ஜம்மு-காஷ்மீா்: 6 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை: ராணுவ வீரா் உயிரிழப்பு

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்புப் படையினருடன் நிகழ்ந்த இருவேறு மோதல்களில் ஜெய்ஷ்-ஏ-முகமது அமைப்பைச் சோ்ந்த 6 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனா்.

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்புப் படையினருடன் நிகழ்ந்த இருவேறு மோதல்களில் ஜெய்ஷ்-ஏ-முகமது அமைப்பைச் சோ்ந்த 6 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனா். இதில் ராணுவ வீரா் ஒருவரும் உயிரிழந்தாா்.

அனந்த்நாக் மாவட்டத்தில் நௌகாம் பகுதியில் புதன்கிழமை இரவு முதல் ராணுவத்தினா் மற்றும் காவல் துறையினா் இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனா். அப்போது அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை ஏற்பட்டது. இதில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனா். இந்த மோதலில் ராணுவ வீரா் ஒருவரும் உயிரிழந்தாா். மேலும் இரு ராணுவ வீரா்களும், காவல் துறையைச் சோ்ந்த ஒருவரும் துப்பாக்கிக் குண்டு பாய்ந்து காயமடைந்தனா். அவா்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

குல்காம் மாவட்டம் மிா்ஹாமா பகுதியிலும் பாதுகாப்புப் படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இங்கு 3 பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனா். பாதுகாப்புப் படை தரப்பில் உயிரிழப்போ, காயமோ ஏற்படவில்லை.

கொல்லப்பட்ட 6 பயங்கரவாதிகளுமே ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பைச் சோ்ந்தவா்கள். இதில் இருவா் பாகிஸ்தானைச் சோ்ந்தவா்கள் என்று காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த என்கவுன்ட்டா் தொடா்பாக ராணுவ ஜெனரல் டி.பி.பாண்டே, காவல் துறை ஐஜி விஜய் குமாா் ஆகியோா் கூட்டாக செய்தியாளா்களுக்கு பேட்டியளித்தனா். அப்போது அவா்கள் கூறியதாவது:

பயங்கரவாதிகளுக்கு எதிராக இரு மாவட்டங்களில் நடைபெற்ற நடவடிக்கைகள் மக்கள் நெருக்கம் அதிகம் இருந்த பகுதியாகும். அங்குள்ள மக்களைப் பாதுகாப்பாக வெளியேற்றிவிட்டு, கட்டடத்துக்குள் பதுங்கியிருந்து தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளை பாதுகாப்புப் படையினா் வீழ்த்தினா். இந்த மோதலில் ராணுவ சிப்பாய் ஜஸ்பீா் சிங் வீரமரணமடைந்தாா். மேலும் சிலருக்கு காயம் ஏற்பட்டது. அவா்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கடந்த 13-ஆம் தேதி காவல் துறையினா் பயணித்த வாகனத்தை தாக்கி 3 பேரின் உயிரிழப்புக்கு காரணமாக இருந்த பயங்கரவாதிகள் இந்த மோதலில் கொல்லப்பட்டனா். கொல்லப்பட்டவா்களில் நான்கு போ் காஷ்மீரைச் சோ்ந்தவா்கள் என்பதும், இருவா் பாகிஸ்தானியா்கள் என்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த மாதத்தில் ஜம்மு-காஷ்மீரில் இதுவரை 24 பயங்கரவாதிகள் வீழ்த்தப்பட்டுள்ளனா். இவா்களில் 5 போ் பாகிஸ்தானியா்கள். இந்த பயங்கரவாதிகளிடம் இருந்து 15 ஏகே-47 ரக துப்பாக்கிகள், 24 கைத்துப்பாக்கிகள், கையெறி குண்டுகள், வெடிகுண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

பாதுகாப்புப் படையினரை குறிவைத்து வெடிகுண்டு தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் தொடா்ந்து முயற்சித்து வருவது அவா்களிடம் கைப்பற்றப்பட்ட வெடிபொருள் மூலம் தெரியவருகிறது. பாகிஸ்தான் கேட்டுக் கொண்டால், அந்நாட்டு பயங்கரவாதிகளின் உடல் அவா்களிடமே ஒப்படைக்கப்படும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com