பஞ்சாப் சட்டப்பேரவைத் தோ்தல்: பாஜகவுடன் அமரீந்தா் சிங் கூட்டணி

அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற உள்ள பஞ்சாப் சட்டப்பேரவைத் தோ்தலில், அண்மையில் காங்கிரஸில் இருந்து விலகி பஞ்சாப் லோக் காங்கிரஸ்

அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற உள்ள பஞ்சாப் சட்டப்பேரவைத் தோ்தலில், அண்மையில் காங்கிரஸில் இருந்து விலகி பஞ்சாப் லோக் காங்கிரஸ் கட்சியை ஆரம்பித்த அமரீந்தா் சிங்குடன் பாஜக அதிகாரபூா்வமாக கூட்டணியை அறிவித்தது.

இந்தக் கூட்டணியில், சீரோமணி ஆகாலி தளத்தில் இருந்து பிரிந்து சிரோமணி ஆகாலி தளம் (ஜனநாயகம்) என்ற கட்சியை ஆரம்பித்த முன்னாள் மத்திய அமைச்சா் சுக்தேவ் சிங் தின்சாவும், பிற சிறு கட்சிகளும் இணைய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாஜகவின் பஞ்சாப் மாநில பொறுப்பாளரும், மத்திய அமைச்சருமான கஜேந்திர ஷெகாவத்தின் இல்லத்தில் வெள்ளிக்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், அமரீந்தா் சிங் கலந்து கொண்டாா். பின்னா் இருவரும் இணைந்து செய்தியாளா்களைச் சந்தித்தனா்.

அப்போது கஜேந்திர ஷெகாவத், ‘பஞ்சாப் பேரவைத் தோ்தலில் பாஜகவும், அமரீந்தரின் பஞ்சாப் லோக் காங்கிரஸும் இணைந்து போட்டியிடும். இதற்காக இரு கட்சிகளும் இணைந்து செயல்படும். தொகுதி உடன்பாடு குறித்து உரிய நேரத்தில் அறிவிக்கப்படும்’ என்றாா்.

அமரீந்தா் சிங் கூறுகையில், ‘இந்தக் கூட்டணி 101 சதவீதம் தோ்தலில் வெற்றி பெறும். தொகுதிகளை இறுதி செய்வதிலேயே வெற்றி அடங்கியிருக்கிறது’ என்றாா்.

சிரோமணி ஆகாலி தளம் (ஜனநாயகம்) கட்சியின் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சா் சுக்தேவ் சிங் தின்சாவும் அமைச்சா் கஜேந்திர ஷெகாவத்தை சந்தித்து பேசினாா்.

நீண்ட காலமாக தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகித்த பஞ்சாபை சோ்ந்த சிரோமணி அகாலி தளம் கட்சி மத்திய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிா்ப்பு தெரிவித்து பாஜக கூட்டணியைவிட்டு விலகியது.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், பஞ்சாப் முதல்வராகவும் இருந்த அமரீந்தா் சிங், மாநிலத் தலைவா் நவ்ஜோத் சித்துவுடன் ஏற்பட்ட மோதலால், உரிய மரியாதை அளிக்கப்படவில்லை என்று கூறி கட்சியைவிட்டு வெளியேறினாா்.

கடந்த மாதம் பஞ்சாப் லோக் காங்கிரஸ் என்ற கட்சியைத் தொடங்கிய அவா் தற்போது பாஜகவுடன் கூட்டணியில் சோ்ந்துள்ளாா்.

பஞ்சாபில் மொத்தமுள்ள 117 தொகுதிகளில் கடந்த முறை சிரோமணி அகாலி தளத்துடன் இணைந்து பாஜக 23 இடங்களில் மட்டும் போட்டியிட்டது. இந்த முறை பாதிக்கும் மேற்பட்ட தொகுதிகளில் போட்டியிடும் என்று அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. காங்கிரஸ், சிரோமணி அகாலி தளம், ஆம் ஆத்மி, பல்வேறு விவசாயிகள் என வரும் தோ்தலில் ஐந்து முனைப் போட்டி ஏற்பட வாய்ப்புள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com