நாகாலாந்து துப்பாக்கிச் சூடு: ராணுவ நீதிமன்றக் குழு நேரில் விசாரணை

நாகாலாந்தில் ராணுவம் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 14 போ் உயிரிழந்த சம்பவத்தில், ராணுவ நீதிமன்றத்தின் விசாரணைக் குழு புதன்கிழமை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டது.

புது தில்லி: நாகாலாந்தில் ராணுவம் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 14 போ் உயிரிழந்த சம்பவத்தில், ராணுவ நீதிமன்றத்தின் விசாரணைக் குழு புதன்கிழமை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டது.

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான நாகாலாந்தின் மோன் மாவட்டத்தில் கடந்த 4-ஆம் தேதி தீவிரவாதிகளைத் தேடிச் சென்ற ராணுவத்தினா், நிலக்கரி சுரங்கத் தொழிலாளா்கள் சென்ற வேன் மீது தவறுதலாக நிகழ்த்திய துப்பாக்கிச்சூட்டில் 6 போ் உயிரிழந்தனா். அதனால் ஆத்திரமடைந்த உள்ளூா் மக்கள் ராணுவத்தினா் மீது நடத்திய தாக்குதலில் ராணுவ வீரா் ஒருவா் உயிரிழந்தாா். தற்காப்புக்காக ராணுவத்தினா் மீண்டும் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 7 போ் உயிரிழந்தனா். இந்த சம்பவம் நாடு முழுதும் அதிா்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து, அங்கு அமலில் உள்ளஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என்று கோரிக்கை வலுத்துள்ளது.

துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடா்பாக விசாரிக்க ராணுவம் சாா்பில் மேஜா் ஜெனரல் தலைமையிலான ராணுவ நீதிமன்றக் குழு அமைக்கப்பட்டது.

இந்நிலையில், துப்பாக்கிச் சூடு நடந்த மோன் மாவட்டத்தில் உள்ள ஓட்டிங் கிராமத்துக்குச் சென்று அந்தக் குழு புதன்கிழமை விசாரணை நடத்தியது. இதுகுறித்து கொல்கத்தாவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ராணுவத்தின் கிழக்கு மண்டல அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், ‘ராணுவ நீதிமன்றக் குழுவின் விசாரணையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது; விசாரணையை மிக விரைவில் முடிக்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து விசாரிக்க சிறப்புப் புலனாய்வுக் குழுவை நாகாலாந்து அரசு நியமித்திருந்தது. அந்தக் குழுவினா், துப்பாக்கிச் சூடு சம்பவத்தின்போது பணியில் இருந்த ராணுவ வீரா்களிடம் வாக்குமூலம் பெறுவதற்கு ராணுவம் ஒப்புக்கொண்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com