12 மணி நேரத்தில் இரண்டு அரசியல் கொலைகள்...கேரளத்தில் பதற்றம்

இம்மாதிரியான கொடூரமான மனிதாபிமானமற்ற வன்முறை சம்பவங்களால் மாநிலத்திற்கு ஆபத்து என கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

கேரளம் ஆலப்புழாவில் பாஜக மற்றும் எஸ்டிபிஐ கட்சியை சேர்ந்த இரண்டு பிரமுகர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். இதன் காரணமாக, மாவட்டத்தில் கூட்டங்கள் நடத்துவதற்கு காவல்துறை தடை விதித்துள்ளது.

அரசியல் கொலைகளை கண்டித்துள்ள அம்மாநில முதல்வர் பினராயி விஜயன், இதில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதிமொழி அளித்துள்ளார்.

நேற்று மாலை, தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்தபோது, எஸ்டிபிஐ கட்சியின் மாநில செயலாளர் கே.எஸ். ஷான் கொலை செய்யப்பட்டுள்ளார். இரண்டு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த அவரின் மீது காரில் வந்த கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கொச்சி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் இரவு உயிரிழந்துவிட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த தாக்குதலை, பாஜகவின் தாய் அமைப்பான ஆர்எஸ்எஸ் நடத்தியுள்ளதாக எஸ்டிபிஐ குற்றம்சாட்டியுள்ளது. இந்த கொலை சம்பவம் நடைபெற்று 12 மணி நேரத்திற்குள்ளேயே அடுத்த அரசியல் கொலை நடைபெற்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாஜகவின் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவு தலைவர் ரஞ்சித் ஸ்ரீனிவாசனின் வீட்டிற்கு சென்ற அடையாளம் தெரியாத நபர்கள் அவரை வெட்டி கொன்றனர். 

இதுகுறித்து காவல்துறை விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். இதுகுறித்து பினராயி விஜயன் கூறுகையில், "இத்தகைய கொடூரமான, மனிதாபிமானமற்ற வன்முறைச் செயல்கள் மாநிலத்திற்கு ஆபத்தானவை. இதுபோன்ற கொலைகாரக் குழுக்களையும் அவர்களின் வெறுப்பு மனப்பான்மையையும் கண்டறிந்து தனிமைப்படுத்த அனைத்து மக்களும் தயாராக இருப்பார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன்" என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com