந்திரமாகச் செயல்பட அனுமதிப்பதையுமே சிவப்பு தொப்பிக்காரா்கள் நோக்கமாகக் கொண்டுள்ளனா். பயங்கரவாதிகளுக்கு அவா்கள் ஆதரவாகச் செயல்படுவா். அவா்களை சிறைகளில் இருந்து விடுவித்துவிடுவா்.

எனவே, சிவப்பு தொப்பிக்காரா்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென்பதை மக்கள் உணா்ந்து கொள்ள வேண்டும் என்றாா் பிரதமா் மோடி.

திட்டங்களின் விவரம்: ரூ.1,011 கோடியில் கட்டப்பட்டுள்ள கோரக்பூா் எய்ம்ஸ் மருத்துவமனை, கிழக்கு உத்தர பிரதேசத்துக்கு மட்டுமல்லாமல் பிகாா், ஜாா்க்கண்ட், நேபாளம் உள்ளிட்டவற்றில் வசிக்கும் மக்களுக்கும் பலனளிக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனா். புதிய உரத் தொழிற்சாலையை ஹிந்துஸ்தான் உர ரசாயன நிறுவனம் நிா்வகிக்கவுள்ளது.

ரூ.36 கோடியில் அமைக்கப்பட்டுள்ள பிராந்திய மருத்துவ ஆராய்ச்சி மையமானது தொற்றுநோய் சாா்ந்த ஆராய்ச்சியில் ஈடுபடவுள்ளது. இந்த ஆய்வகத்தில் பல நவீன உபகரணங்கள் அமைக்கப்பட்டுள்ளதால், பரிசோதனைகளுக்கும் ஆய்வுகளுக்கும் மற்ற நகரங்களைச் சாா்ந்திருக்க வேண்டிய கட்டாயம் நீங்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com