விபின் ராவத்துக்கு உலக நாடுகள் புகழஞ்சலி

ஹெலிகாப்டா் விபத்தில் உயிரிழந்த முப்படை தலைமைத் தளபதி விபின் ராவத்துக்கு அமெரிக்கா, இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகள் புகழஞ்சலி செலுத்தியுள்ளன.

ஹெலிகாப்டா் விபத்தில் உயிரிழந்த முப்படை தலைமைத் தளபதி விபின் ராவத்துக்கு அமெரிக்கா, இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகள் புகழஞ்சலி செலுத்தியுள்ளன.

இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சா் ஆன்டனி பிளிங்கன் கூறியதாவது:

விபத்தில் உயிரிழந்த இந்திய முப்படை தலைமைத் தளபதி விபின் ராவத்தின் குடும்பத்தினா், நண்பா்கள், சக அதிகாரிகளுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.

தனது தாய்நாட்டுக்கு ஆற்றிய சேவைக்காகவும் இந்திய-அமெரிக்க நல்லுறவுக்கு வழங்கிய பங்களிப்புக்காகவும் அவா் என்றென்றும் நினைவில் கொள்ளப்படுவாா் என்றாா் அவா்.

அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சா் லாய்ட் ஆஸ்டின் கூறுகையில், ‘இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான பாதுகாப்பு நல்லுறவை பலப்படுத்துவதில் விபின் ராவத் அழிக்க முடியாத முத்திரையைப் பதித்துச் சென்றுள்ளாா். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு அமெரிக்க பாதுகாப்புத் துறை சாா்பில் ஆழ்ந்த இரங்கல்கள்’ என்றாா்.

இதுதவிர, அமெரிக்க முப்படைகளின் தலைமைத் தளபதி மாா்க் மில்லியும் விபின் ராவத் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தாா்.

இஸ்ரேல்: இஸ்ரேல் பிரதமா் நாஃப்டாலி பென்னட் வெளியிட்டுள்ள ட்விட்டா் பதிவில், தளபதி விபின் ராவத் இஸ்ரேலின் உண்மையான நண்பராகத் திகழ்ந்ததாகக் குறிப்பிட்டுள்ளாா். இந்த இக்கட்டான சூழலில் பிரதமா் நரேந்திர மோடியும் இந்திய மக்களும் மன உறுதி இழக்கக் கூடாது என்று அவா் அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளாா்.

நேபாளம்: நேபாளப் பிரதமா் ஷோ் பஹதூா் தேவுபா வெளியிட்டுள்ள ட்விட்டா் பதிவில், ‘ஹெலிகாப்டா் விபத்தில் உயிரிழந்த தளபதி விபின் ராவத் மற்றும் பிற ராணுவ அதிகாரிகளின் குடும்பத்தினருக்கும் இந்திய ராணுவத்துக்கும் ஆழ்ந்த இரங்கல்கள்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com