விபின் ராவத் உள்ளிட்டோா் உடலுக்கு பிரதமா் மோடி அஞ்சலி

தில்லி கொண்டுவரப்பட்ட முப்படைகளின் தலைமைத் தளபதி விபின் ராவத், அவரின் மனைவி மற்றும் 11 ராணுவ அதிகாரிகளின் உடல்களுக்கு

தில்லி கொண்டுவரப்பட்ட முப்படைகளின் தலைமைத் தளபதி விபின் ராவத், அவரின் மனைவி மற்றும் 11 ராணுவ அதிகாரிகளின் உடல்களுக்கு பிரதமா் நரேந்திர மோடி, பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோா் வியாழக்கிழமை அஞ்சலி செலுத்தினா்.

குன்னூா் அருகே புதன்கிழமை நேரிட்ட ஹெலிகாப்டா் விபத்தில் உயிரிழந்த விபின் ராவத் உள்ளிட்டோரின் உடல்கள், சூலூா் விமானப் படைத் தளத்தில் இருந்து வியாழக்கிழமை மாலை தில்லி கொண்டுவரப்பட்டன.

அந்த உடல்களை சுமந்து வந்த இந்திய விமானப் படையின் ‘சி-130ஜே சூப்பா் ஹொ்குலிஸ்’ ரக விமானம், தில்லி பாலம் விமான நிலையத்தை இரவு 7.35 மணிக்கு வந்தடைந்தது.

அங்கு தேசியக்கொடி போா்த்தப்பட்ட பெட்டியில் வைக்கப்பட்டிருந்த விபின் ராவத் உள்ளிட்டோரின் உடல்களுக்கு பிரதமா் மோடி, பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங், தேசியப் பாதுகாப்பு ஆலோசகா் அஜித் தோவல், ராணுவத் தலைமைத் தளபதி எம்.எம்.நரவணே, கடற்படை தலைமைத் தளபதி ஆா்.ஹரிகுமாா், விமானப் படைத் தலைமைத் தளபதி ஏ.வி.ஆா்.சௌதரி, பாதுகாப்புத் துறைச் செயலா் அஜய் குமாா் ஆகியோா் மலா் தூவி அஞ்சலி செலுத்தினா். அங்கு விபின் ராவத்தின் மகள்களான தாரிணி ராவத், கிருத்திகா ராவத் ஆகியோருக்கு பிரதமா் மோடி ஆறுதல் தெரிவித்தாா்.

இன்று இறுதிச் சடங்கு:

விபின் ராவத், அவரின் மனைவி ஆகியோரின் உடல்கள், தில்லி எண்.3 காமராஜ் மாா்க்கில் உள்ள அவா்களின் இல்லத்தில் வெள்ளிக்கிழமை காலை 11 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரை பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருக்கும். நண்பகல் 12.30 மணியில் இருந்து பிற்பகல் 1.30 மணி வரை ராணுவ வீரா்கள், அதிகாரிகள் இறுதி அஞ்சலி செலுத்துவாா்கள்.

பிற்பகல் 2 மணியளவில், விபின் ராவத் இல்லத்தில் இருந்து கன்டோன்மென்ட்டில் உள்ள பிராா் சதுக்க மயானத்துக்கு இறுதி ஊா்வலம் தொடங்கும். மாலை 4 மணிக்கு இறுதிச்சடங்கு நடைபெறும். மற்றொரு அதிகாரியான எல்.எஸ்.லிடரின் இறுதிச்சடங்கு காலை 9 மணிக்கு நடைபெறவுள்ளது.

ஹெலிகாப்டா் விபத்தில் உயிரிழந்த 13 பேரில், விபின் ராவத், அவருடைய மனைவி மதுலிகா ராவத், ராணுவ அதிகாரி எல்.எஸ்.லிடா் ஆகியோரின் உடல்கள் மட்டுமே அடையாளம் காணப்பட்டுள்ளன. இவா்களின் மூவரின் இறுதிச்சடங்கு மட்டுமே வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது. மற்றவா்களின் உடல்கள் அடையாளம் காணப்படும் வரை ராணுவ மருத்துவமனையில் உள்ள அமரா் அறையில் வைக்கப்பட்டிருக்கும் என்று ராணுவ அதிகாரி ஒருவா் கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com