நாடாளுமன்றத்தில் கூட்டு செயல்பாடு: எதிர்க்கட்சித் தலைவர்களுடன் சோனியா ஆலோசனை

நாடாளுமன்றத்தில் இணைந்து செயல்படுவது தொடர்பாக எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களுடன் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி செவ்வாய்க்கிழமை ஆலோசனை மேற்கொண்டார்.
நாடாளுமன்றத்தில் கூட்டு செயல்பாடு: எதிர்க்கட்சித் தலைவர்களுடன் சோனியா ஆலோசனை


புது தில்லி: நாடாளுமன்றத்தில் இணைந்து செயல்படுவது தொடர்பாக எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களுடன் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி செவ்வாய்க்கிழமை ஆலோசனை மேற்கொண்டார்.

தில்லியில் உள்ள சோனியா காந்தியின் இல்லத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் சரத் பவார் (தேசியவாத காங்கிரஸ் தலைவர்), ஃபரூக் அப்துல்லா (ஜம்மு}காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சி), சஞ்சய் ரௌத் (சிவசேனை), டி.ஆர்.பாலு (திமுக) உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோரும் பங்கேற்றனர்.

மாநிலங்களவை உறுப்பினர்கள் 12 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள விவகாரத்தில் தீர்வு காண்பதற்கு மாநிலங்களவைத் தலைவர் வெங்கையா நாயுடுவிடம் பேசுமாறு சரத் பவாரை தலைவர்கள் கேட்டுக்கொண்டதாக தகவல்கள் தெரிவித்தன.

மம்தாவுக்கு அழைப்பில்லை: மகாராஷ்டிர முதல்வரும் சிவசேனை தலைவருமான உத்தவ் தாக்கரே, தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் ஆகியோருக்கு சோனியா அழைப்பு அனுப்பியிருந்த நிலையில், அவர்கள் தங்கள் சார்பில் சஞ்சய் ரௌத், டி.ஆர்.பாலுவை கூட்டத்துக்கு அனுப்பியதாகவும், திரிணமூல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜிக்கு இந்தக் கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்படவில்லை எனவும்  தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

மாநிலங்களவை உறுப்பினர்கள் 12 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், இடைநீக்கத்தை ரத்து செய்யக் கோரியும் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், இந்த விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியாக அடுத்த சில நாள்களில் மேலும் இதுபோன்ற கூட்டங்கள் நடத்தப்படும் எனவும் அந்த  வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com