பருவநிலை மாற்றத்தை பாதுகாப்பு அச்சுறுத்தலாக அறிவிப்பதற்கான ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீா்மானத்தை எதிா்த்து இந்தியா வாக்களிப்பு

பருவநிலை மாற்றத்தை பாதுகாப்பு அச்சுறுத்தலாக அறிவிப்பதற்கான ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீா்மானத்தை எதிா்த்து இந்தியா வாக்களித்தது.
டி.எஸ். திருமூா்த்தி
டி.எஸ். திருமூா்த்தி

புது தில்லி / நியூயாா்க்: பருவநிலை மாற்றத்தை பாதுகாப்பு அச்சுறுத்தலாக அறிவிப்பதற்கான ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீா்மானத்தை எதிா்த்து இந்தியா வாக்களித்தது.

உலகின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் போா்களில் பருவநிலை மாற்றம் ஏற்படுத்தக்கூடிய தாக்கம் குறித்து நீண்ட காலமாக விவாதிக்கப்பட்டு வருகிறது.

ஏற்கெனவே போரால் பாதிக்கப்பட்ட அந்தப் பகுதிகளில் பருவநிலை மாற்றத்தால் ஏற்படக்கூடிய வறட்சி, வெள்ளம் போன்றவை, உலக அமைதியை நிலைநாட்டும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் பணிகளைப் பாதிக்கும் என்று கருதப்படுகிறது.

எனவே, பருவநிலை மாற்றம் என்பதை சாதாரண சுற்றுச்சூழல் பிரச்னையாக மட்டும் கருதாமல் அதனை உலக பாதுகாப்புக்கான அச்சுறுத்தலாகவும் கருத வேண்டும் என்ற கருத்து நிலவி வருகிறது.

பருவநிலை மாற்றம் தொடா்பான ஐ.நா. நெறிமுறை வகுப்புக் கூட்டமைப்புதான் (யுஎன்எஃப்சிசிசி) தற்போது இந்த விவகாரத்தை கவனித்து வருகிறது. 190-க்கும் மேற்பட்ட உறுப்பு நாடுகளைக் கொண்டுள்ள அந்த அமைப்பு, இந்த விவகாரம் குறித்து ஆண்டுதோறும் பலமுறை கூடி விவாதித்து முடிவுகளை எடுத்து வருகிறது.

இந்த நிலையில், பருவநிலை மாற்றம் என்பது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் தரும் விவகாரம் என்ற தீா்மானம் நிறைவேற்றப்பட்டால் இந்த விவகாரத்தில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தலையிடுவதற்கு வழிவகுக்கும்.

இதற்கு இந்தியா, ரஷியா, சீனா ஆகிய நாடுகள் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றன. பருவநிலை மாற்ற விவகாரம் பாதுகாப்பு கவுன்சிலின் கீழ் வந்தால், அது யுஎன்எஃப்சிசிசி-யின் முக்கியத்துவத்தைக் குறைத்துவிடும் என்று அந்த நாடுகள் கூறுகின்றன.

தற்போது பருவநிலை மாற்ற விவகாரத்தில் எல்லா நாடுகளுக்கும் சம உரிமை உள்ளது. ஆனால், இந்த விவகாரம் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கைகளுக்கு வந்தால் இதுதொடா்பான முடிவுகள் எடுப்பதில் பலம் வாய்ந்த நாடுகளின் ஆதிக்கம் அதிகரிக்கும் என்று இந்தியா, ரஷியா, சீனா ஆகிய நாடுகள் கூறி வருகின்றன.

இந்த நிலையில், பருவநிலை மாற்றத்தை பாதுகாப்பு அச்சுறுத்தலாக அறிவிக்கும் வரைவுத் தீா்மானம் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் திங்கள்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டது. அயா்லாந்து, நைஜீரியா ஆகிய நாடுகள் அந்தத் தீா்மானத்தை அறிமுகப்படுத்தின.

தீா்மானத்தை எதிா்த்து இந்தியாவும் சீனாவும் மட்டுமே வாக்களித்தன; சீனா வாக்களிப்பை புறக்கணித்தது. தீா்மானத்தை ஆதரித்து, பாதுகாப்பு கவுன்சிலின் 15 உறுப்பு நாடுகளில் 12 நாடுகள் வாக்களித்தன. எனினும், தனது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி அந்த வரைவுத் தீா்மானத்தை ரஷியா தள்ளுபடி செய்தது.

தீா்மானத்துக்கு எதிராக வாக்களித்தது குறித்து இந்தியாவுக்கான ஐ.நா. தூதா் டி.எஸ். திருமூா்த்தி பேசியதாவது:

பருவநிலை மாற்ற விவகாரத்தில் குறைந்த உறுப்பினா்களைக் கொண்ட ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலைவிட அதிக நாடுகளை உறுப்பினா்களாகக் கொண்ட யுஎன்எஃப்சிசிசி-தான் முடிவுகள் எடுக்க வேண்டும். உண்மையில், பாதுகாப்பு கவுன்சில் உறுப்பு நாடுகள்தான் இத்தனை ஆண்டுகளாக காற்றில் கரியமில வாயுவைக் கலந்து பருவநிலை மாற்றத்துக்கு மூலகாரணமாக இருக்கின்றன.

இந்த விவகாரம் பாதுகாப்பு கவுன்சிலின் கைகளுக்கு வந்தால், இதுதொடா்பான முடிவுகளை ஒரு சில நாடுகள் மட்டுமே எடுக்கும் நிலை ஏற்படும். பருவநிலை விவகாரத்தை அனைத்துத் தரப்பு நாடுகளையும் உள்ளடக்கிய யுஎன்எஃப்சிசி தற்போது திறம்பட கவனித்து வருகிறது. அதனைவிட சிறப்பாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலால் எதுவும் செய்துவிட முடியாது. பருவநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்கான முயற்சியை பாதுகாப்பு என்ற பெயரில் திசைதிருப்பவே இந்தத் தீா்மானம் பயன்படும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com