சீனாவுக்கு போட்டியாக அருணாசல எல்லை கிராமங்கள் மேம்பாடு திட்டம்: முதல்வர் பெமா காண்டு 

இந்திய எல்லையில் புதிய கிராமங்களை சீன அரசு உருவாக்கி வருவதாகக் கிடைத்துள்ள தகவல்களை அடுத்து, அருணாசல பிரதேச எல்லையிலுள்ள கிராம மக்கள் அங்கு இடம்பெயர்வதைத் தடுக்க அப்பகுதியிலுள்ள கிராமங்களின்
சீனாவுக்கு போட்டியாக அருணாசல எல்லை கிராமங்கள் மேம்பாடு திட்டம்: முதல்வர் பெமா காண்டு 

இடா நகர்: இந்திய எல்லையில் புதிய கிராமங்களை சீன அரசு உருவாக்கி வருவதாகக் கிடைத்துள்ள தகவல்களை அடுத்து, அருணாசல பிரதேச எல்லையிலுள்ள கிராம மக்கள் அங்கு இடம்பெயர்வதைத் தடுக்க அப்பகுதியிலுள்ள கிராமங்களின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த விரிவான திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.

எல்லையோர கிராமங்கள் அனைத்திலும் உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதற்காக ரூ. 4,000 கோடி மதிப்பீட்டில் கருத்துரு தயாரிக்கப்பட்டு மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஒப்புதலுக்காக மாநில அரசு சமர்ப்பித்துள்ளது. இதுகுறித்து அருணாசல பிரதேச முதல்வர் பெமா காண்டு கூறியதாவது:

இந்திய- சீன எல்லையிலுள்ள கிராமங்களின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது தொடர்பாக உயர்நிலைக் குழுக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டு, அமைச்சரவைக் கூட்டத்திலும் இந்த முன்மொழிவுகளுக்கு ஏற்கெனவே ஒப்புதல் வழங்கப்பட்டு விட்டது. இப்போது மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்திய எல்லையோர கிராமங்களில் இருந்து மக்கள் இடம்பெயர்வதைத் தடுக்கும் வகையில், எல்லைப் பகுதி கிராமங்களில் அனைத்து வசதிகளும் மேம்படுத்தப்படும்.

புதிய தார்ச்சாலைகள், சுகாதார வளாகங்கள், கல்வி நிறுவனங்கள், பாதுகாப்பான குடிநீர் வசதி, கிராமப் பகுதிகளுக்கு தடையில்லாத மின்சாரம், கைப்பேசி இணைப்புகளை மேம்படுத்துதல் போன்ற வசதிகளை உறுதிப்படுத்துவதே இந்தத் திட்டத்தின் நோக்கம்.

மேலும், எல்லையோர கிராமங்களில் சிறப்பு 4ஜி கைப்பேசி கோபுரங்களை அமைக்குமாறு மத்திய அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இங்குள்ள எல்லைப் பகுதிகளில், சீன கைப்பேசிகளின் சிக்னல்களே கிடைக்கின்றன. எனவே, இந்திய கைப்பேசி நிறுவனங்களின் சேவைகளை இணைக்க முடியாமல் உள்ளது. எல்லைப்புற கிராம மக்களின் இடப்பெயர்ச்சியைத் தடுக்க இப்பகுதிகளை மேம்படுத்த வேண்டிய கட்டாயம் உள்ளது என்றார்.

இந்திய எல்லைக்குள் சுமார் 6 கி.மீ. தொலைவில் குறைந்தபட்சம் 60 கட்டடத் தொகுப்பு கொண்ட இரண்டாவது கிராமத்தை சீனா நிர்மாணித்துள்ளதாக ஊடகங்களில் வெளியான செய்தி குறித்த கேள்விக்கு பதிலளித்த முதல்வர் பெமா காண்டு, "சீனா புதிய கிராமம் உருவாக்கியதாகக் கூறப்படும் ஷி-யோமி மாவட்டத்துக்குச் சென்று அங்குள்ள ராணுவம், துணை ராணுவப் படை வீரர்களுடனும், மோனிகாங் கிராமத்தைச் சேர்ந்த உள்ளூர்வாசிகளிடமும் பேசினேன். அப்படிப்பட்ட எந்தக் கட்டுமானமும் தங்கள் பகுதியில் இல்லை என்று அவர்கள் உறுதிபடத் தெரிவித்தனர். சீன- திபெத் ஆளுகைக்கு உட்பட்ட பகுதியில் வேண்டுமானால் அத்தகைய கட்டுமானங்கள் நடைபெற்றிருக்கலாம் என்று உள்ளூர்வாசிகள் தெரிவித்தனர்' என்றார்.

அருணாசல பிரதேச மாநிலம், சீன எல்லையை ஒட்டி 1,038 கி.மீ. எல்லையை பகிர்ந்து கொள்கிறது. குறிப்பாக, மாநிலத்தின் 60 பேரவைத் தொகுதிகளில் 13 தொகுதிகள் சீன எல்லையையொட்டி உள்ளன. அருணாசல பிரதேசத்தை சீன அரசு தங்கள் நிலப்பகுதியாக நீண்டகாலமாக சொந்தம் கொண்டாடி பிரச்னை ஏற்படுத்தி வருகிறது. எனவே, இப்பகுதியை மேம்படுத்த இந்திய அரசு கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com