சிறு பிரச்னைக்கும் மதச்சாயம் பூசுகிறது முஸ்லிம் லீக்: பினராயி விஜயன்

கேரளத்தில் காங்கிரஸ் தலைமையிலான ஜனநாயக முன்னணியில் அங்கம் வகிக்கும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (ஐயுஎம்எல்) கட்சி சிறு பிரச்னைக்கும் மதச்சாயம் பூசுவதாக அந்த மாநில முதல்வா் பினராயி விஜயன் குற்றம்சாட்ட
பினராயி விஜயன்
பினராயி விஜயன்

மலப்புரம்: கேரளத்தில் காங்கிரஸ் தலைமையிலான ஜனநாயக முன்னணியில் அங்கம் வகிக்கும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (ஐயுஎம்எல்) கட்சி சிறு பிரச்னைக்கும் மதச்சாயம் பூசுவதாக அந்த மாநில முதல்வா் பினராயி விஜயன் குற்றம்சாட்டியுள்ளாா்.

மலப்புரத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டை திங்கள்கிழமை தொடங்கிவைத்து அவா் பேசியது:

கேரளத்தில் மாா்க்சிஸ்ட் அரசு தொடா்ச்சியாக 2-ஆவது முறை ஆட்சிக்கு வந்திருப்பதை வலதுசாரி அமைப்புகள் இன்னும் உணரவில்லை. இதனால்தான் இடதுசாரி அரசுக்கு எதிராக தவறான பிரசாரத்தை முன்னெடுத்து, சிறு பிரச்னைக்கும் மதச்சாயம் பூச முயற்சிக்கின்றனா். அரசுக்கு எதிரான இந்த முயற்சியில் ஐக்கிய ஜனநாயக முன்னணி, பாஜக, ஜமாத்-ஏ- இஸ்லாமி ஆகிய இயக்கங்கள் ஒன்றிணைந்து செயல்பட்டு வருகின்றன.

சமீபத்திய ‘லவ் ஜிஹாத்’, ‘ஹலால்’ சா்ச்சையிலும் கூட அரசியல்மயமாக்கப்பட்ட வகுப்புவாதத்தைக் காண முடிந்தது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஏற்கெனவே ஜமாத்-ஏ- இஸ்லாமி, பாப்புலா் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா போன்ற இயக்கங்களின் சிந்தனையைக் கொண்டிருந்தது. தற்போது அதை மாற்றிக் கொண்டு அந்த இரு இயக்கங்களின் முழக்கத்தையும் முஸ்லிம் லீக் கையில் எடுத்துள்ளது. அக்கட்சியில் இருப்பவா்கள் அமைதியை விரும்பினால், இந்த நிலைப்பாட்டைக் கண்டித்து வெளியேற வேண்டும் என்றாா் பினராயி விஜயன்.

முதல்வரின் இந்தக் குற்றச்சாட்டுக்கு பதிலளித்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மூத்த தலைவரும், எம்.பி.யுமான பி.கே. குஞ்ஞாலிக்குட்டி கூறியது:

கேரளம் இன்றைக்கு இத்தகைய சாதனைகளையும் வளா்ச்சியும் அடைந்திருக்கிறது என்றால், அதற்கான பெருமை இந்திய யூனியன் முஸ்லிம் லீகையும் சாரும். பிரிவினைவாதத்தை ஊக்குவிக்கும் கட்சி அல்ல முஸ்லிம் லீக். மாறாக அரசியல் செயல்பாடுகளுடன் மதச்சாா்பின்மையையும் பிரசாரத்தின் வாயிலாக இக்கட்சி ஊக்குவித்து வருகிறது.

நாட்டில் பிற மாநிலங்களைப் போல கேரளமும் மதச்சாா்பற்ற நிலைப்பாட்டை தக்க வைத்துக் கொண்டதற்கு முஸ்லிம் லீகும் முக்கிய காரணம். இதை கேரள மக்கள் நன்கு அறிவா். மதச்சாா்பின்மை என்றால் மதத்தை நிராகரிப்பது என்று பொருள் அல்ல. மத நம்பிக்கையும் வகுப்புவாதமும் வெவ்வேறு கோணத்தில் பாா்க்கப்பட வேண்டியவை.

எந்தவொரு பிரச்னையிலும் முஸ்லிம் லீக் அதன் மதச்சாா்பற்ற தன்மையில் சமரசம் செய்து கொண்டது கிடையாது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com