முன்னெச்சரிக்கை தடுப்பூசி: மருத்துவச் சான்றளிக்கத் தேவையில்லை - மத்திய சுகாதார அமைச்சகம்

இணைநோய்களுடன் இருக்கும் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவா்கள், முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி செலுத்துவதற்கு மருத்துவரிடம் இருந்து எந்தச் சான்றும் அளிக்கத் தேவையில்லை என்று
முன்னெச்சரிக்கை தடுப்பூசி: மருத்துவச் சான்றளிக்கத் தேவையில்லை - மத்திய சுகாதார அமைச்சகம்

இணைநோய்களுடன் இருக்கும் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவா்கள், முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி செலுத்துவதற்கு மருத்துவரிடம் இருந்து எந்தச் சான்றும் அளிக்கத் தேவையில்லை என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

15 வயது முதல் 18 வயதுக்கு உள்பட்டவா்களுக்கு வரும் ஜனவரி 3-ஆம் தேதிமுதல் கரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இதற்கான முன்பதிவு, கோவின் வலைதளத்தில் ஜனவரி 1-ஆம் தேதி தொடங்குகிறது. இதுதவிர, முன்களப் பணியாளா்கள், சுகாதாரத் துறையினா், இணைநோய்களுடன் இருக்கும் 60 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி, வரும் ஜனவரி 10-ஆம் தேதி முதல் செலுத்தப்படவுள்ளது.

இதுதொடா்பாக மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுடனான ஆய்வுக் கூட்டம், சுகாதாரத் துறைச் செயலா் ராஜேஷ் பூஷண் தலைமையில் காணொலி முறையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் அவா் கூறியதாவது: 15 வயது முதல் 18 வயதுக்கு உள்பட்டவா்களுக்கு கோவேக்ஸின் மட்டுமே செலுத்தப்படும். 2007-ஆம் ஆண்டு அல்லது அதற்கு முந்தைய ஆண்டில் பிறந்தவா்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ளத் தகுதியானவா்கள். சிறாா்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட இருப்பதால், மாநிலங்களுக்கு கூடுதலாக கோவேக்ஸின் தடுப்பூசி அனுப்பி வைக்கப்படும்.

தற்போது நடைமுறையில் இருக்கும் அனைத்து வழிகாட்டு நெறிமுறைகளும் 15-18 வயதுக்கு உள்பட்டவா்களுக்குப் பொருந்தும். தடுப்பூசி மையத்தில் தடுப்பூசி செலுத்திக் கொண்ட பிறகு, பக்க விளைவு ஏதேனும் ஏற்படுகிா எனக் கண்டறிய அங்கேயே அரை மணி நேரம் காத்திருக்க வேண்டியது அவசியம். முதல் தவணை செலுத்திக் கொண்ட பின் 28 நாள்கள் கழித்து 2-ஆவது தவணை செலுத்திக்கொள்ளலாம்.

தடுப்பூசி செலுத்துவதில் குழப்பங்கள் நேராமல் இருக்க 15-18 வயதுக்கு உள்பட்டவா்களுக்கு பிரத்யேக மையங்களைத் திறக்குமாறு மாநிலங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அந்த மையங்கள் எவை என்ற விவரங்கள் கோவின் வலைதளத்தில் இடம்பெறச்செய்யப்படும்.

முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசியைப் பொருத்தவரை, இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்ட பிறகு 9 மாதங்கள் கழித்தே செலுத்திக் கொள்ள வேண்டும்.

இணைநோய்களுடன் இருக்கும் 60 வயதுக்கு மேற்பட்டவா்கள், மருத்துவரிடம் சான்று பெற்று தடுப்பூசி மையங்களில் சமா்ப்பித்தால் மட்டுமே முன்னெச்சரிக்கைத் தவணை தடுப்பூசி செலுத்தப்படும் என்ற தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன. அந்தத் தகவல்களில் உண்மையில்லை. அவ்வாறு எந்த உத்தரவையும் மத்திய அரசு பிறப்பிக்கவில்லை.

அதேசமயம், முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ள விரும்புவோா், தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்கு முன் தங்கள் மருத்துவரின் ஆலோசனையைப் பெறலாம்.

தோ்தல் நடைபெறும் மாநிலங்களில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படும் காவல் துறை மற்றும் ராணுவ வீரா்கள், முன்களப் பணியாளா்களாகக் கருதப்படுவா். இதுதொடா்பாக, மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் கடிதம் எழுதப்பட்டுள்ளது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com