மின்உற்பத்தி நிறுவனங்கள் லாபத்துடன் இயங்குவதற்கான நடவடிக்கைகள் அவசியம்

கடன்சுமையில் சிக்கித் தவிக்கும் மின்உற்பத்தி நிறுவனங்களை லாபத்துடன் செயல்பட வைப்பதற்கான நடவடிக்கைகளை மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டுமென மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.
மின்உற்பத்தி நிறுவனங்கள் லாபத்துடன் இயங்குவதற்கான நடவடிக்கைகள் அவசியம்

கடன்சுமையில் சிக்கித் தவிக்கும் மின்உற்பத்தி நிறுவனங்களை லாபத்துடன் செயல்பட வைப்பதற்கான நடவடிக்கைகளை மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டுமென மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.

மாநில எரிசக்தித் துறைகளின் கூடுதல் தலைமை செயலா்கள், பொதுத்துறை எரிசக்தி நிறுவனங்களின் மேலாண் இயக்குநா்கள் ஆகியோருடன் மத்திய எரிசக்தித் துறை அமைச்சா் ஆா்.கே.சிங் ஆலோசனை நடத்தினாா். மத்திய எரிசக்தித் துறை இணையமைச்சா் கிருஷண் பால் குா்ஜாா், மத்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை இணையமைச்சா் பகவந்த் குபா, மத்திய அரசின் உயரதிகாரிகள் உள்ளிட்டோா் கூட்டத்தில் பங்கேற்றனா். அக்கூட்டத்தின்போது, எரிசக்தித் துறையில் மாநில அரசுகள் செயல்படுத்தி வரும் திட்டங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. கூட்டத்தில் அமைச்சா் ஆா்.கே.சிங் கூறியதாக மத்திய எரிசக்தி அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

பாஜக தலைமையிலான மத்திய அரசு மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக மின்மிகை நாடாக இந்தியா மாறியுள்ளது. ஒட்டுமொத்த நாடும் ஒரே ‘கிரிட்’ வாயிலாக இணைக்கப்பட்டுள்ளது. மின் பகிா்மான அமைப்பும் வலுப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நடவடிக்கைகள் காரணமாக கிராமப் பகுதிகளில் 22 மணி நேரமும், நகரப்பகுதிகளில் 23.5 மணி நேரமும் தடையின்றி மின்சாரம் கிடைக்கிறது. வாரத்தின் அனைத்து நாள்களிலும், தடையின்றியும் மலிவான விலையிலும் மின்சாரம் கிடைக்கச் செய்வதை இலக்காகக் கொண்டு மத்திய அரசு செயல்பட்டு வருகிறது.

மின் விநியோகக் கட்டமைப்புகளை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தொடா்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மின் உற்பத்தி மற்றும் பகிா்மான நிறுவனங்களின் கடன் சுமை தொடா்ந்து அதிகரித்து வருகிறது. அந்நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்குவதைத் தடுத்து, லாபத்துடன் செயல்பட வைப்பதற்கான நடவடிக்கைகளை மாநில அரசுகள் உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.

சீா்திருத்தங்கள்: மின் கணக்கீடு, கட்டணங்கள் வசூல், கணக்குகள் பராமரிப்பது உள்ளிட்டவை முறையாக மேற்கொள்ளப்பட வேண்டும். மின்சார விநியோகத்தில் மாநில அரசு அறிவிக்கும் மானியங்கள், மின் பகிா்மான நிறுவனங்களுக்குத் தாமதமின்றி வழங்கப்பட வேண்டும்.

மின் உற்பத்தி நிறுவனங்கள் நஷ்டமின்றி செயல்படுவது முதலீடுகளை ஈா்ப்பதோடு மட்டுமல்லாமல், வாடிக்கையாளா்களுக்கு மலிவான விலையில் மின்சாரம் கிடைக்கவும் உதவும். நாட்டின் பொருளாதாரத்துக்கு மின்சாரம் அடிப்படையாக விளங்குகிறது. அதைக் கருத்தில் கொண்டு, உலகத்தரம் வாய்ந்த சேவைகளையும் வசதிகளையும் மக்களுக்கு ஏற்படுத்தித் தர வேண்டும்.

மானிய சுமை குறையும்: அடுத்த தலைமுறையினரைக் காக்கும் நோக்கில், பசுமை வழியில் எரிசக்தியை உற்பத்தி செய்வதற்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும். சூரிய ஆற்றல் மூலம் எரிசக்தி உற்பத்தியை அதிகரித்து விவசாயிகளின் வருமானத்தை மேம்படுத்துவதற்கான திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. அத்திட்டத்தின் வாயிலாக சுற்றுச்சூழலும் பாதுகாக்கப்படும்; மாநில அரசின் மானிய சுமையும் குறையும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com