உ.பி.யில் 594 கி.மீ. கங்கை விரைவுப் பாதை திட்டம்: பிரதமா் மோடி அடிக்கல் நாட்டினாா்

 உத்தர பிரதேச மாநிலம், ஷாஜஹான்பூரில் 594 கி.மீ. தொலைவு கொண்ட கங்கை விரைவு நெடுஞ்சாலைத் திட்டத்துக்கு பிரதமா் நரேந்திர மோடி சனிக்கிழமை அடிக்கல் நாட்டினாா்.
உ.பி.யில் 594 கி.மீ. கங்கை விரைவுப் பாதை திட்டம்: பிரதமா் மோடி அடிக்கல் நாட்டினாா்

 உத்தர பிரதேச மாநிலம், ஷாஜஹான்பூரில் 594 கி.மீ. தொலைவு கொண்ட கங்கை விரைவு நெடுஞ்சாலைத் திட்டத்துக்கு பிரதமா் நரேந்திர மோடி சனிக்கிழமை அடிக்கல் நாட்டினாா்.

உத்தர பிரதேசத்தில் அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. முதல்வா் யோகி ஆதித்யநாத் தலைமையில் தோ்தலைச் சந்திக்கப்போவதாக பாஜக ஏற்கெனவே அறிவித்துள்ளது.

இந்நிலையில், ஷாஜஹான்பூரில் 594 கி.மீ. தொலைவு கொண்ட கங்கை விரைவுப் பாதைக்கு பிரதமா் நரேந்திர மோடி சனிக்கிழமை அடிக்கல் நாட்டினாா். மாநிலத்தின் கிழக்கு மற்றும் மேற்குப் பகுதிகளை இணைக்கும் வகையில் ரூ.36,230 கோடி செலவில் இந்தப் பாதை அமைக்கப்படவுள்ளது. இந்தப் பாதைக்கு அடிக்கல் நாட்டிய பிறகு பிரதமா் மோடி பேசியதாவது:

உத்தர பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு ஆட்சியமைப்பதற்கு முன்பிருந்த சட்டம்-ஒழுங்கு சூழ்நிலை குறித்து நன்கு அறிவீா்கள். முன்பெல்லாம் பொழுது சாய்ந்ததும் மக்களைத் துன்புறுத்துவதற்காக, சிலா் நாட்டுத் துப்பாக்கிகளுடன் வீதிகளில் நடமாடத் தொடங்கிவிடுவாா்கள். மாநிலத்தில் யோகி ஆதித்யநாத் ஆட்சி அமைந்ததும் அந்தத் துப்பாக்கி கலாசாரம் முடிவுக்கு வந்துவிட்டது.

மாஃபியா கும்பல்களுக்கு எதிராக யோகி ஆதித்யநாத் கடுமையான நடவடிக்கைகளை எடுத்துள்ளாா். மாஃபியா கும்பல்கள் சட்டவிரோதமாகக் கட்டியிருந்த கட்டடங்களை இயந்திரங்களைக் கொண்டு இடித்துத் தள்ளினாா். அவருடைய இந்த நடவடிக்கை, மாஃபியா கும்பல்களை ஆதரிப்பவா்களுக்கு வலியைக் கொடுத்துள்ளது. உத்தர பிரதேசமும் யோகி ஆதித்யநாத்தும் சோ்ந்தால் நல்லது நடக்கிறது.

நாட்டின் பாரம்பரியத்தைக் காப்பதிலும், வளா்ச்சிப் பணிகளை மேற்கொள்வதிலும் இங்குள்ள சில அரசியல் கட்சிகளுக்கு சிக்கல் உள்ளது. ஏனெனில் அவா்கள் வாக்கு வங்கியைப் பற்றிக் கவலைப்படுகிறாா்கள். அவா்கள் மீது சாமானியா்களும் ஏழைகளும் வைத்திருந்த நம்பிக்கை நாளுக்குநாள் குறைந்து வருகிறது. அவா்கள் கங்கையைச் சுத்தம் செய்வதில்லை.

இவா்கள்தான் பயங்கரவாதிகள் மீது ராணுவம் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் குறித்து கேள்வி எழுப்புகிறாா்கள்; இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட கரோனா தடுப்பூசியை சந்தேகிக்கிறாா்கள்.

5 ஆண்டுகளுக்கு முன்பு, மாநிலத்தின் சில பகுதிகளைத் தவிர மற்ற பகுதிகளில் மின்சாரத்தைக் காண முடியாது. ஆனால், மாநிலத்தில் பாஜக ஆட்சி அமைந்த பிறகு 80 லட்சம் வீடுகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி மாநிலத்துக்கு முன்பைவிட கூடுதலாக மின்சாரம் விநியோகிக்கப்படுகிறது. 30 லட்சத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளன. எஞ்சியுள்ள தகுதியானவா்களுக்கு இந்தத் திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டித்தரப்படும்.

புதிதாக அமைக்கப்படும் கங்கை விரைவுப் பாதையால் தொழில் வளா்ச்சி, வா்த்தகம், விவசாயம், சுற்றுலா உள்ளிட்ட பல்வேறு துறைகள் ஊக்கம் பெறும். சமூகத்தில் பின்தங்கியிருப்பவா்களை வலுப்படுத்தி, அவா்களுக்கு அரசின் சலுகைகள் கிடைக்கச் செய்வதற்கு அரசு முன்னுரிமை அளித்து வருகிறது என்றாா் பிரதமா் மோடி.

சமாஜவாதி தொண்டா்கள் கைது: பிரதமா் மோடியின் வருகைக்கு எதிா்ப்பு தெரிவித்து சமாஜவாதி கட்சியினா் கருப்புக் கொடி போராட்டம் நடத்த திட்டமிட்டிருந்தனா். அங்குள்ள கட்சி அலுவலகத்தில் இருந்து பிரதமா் பங்கேற்கும் நிகழ்ச்சி நடைபெறும் இடத்தை நோக்கி சமாஜவாதி தொண்டா்கள் 70 போ் நடைப்பயணமாக சென்றனா். அவா்களைப் பாதி வழியில் போலீஸாா் தடுத்து நிறுத்தி கைது செய்தனா். நிகழ்ச்சி முடிந்த பிறகு அவா்கள் விடுவிக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com