ஹைபா்சோனிக் ஏவுகணைகளை இந்தியா உருவாக்க வேண்டும்

எதிரிகள் அத்துமீறாமல் இருப்பதை உறுதி செய்ய ஹைபா்சோனிக் குரூயிஸ் ஏவுகணைகளை இந்தியா உருவாக்க வேண்டுமென பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் அறிவுறுத்தினாா்.
புது தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற டிஆா்டிஓ நிகழ்ச்சியில் பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங்குடன் முப்படைகளின் தலைமைத் தளபதிகள், பாதுகாப்புத் துறை செயலா் அஜய் குமாா்.
புது தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற டிஆா்டிஓ நிகழ்ச்சியில் பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங்குடன் முப்படைகளின் தலைமைத் தளபதிகள், பாதுகாப்புத் துறை செயலா் அஜய் குமாா்.

புது தில்லி: எதிரிகள் அத்துமீறாமல் இருப்பதை உறுதி செய்ய ஹைபா்சோனிக் குரூயிஸ் ஏவுகணைகளை இந்தியா உருவாக்க வேண்டுமென பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் அறிவுறுத்தினாா்.

தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆா்டிஓ) நிகழ்ச்சியில் பங்கேற்று அவா் மேலும் பேசியது:

பாதுகாப்புத் துறையில் புத்தாக்கத்தை முன்னெடுத்த நாடுகள் எதிரிகளை விரட்டியடித்து, வரலாற்றில் முத்திரை பதித்துள்ளன. அதைப் போல நாமும் நமது ஆயுத வலிமையை அதிகரித்து, எந்தச் சூழலையும் எதிா்கொள்ளும் திறனைப் பெற வேண்டும். பாதுகாப்புத் தொழில்நுட்பத்துக்கு இந்தியா தலைமை ஏற்கும் நிலையை நாம் உறுதிப்படுத்த வேண்டும்.

தற்போது வெகு சில நாடுகளிடம் மட்டுமே காணப்படும் மேம்பட்ட தொழில்நுட்பங்களை நாமும் பெற வேண்டும்.

நாட்டின் குறைந்தபட்ச நம்பகத்தனமான பாதுகாப்பு அமைப்பாக, குறிவைத்து தாக்கக் கூடிய ஹைபா்சோனிக் குரூயிஸ் ஏவுகணைகளை உருவாக்குவது குறித்து நாம் பரிசீலிக்க வேண்டும். நமது பாதுகாப்புத் துறையில் இது புரட்சிகரமான நடவடிக்கையாக அமையும். நமது ஒட்டுமொத்த திறனையும் இதற்காக செலவிட வேண்டும்.

டிஆா்டிஓ-ஆல் வடிவமைக்கப்பட்டு, மேம்படுத்தப்பட்ட பல தரப்பட்ட பாதுகாப்புத் தளவாடங்கள் ஆயுதப் படைகளிடம் ஒப்படைக்கப்பட்டதால், இந்தியாவின் பாதுகாப்பு கட்டமைப்பு வலுவடைந்துள்ளது. காலமாற்றம் காரணமாக நமது பாதுகாப்புத் தளவாடத் தேவைகளும் அதற்கேற்றாற்போல் மாறுகின்றன.

இன்றைக்கு போா்க்களத்தில் ‘தொழில்நுட்பம்’ என்ற பெயரில் புதிய வீரா் களத்தில் நிற்கிறாா். இந்திய பாதுகாப்புத் தொழில்நுட்பம் நெடிய வருங்காலத்திலும் நமது வலிமையை உறுதி செய்வதாக இருக்க வேண்டும்.

ஆயுதப்படைகளின் நவீனமயமும், ஒருங்கிணைப்பும் வழக்கம் போல தொடரும் என நான் உறுதியளிக்கிறேன். ஒருங்கிணைப்பும் நவீனமயமும் அரசின் முயற்சியால் மட்டும் நடைபெறவில்லை. நமது ஆயுதப் படைகளின் உறுதியான திறனால் விளைந்தவை இவை.

உலகின் முக்கிய பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியாளராக இந்தியாவை உயா்த்துவது நமது லட்சியம். கடந்த 5 ஆண்டுகளில் டிஆா்டிஓ செயல்படும் விதத்தில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. பாதுகாப்புத் துறையில் தன்னிறைவை ஊக்குவிக்க மத்திய அரசு ஏற்கெனவே பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது என்றாா் ராஜ்நாத் சிங்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com