"பாதுகாப்புப் படை குற்றமிழைக்கவில்லை': ஹைதர்போரா என்கவுன்ட்டர் விவகாரம் குறித்து சிறப்பு புலனாய்வுக் குழு

கடந்த மாதம் ஜம்மு-காஷ்மீரின் ஹைதர்போரா பகுதியில் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் அப்பாவிகள் கொல்லப்பட்டதாகக் குற்றஞ்சாட்டப்படும் நிலையில்,

கடந்த மாதம் ஜம்மு-காஷ்மீரின் ஹைதர்போரா பகுதியில் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் அப்பாவிகள் கொல்லப்பட்டதாகக் குற்றஞ்சாட்டப்படும் நிலையில், அந்த சம்பவத்தில் பாதுகாப்புப் படையினர் குற்றமிழைக்கவில்லை என்று காவல் துறையின் சிறப்புப் புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) தெரிவித்துள்ளது.
 கடந்த நவ.15-ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் ஹைதர்போரா பகுதியில் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பாகிஸ்தான் பயங்கரவாதி உள்பட 4 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து பயங்கரவாதியுடன் உயிரிழந்த 3 பேருக்கும் பயங்கரவாதத் தொடர்புள்ளது என்று போலீஸார் தெரிவித்திருந்தனர்.
 எனினும் அம்மூவரும் அப்பாவிகள் என்று அவர்களின் குடும்பத்தினர் தெரிவித்தனர். இந்த சம்பவத்தில் பாதுகாப்புப் படையினர் குற்றம் புரிந்துள்ளதாகவும் அவர்கள் குற்றஞ்சாட்டினர். இதையடுத்து, துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த சிறப்புப் புலனாய்வுக் குழுவை (எஸ்ஐடி) காவல்துறை அமைத்தது.
 இந்நிலையில், துப்பாக்கிச்சூடு தொடர்பான விசாரணை குறித்து எஸ்ஐடியின் தலைவரும் காவல் துறை டிஐஜியுமான சுஜித் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
 ஹைதர்போரா சம்பவத்தில் உயிரிழந்த முதாசிர் குல்லின் சடலம் பாகிஸ்தான் பயங்கரவாதி பதுங்கியிருந்த கட்டடத்தில் கண்டெடுக்கப்பட்டது. அவரை அந்தப் பாகிஸ்தான் பயங்கரவாதிதான் கொலை செய்தார். அந்தக் கட்டடத்தில் பாதுகாப்புப் படையினர் சோதனை நடத்தியபோது, அவர்கள் முதாசிரின் சடலம் இருந்த பகுதிக்குச் செல்லவில்லை.
 அதேவேளையில் துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் உயிரிழந்த முதாசிரின் ஊழியரான அமீர் மக்ரேவுக்கு பாகிஸ்தான் பயங்கரவாதியுடன் நெருங்கிய தொடர்பு இருந்தது. பாதுகாப்புப் படையினரிடம் இருந்து தப்பிக்க அமீர் மக்ரேவையும், துப்பாக்கிச்சூடு நடைபெற்ற கட்டடத்தின் உரிமையாளரான அல்தாஃப் பட்டையும் அந்தப் பயங்கரவாதி கேடயமாகப் பயன்படுத்தினார். அப்போது நிகழ்ந்த துப்பாக்கிச்சூட்டில் அமீர் மக்ரேவும், அல்தாஃப் பட்டும் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் பாதுகாப்புப் படையினர் குற்றமிழைக்கவில்லை.
 இதுதொடர்பான சிசிடிவி பதிவுகள், கைப்பேசி அழைப்புகளின் பதிவுகள் ஆராயப்பட்டு 20-க்கும் மேற்பட்ட சாட்சியங்களிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. அவர்களில் 6 பேரின் சாட்சியம் மாஜிஸ்திரேட் முன்பாக பதிவு செய்யப்பட்டது.
 துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. அந்த சம்பவம் தொடர்பாக வேறு ஏதேனும் ஆதாரங்கள் கிடைத்தால், இதுவரை விசாரணையில் தெரியவந்தவை குறித்து மறுபரிசீலனை செய்யத் தயார் என தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com