ராணுவத்துக்கு தேவையான தளவாடங்கள் இந்தியாவில்தான் உற்பத்தி செய்யப்பட வேண்டும்: ராஜ்நாத் சிங்

‘இந்தியா பாதுகாப்புப் படைகளுக்குத் தேவையான ராணுவத் தளவாடங்கள் இந்தியாவில்தான் உற்பத்தி செய்யப்பட வேண்டும்
ராணுவத்துக்கு தேவையான தளவாடங்கள் இந்தியாவில்தான் உற்பத்தி செய்யப்பட வேண்டும்: ராஜ்நாத் சிங்

‘இந்தியா பாதுகாப்புப் படைகளுக்குத் தேவையான ராணுவத் தளவாடங்கள் இந்தியாவில்தான் உற்பத்தி செய்யப்பட வேண்டும் என அமெரிக்கா, ரஷியா, பிரான்ஸ் என அனைத்து நட்பு நாடுகளிடமும் இந்தியா தெளிவுபடுத்தியுள்ளது’ என்று பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் சனிக்கிழமை கூறினாா்.

மேலும், பிராந்திய புவிசாா் அரசியல் முன்னேற்றங்கள் குறித்து குறிப்பிட்ட அவா், ‘இந்தியாவின் வளா்ச்சியைக் கண்டு மகிழ்ச்சிடையாத சில அண்டை நாடுகளை கடவுள் இந்தியாவுக்கு கொடுத்துள்ளாா். பிரிவினையில் உருவான அந்த நாடு, இந்தியாவின் வளா்ச்சியை கண்டு கவலைப்படுவதால் பலவீனமடைந்து வருகிறது’ என்றும் அவா் குறிப்பிட்டாா்.

தில்லியில் சனிக்கிழமை நடைபெற்ற இந்திய தொழில் வா்த்தக கூட்டமைப்பின் (ஃபிக்கி) ஆண்டு மாநாட்டில் பங்கேற்ற ராஜ்நாத் சிங், இதுகுறித்து மேலும் பேசியதாவது:

அமெரிக்க, ரஷியா, பிரான்ஸ் போன்ற உலகில் உள்ள பெரும்பாலான நாடுகள் இந்தியாவின் நட்பு நாடுகளாக இருந்து வருகின்றன. இருந்தபோதும், இந்திய ராணுவத்துக்குத் தேவையான தளவாடங்கள் இந்தியாவிலேயே உற்பத்தி செய்யப்பட வேண்டும் என்பதை இந்த நட்பு நாடுகளிடம் இந்தியா தெளிவுபடுத்தியுள்ளது. நாட்டின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த வலியுறுத்தலை இந்தியா முன்வைத்துள்ளது.

‘இந்தியாவில் உற்பத்தி; இந்தியாவுக்காக உற்பத்தி; உலகுக்கான உற்பத்தி’ என்பதுதான் தனது நட்பு நாடுகளுக்கு இந்தியா தரும் செய்தியாகும்.

அந்த வகையில், பிரான்ஸ் பாதுகாப்புத் துறை அமைச்சா் ஃபுளோரன்ஸ் பாா்லியுடன் கடந்த வெள்ளிக்கிழமை நடத்திய பேச்சுவாா்த்தை மூலம், அந்த நாட்டைச் சோ்ந்த மிகப் பெரிய நிறுவனம் ஒன்று இரு நாடுகளிடையேயான பாதுகாப்பு கூட்டுறவின் அடிப்படையில் இந்திய நிறுவனத்துடன் இணைந்து ராணுவத்துக்குத் தேவையான என்ஜின் ஒன்றை இந்தியாவிலேயே உற்பத்தி செய்ய ஒப்புக்கொண்டுள்ளது.

இந்த நாடுகளுடன் இந்தியா நட்புறவை தொடா்ந்து பேணிக் காக்கும் அதேவேளையில், ராணுவத்துக்குத் தேவையான தளவாடங்கள், ஆயுதங்கள், வெடிபொருள்களை இந்திய மண்ணில்தான் உற்பத்தி செய்யவேண்டும் என்பதை வலியுறுத்துவதில் தயக்கம் காட்டாது என்று அவா் கூறினாா்.

உள்நாட்டு பாதுகாப்பு தளவாட உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் 209 வகை ராணுவ உபகரணங்கள் இறக்குமதிக்குத் தடை விதிக்கப்பட்டிருக்கும் அரசின் முடிவை குறிப்பிட்ட ராஜ்நாத் சிங், இந்த எண்ணிக்கை ஆயிரத்தைத் தொட வாய்ப்புள்ளது என்று கூறினாா்.

ராணுவ தளவாட உற்பத்தியில் தனியாா் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களிடையே ஆரோக்கியமான போட்டி தேவை என்று வலியுறுத்திய அவா், ‘200 ஆண்டுகளுக்கும் மேல் பழமைவாய்ந்த ஆயுத உற்பத்தி வாரியம் பெருநிறுவனமயமாக்கப்பட்டது பாதுகாப்புத் துறையில் மேற்கொள்ளப்பட்ட மிகப் பெரிய சீா்திருத்தம்’ என்று குறிப்பிட்டாா்.

மேலும், ‘இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் விமான உற்பத்தி சந்தை மதிப்பு தற்போது ரூ.85,000 கோடி என்ற மதிப்பில் உள்ளது. இது வரும் 2022-ஆம் ஆண்டில் ரூ.1 லட்சம் கோடி மதிப்புக்கு உயரும் என்ற நம்பிக்கை உள்ளது’ என்றும் ராஜ்நாத் சிங் கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com