இந்தியாவின் பாரம்பரியத்தை பலவீனப்படுத்த முயற்சி: சோனியா குற்றச்சாட்டு

இந்தியாவின் பாரம்பரியத்தையும் வலுவான அடித்தளத்தையும் பலவீனப்படுத்த பிளவுபடுத்தும் சித்தாந்தங்கள் முயற்சிப்பதாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குற்றம்சாட்டினார்.
இந்தியாவின் பாரம்பரியத்தை பலவீனப்படுத்த முயற்சி: சோனியா குற்றச்சாட்டு

இந்தியாவின் பாரம்பரியத்தையும் வலுவான அடித்தளத்தையும் பலவீனப்படுத்த பிளவுபடுத்தும் சித்தாந்தங்கள் முயற்சிப்பதாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குற்றம்சாட்டினார்.
 காங்கிரஸ் கட்சியின் 137-ஆவது நிறுவன தினத்தையொட்டி அவர் வெளியிட்ட விடியோ உரையில் மறைமுகமாக பாஜகவை சாடினார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
 வரலாறு திரித்துக் கூறப்படுகிறது. நாட்டின் கங்கை-யமுனை பாரம்பரியத்தை அழிக்க அருவருக்கத்தக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. நாட்டின் சாமானிய குடிமக்கள் பாதுகாப்பின்மையையும், அச்சத்தையும் உணர்கின்றனர். ஜனநாயகத்தையும் அரசியல் சாசனத்தையும் கடந்து நாட்டில் சர்வாதிகார ஆட்சி நடைபெறுகிறது. இதை காங்கிரஸ் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது. நாட்டின் வளமையான பாரம்பரியத்தை யாரும் அழிப்பதை காங்கிரஸ் அனுமதிக்காது.
 தேர்தல் ரீதியிலான ஏற்றத் தாழ்வுகள் தவிர்க்க முடியாதவை. வேற்றுமை நிறைந்த நமது சமூகத்தின் அனைத்துப் பிரிவு மக்களுக்கும் சேவையாற்றுவது தொடரும். வெறுப்பை அடிப்படையாகக் கொண்ட பிளவுபடுத்தும் சித்தாந்தங்களுக்கு நமது சுதந்திரப் போராட்ட இயக்கத்தில் எந்தப் பங்கும் இல்லை. ஆனால், அந்த சித்தாந்தங்கள் தற்போது நமது சமூகத்தின் மதச்சார்பற்ற தன்மைக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றன.
 அவர்கள் சுதந்திரப் போராட்டத்தில் தங்களுக்குப் பங்கு இருப்பதுபோல் காட்டுவதற்காக வரலாற்றை மாற்றி எழுதுகின்றனர். அவர்கள் உணர்ச்சிகளைத் தூண்டி விட்டு, அச்சத்தை உருவாக்கி, வெறுப்பைப் பரப்புகின்றனர். நமது நாடாளுமன்ற ஜனநாயகம் திட்டமிட்டு சேதப்படுத்தப்படுகிறது.
 நமது பாரம்பரியம் தொடர்பான அடிப்படை நம்பிக்கைகள் விவகாரத்தில் நாம் எப்போதும் சமரசம் செய்து கொண்டதில்லை; இனியும் சமரசம் செய்து கொள்ள மாட்டோம்.
 நாட்டின் பாரம்பரியத்தை யாரும் அழிப்பதை காங்கிரஸ் அனுமதிக்காது. தேச விரோத, சமூக விரோத சதிகளுக்கு எதிராகப் போராட காங்கிரஸ் தன்னால் இயன்ற அனைத்தையும் செய்யும் என்று சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.
 கீழே விழுந்த காங்கிரஸ் கொடி: காங்கிரஸ் கட்சியின் 137-ஆவது நிறுவன தினத்தையொட்டி தில்லியில் உள்ள அக்கட்சியின் தலைமையகத்தில் கட்சிக் கொடியை ஏற்ற சோனியா காந்தி முயன்றார். அப்போது கொடிக்கம்பத்தில் இருந்து நழுவிய கொடி கீழே விழுந்தது. எனவே, சோனியா காந்தி, கட்சியின் பொருளாளர் பவன் பன்சால், அகில இந்திய பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் ஆகியோர் அதை கைகளில் சிறிது நேரம் ஏந்தியிருந்தனர்.
 அதன் பின், கட்சிக் கொடியை கொடிக்கம்பத்தில் பொருத்தும் பணியில் தொண்டர் ஒருவர் ஈடுபட்டார். இதையடுத்து சோனியா கட்சிக் கொடியை ஏற்றினார். அப்போது ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, ஏ.கே.அந்தோணி, மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
 கொடிக்கம்பத்தில் இருந்து கொடி விழுந்த சம்பவத்தால் சோனியா காந்தி அதிருப்தி அடைந்தார். அவர் இது தொடர்பாக கட்சித் தொண்டர் ஒருவரிடம் விசாரித்தார். எதிர்காலத்தில் மிகவும் கவனமாக இருக்குமாறு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களை அவர் அறிவுறுத்தியதாக மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com