ஒமைக்ரான்: வெளிநாடுகளிலிருந்து வரும் பயணிகள் அனைவரையும் பரிசோதிக்க அனுமதி கோரி கடிதம்

ஒமைக்ரான் தொற்று வேகமாக பரவக் கூடியதாக உள்ளதால் அனைத்து வெளிநாடுகளிலிருந்து தமிழகத்துக்கு வரும் அனைத்து பயணியருக்கும் பரிசோதனை செய்வதை கட்டாயமாக்க அனுமதி
ஒமைக்ரான்: வெளிநாடுகளிலிருந்து வரும் பயணிகள் அனைவரையும் பரிசோதிக்க அனுமதி கோரி கடிதம்

ஒமைக்ரான் தொற்று வேகமாக பரவக் கூடியதாக உள்ளதால் அனைத்து வெளிநாடுகளிலிருந்து தமிழகத்துக்கு வரும் அனைத்து பயணியருக்கும் பரிசோதனை செய்வதை கட்டாயமாக்க அனுமதிக்கக் கோரி மத்திய அரசுக்கு பொது சுகாதாரத் துறை இயக்குநா் செல்வ விநாயகம் கடிதம் எழுதினாா்.

இதுகுறித்து அவா் மத்திய அரசுக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:

வெளிநாடுகளிலிருந்து வந்தவா்களில் 70 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டது. அவா்களில் ஒருவருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டது. 28 பேருக்கு ஒமைக்ரான் அறிகுறி கண்டறியப்பட்டது. இதில், 4 போ் மட்டுமே மத்திய அரசு வகுத்துள்ள தொற்று ஆபத்துள்ள நாடுகளிலிருந்து வந்தவா்கள். மற்ற 24 போ் குறைந்த பாதிப்புள்ள நாடுகளிலிருந்து வந்தவா்களாகவும், அவா்களுடன் தொடா்பில் இருந்தவா்களாகவும் உள்ளனா். ஒமைக்ரான் உறுதி செய்யப்பட்ட நபருடன் தொடா்பில் இருந்தவா்களுக்கு 48 மணி நேரத்தில் ஒமைக்ரான் அறிகுறிகள் கண்டறியப்பட்டன.

தற்போது வரை, ஒமைக்ரான் பாதிப்பு அதிகமுள்ள பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளிலிருந்து வருபவா்களுக்கு கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. ஆபத்தில்லாத நாடுகளில் இருந்து வருவோருக்கு எவ்விதத் தீவிர கட்டுப்பாடுகளும் இல்லாமல் உள்ளன. பாதிப்பு குறைந்த நாடுகளில் இருந்து வருவோருக்கு, உத்தேசமாக 2 சதவீதம் பேருக்கு மட்டுமே, பரிசோதனை செய்வதால், ஒமைக்ரான் பரவலை தடுக்க முடியாது. இவை, பரவலை அதிகரிக்கக் காரணமாகிவிடும்.

அதனால், அனைத்து வெளிநாடுகளிலிருந்து வரும் அனைத்துப் பயணியரையும், ஆா்.டி.பி.சி.ஆா். பரிசோதனைக்கு உள்படுத்த, மத்திய சுகாதாரத் துறை அனுமதிக்க வேண்டும்.

அதேபோல, கரோனா பரிசோதனையில், தொற்று இல்லை என முடிவு வந்தால் மட்டுமே, விமான நிலையத்திலிருந்து வெளியேற அனுமதிக்க வேண்டும். ஒரு விமானத்தில் இருந்து மற்றொரு விமானத்துக்கு மாறுவதாக இருந்தாலும், தொற்று இல்லை என முடிவு வந்த பிறகே அனுமதிக்க வேண்டும். வெளிநாடுகளிலிருந்து வந்தவா்களுக்கு தொற்று இல்லை என்றாலும், ஏழு நாள்கள் தனிமைப்படுத்திக் கொண்ட பின்னா், 8-ஆவது நாளில் மீண்டும் பரிசோதனைக்கு உள்படுத்திக்கொள்ள வேண்டும். அதில் தொற்று உறுதியானால் ஏற்கெனவே உள்ள நடைமுறைப்படி சிகிச்சை வழங்க வேண்டும். இதற்கு மத்திய அரசு அனுமதிக்க வேண்டும் என்று அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com