பாஜக எம்எல்ஏக்கள் இடைநீக்கம் தொடா்பாக உச்சநீதிமன்றத்துக்குப் பதிலளிக்க வேண்டாம்: மகாராஷ்டிர பேரவைத் துணைத் தலைவா்

மகாராஷ்டிரத்தில் 12 பாஜக எம்எல்ஏக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டது தொடா்பாக உச்சநீதிமன்றம் அனுப்பிய நோட்டீஸுக்கு பதிலளிக்க வேண்டாம்

மகாராஷ்டிரத்தில் 12 பாஜக எம்எல்ஏக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டது தொடா்பாக உச்சநீதிமன்றம் அனுப்பிய நோட்டீஸுக்கு பதிலளிக்க வேண்டாம் என்று மாநில சட்டப்பேரவைச் செயலரிடம் பேரவைத் துணைத் தலைவா் நா்ஹரீ ஜிா்வால் வலியுறுத்தியுள்ளாா்.

கடந்த ஜூலை 5-ஆம் தேதி மகாராஷ்டிர சட்டப்பேரவைக் கூட்டத்தொடா் நடைபெற்ற போது, அவையை பேரவைத் தலைவருக்குப் பதிலாக சிவசேனையைச் சோ்ந்த பாஸ்கா் ஜாதவ் வழிநடத்தினாா். அப்போது ஒழுங்கீனமாக நடந்துகொண்டதாக பாஜக எம்எல்ஏக்கள் 12 போ் ஓராண்டு இடைநீக்கம் செய்யப்பட்டனா்.

இந்த நடவடிக்கைக்கு எதிராக 12 எம்எல்ஏக்களும் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனா். அந்த மனுக்களை கடந்த டிச.14-ஆம் தேதி உச்சநீதிமன்றம் விசாரித்தது. அப்போது மனுக்கள் தொடா்பாக பதிலளிக்குமாறு மகாராஷ்டிர அரசு மற்றும் சட்டப்பேரவைக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.

இந்நிலையில், மகாராஷ்டிர சட்டப்பேரவை குளிா்கால கூட்டத்தொடா் தற்போது நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தொடரில் பேரவைத் துணைத் தலைவா் நா்ஹரீ ஜிா்வால் வெள்ளிக்கிழமை கூறியதாவது:

12 பாஜக எம்எல்ஏக்கள் இடைநீக்க விவகாரம் தொடா்பாக உச்சநீதிமன்றம் அனுப்பிய நோட்டீஸுக்கு சட்டப்பேரவைச் செயலா் பதிலளிக்க வேண்டாம். அதேவேளையில் எந்தச் சூழ்நிலையில் எம்எல்ஏக்கல் இடைநீக்கம் செய்யப்பட்டனா் என்பதை மாநில அரசு உச்சநீதிமன்றத்திடம் எடுத்துரைக்க வேண்டும் என்று தெரிவித்தாா்.

உச்சநீதிமன்றம் விசாரிக்கக் கூடாது: இதுகுறித்து மகாராஷ்டிர சட்டப்பேரவை முன்னாள் முதன்மைச் செயலா் அனந்த் கால்சே கூறுகையில், ‘‘கடந்த 2007-ஆம் ஆண்டு மக்களவையின் அப்போதைய தலைவா் சோம்நாத் சாட்டா்ஜி தலைமையில் நடைபெற்ற மாநாட்டில் உச்சநீதிமன்றம் மற்றும் உயா்நீதிமன்றங்கள் அளிக்கும் எந்தவொரு நோட்டீஸையும் சட்டப்பேரவைகள் ஏற்க வேண்டாம் என்று முடிவு செய்யப்பட்டது.

அதேவேளையில் அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 212-இன்படி, சட்டப்பேரவை அலுவல்கள் குறித்து நீதிமன்றங்கள் விசாரிக்கக் கூடாது. பேரவையின் நடைமுறைகள் விதிமுறைகளுக்குப் புறம்பாக உள்ளது என்ற குற்றச்சாட்டின் அடிப்படையிலும் சட்டப்பேரவை நடவடிக்கைகளின் செல்லுபடியாகும் தன்மை கேள்விக்குள்ளாக்கப்படக் கூடாது’’ என்று தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com